டாஸ்மார்க் குடிகாரர்கள் அக்மார்க் நல்லவர்களாகி விட்ட இந்தக் காலத்தில், சிகரெட், குட்கா, பான்பராக்கை பாய்ந்து பாய்ந்து ஒழிக்கும், வரிவிதிக்கும் அம்மாவுக்குக் கூட டாஸ்மார்க் மேல் அபரிதிமான பாசம் வந்து (அப்புறம் சும்மாவா ஆயிரக்கணக்கான கோடி லாபம் வருதே!
எவன் செத்தா எனக்கென்ன? ) டாஸ்மார்க்குக்கு ஏசி பார் அறிமுகப்படுத்துகிறார்.
போனவருடம் வந்து மதுபானக் கடை என்கிற வித்தியாசமான படம் முழுக்க முழுக்க டாஸ்மாக் கடையிலேயே எடுக்கப்பட்ட படம். குடியின் அலங்கோலத்தை அப்படியே யதார்த்தமாக முன்வைத்த படம் அது. படத்தில் கதை கூட கிடையாது. டாஸ்மாக்கில் ஓரிரு நாட்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கோர்வையாக, யதார்த்தமாக நடப்பதை அப்படியே காட்டும் படம் அது. எனவே எதிர்பார்த்தபடியே அது ஓடவில்லை.
இப்போது இயக்குனர் ஹரியின் உதவியாளரான கே.ஜி.வீரமணி இயக்கும் படமான ‘திறப்பு விழா’ மது ஒழிப்பை அடிப்படையாகக் கொண்ட கதையுள்ள படம். மதுவினால் தன் குடும்பத்தையே இழந்த ஒருவன் அதே டாஸ்மாக்கிலேயே வேலைக்குச் சேர்ந்து அந்தக் கடையையே எப்படி மூடும்படி செய்கிறான் என்று போகிறது இந்தக் கதை. படம் கமர்ஷியல் நோக்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் சமூக நோக்கமே பிரதானமாக இருக்கும் என்கிறார் அறிமுக இயக்குனர் வீரமணி.
பாக்கலாம் கே.ஜி. எத்தனை ரவுண்டுகள் தாக்குப்பிடிப்பார் என்று ?