மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து தில்லு முல்லு படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்போது தனியாக மீண்டும் இசையமைக்க இருக்கிறார். பாலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் ஜெய்பாலா (பாலா..ஒருவேளை இவரே புரொட்யூசரோ..). இவருடைய நாயகி மோனிகா. படத்தின் பெயர் சுவடுகள்.
சுவடுகளுக்காக எம்.எஸ்.வி அறுபது எழுபதுகளில் பின்பற்றப்பட்டு வந்த கஷ்டமான லைவ் ரெக்கார்டிங் முறையில் பாடல்களை உருவாக்கி வருகிறாராம். தற்போது ஒரு ஸ்டூடியோவில் ஒரு பாட்டில் ஒவ்வொரு பிட்டையும் உரியவர்கள் அவர்களுக்கு கிடைத்த நேரம் போல வந்து இசையமைத்துவிட்டுப் போக கம்ப்யூட்டரில் அவ்வளவையும் சேமித்து வைத்து பின்னர் கோர்த்து முழுப் பாடலாக்கி விடுவார்கள் எளிதாக.
லைவ் ரெக்கார்டிங் முறை அப்படிப்பட்டதல்ல. எல்லா இசைக் கலைஞர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடல் இசையை வாசித்து அதை அப்படியே ரெக்கார்டிங் செய்வது தான் லைவ் ரெக்கார்டிங் முறை. இதற்காக ஒரே நேரத்தில் 50 இசைக் கலைஞர்களை வைத்து ஒரே டேக்கில் ஒரு கிராமியப் பாடலை ரெக்கார்ட் செய்தாராம் எம்.எஸ்.வி.
காதல் படமான இது தென்காசிப் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாகும். இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை கே.ஆர்.விஜயாவும் நடிக்க இருக்கிறார் என்பது இன்னொரு ஹைலைட்.