கடந்த வாரத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் பிண்ணனிப் பாடகர் அஜீஷ் இசையமைத்துப் பாடியுள்ள ‘ரெய்ன்-காலேஜ்-லவ்’ என்கிற தமிழ்ப் பாடல்களின் ஆல்பம் – ஆமாங்க தமிழ்ப் பாட்டுக்கள் தான். பேரு மட்டும் கொஞ்சம் ஸ்டைலா இருக்கட்டுமேன்னு இங்கிலீஷ்லேயே வெச்சுட்டாங்க – வெளியிடப்பட்டது.
இந்த ஆல்பத்தில் மொத்தம் 5 பாடல்கள். மழை, காதல் மற்றும் கல்லூரி பற்றி தனித்தனியான பாடல்கள் மூன்று. பின் இம்மூன்றையும் இணைக்கும் விதமான பாடல்கள் இரண்டு. இசையமைத்திருப்பதும் அஜீஷே. பாடல்களை எழுதியவர் அவரது நண்பர் ராகவ்.
வெளியிட்டவர் பிரியாணி கிண்டிக்கொண்டிருக்கும் வெங்கட் பிரபு. அவர் ஹாலிவுட்டில் இருப்பது போல் இங்கு ஆல்பங்களுக்கு வரவேற்பு இல்லை என்று மனம் வருந்தினார். அங்கு படத்துக்கு பாடல்கள் வேண்டுமென்றால் கூட ஆல்பங்களிலிருந்து வாங்கித் தான் போடுவார்கள். இங்கு ஏன் அப்படி வரவில்லை என்று ஆதங்கப்பட்டார். அப்படியில்லாமல் அஜீஷ்ஷின் இந்த ஆல்பத்தை எல்லோரும் காசு கொடுத்து வாங்கிக் கேட்கவேண்டும் என்றார்.
ஆல்பம் பற்றி அஜீஷ் கூறுகையில் இசைக்குடும்பப் பிண்ணனியில்லாவிட்டாலும் தான் இந்த உயரத்துக்கு வந்திருப்பது பெருமை என்றார். பள்ளி கல்லூரிகளில் மேடைகளில் பாடியது முதல், சூப்பர் கிங்ஸில்.. ஓ.. சாரி.. சூப்பர் சிங்கரில் முதல் பரிசு வாங்கியது வரையிலும் அதன் பின்னர் வெங்கட் பிரபுவின் கோவா படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததையும் பற்றி பெருமையாகக் கூறினார்.
இவர் அடுத்து முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும் ஒரு ஆல்பம் தயாரிக்க இருக்கிறாராம். அந்த ஆல்பத்துக்கு பேரு தமிழ்லேயே வைங்க பாஸ்.