ஜெமினி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத்தின் பேரனான தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத் கடந்த 8ஆம் தேதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இவர் ஆனந்த ரீஜென்ஸி என்கிற பெயரில் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் புதுச்சேரி-ஆந்திர எல்லையருகே இருந்த அவரது ஹோட்டலை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார். அவரது வழக்கமான ஆடம்பர அறையில் தங்கியிருந்த அவர் காலை சுமார் 3 மணிக்கே எழுந்து வாக்கிங் சென்றுள்ளார். சென்றவர் ஹோட்டலிலிருந்து மழைக்காக குடையொன்றை வாங்கிச் சென்றுள்ளார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை. ஹோட்டல் நிர்வாகத்தினர் பல மணி நேரம் கழித்து அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவருடைய போன் அணைத்து வைக்கப் பட்டிருந்திருக்கிறது.
மாலை வரை காத்திருந்துவிட்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர் நிர்வாகத்தினர். காவல்துறையினர் வந்து விசாரித்ததில் அவர் காலை அமலாபுரம் வழியே அங்கிருந்த ஒரு சுங்கச் சாவடியைத் தாண்டி நடந்து சென்றுள்ளது அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. பின்பு 4 மணியளவில் குமரகிரி என்கிற பகுதியருகே நடந்து சென்றதை பார்த்திருக்கிறார்கள். பின்னர் முரமுல்லா என்கிற இடத்தில் உள்ள ஒரு பாலத்தினருகே அமர்ந்து அவர் தனது ஷூவை கழற்றிக் கொண்டிருந்ததை சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன் பின் அவர் சென்ற இடம் தெரியவில்லை.
போலீஸ் அவரைத் தேடிவருகிறார்கள். இவர் கடத்தப்பட்டாரா ? இல்லை தற்கொலை, கொலை போன்று ஏதாவதா ? போலீஸ் குழம்பித் தவிக்கிறதாம். அவர் காணாமல் போனதன் மர்மம் இன்னும் விளங்கவில்லை. செல்போனை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முயல்கிறது போலீஸ் தற்போது.