இயக்குனர் பூபதி பாண்டியன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘பட்டத்து யானை’ விஷாலும், சந்தானமும்
இந்த யானையில் சேர்ந்து காமெடிச் சவாரி செய்ய இருக்கிறார்கள்.
ஓகே.ஓகேயிலிருந்து தீயா.வே.செ.குமாரு வரை சந்தானத்தின் வெற்றிக்கொடி பறக்க ஆரம்பித்திருக்கும் வேளையில்
விஷாலுடன் அவர் இணையும் படத்திலும் சந்தானத்தையே மையமாக வைத்து கதை இருக்குமா ? பூபதியிடம்
கேட்டபோது
விஷால் ஹீரோவா இல்லை சந்தானமா ?
விஷால் தான் கதைக்கு முக்கியமான அடித்தளம். ஆனால் கதை காமெடிக்கு நிறைய ஸ்கோப் இருக்கிற கதை.
அதனால கதை சந்தானத்தையே சுற்றிப் போவது போலவே இருக்கும். என்னுடைய முந்தைய படங்களில்
காமெடிக்கென்று தனியாக ட்ராக் வைத்துக் கொண்டதில்லை. அது கதைப் போக்கிலேயே இருக்கும். ஹீரோ,
வில்லன்களை வைத்தே காமெடியும் செய்துவிடுவேன்.
இது கொஞ்சம் அழுத்தமான கதை. அதை அப்படியே சொல்லாமல் ஒரு காமெடி பாணி கலந்து சொல்ல விரும்பியதால்
அதை சந்தானத்தை வைத்து வெற்றிகரமாகச் செய்யலாம் என்று நினைக்கிறேன். கையில் 20 படங்கள்
வைத்திருந்தாலும் நான் கதை சொன்னவுடன் தேதி கொடுத்து முழுதும் நடிக்கவும் ஒப்புக் கொண்டார்.
அப்படிப் படத்தோட கதை என்ன?
விஷால் ஒரு ஹோட்டலோட ஓனர். அவர்கிட்டே வேலை செய்யும் தொழிலாளிதான் சந்தானம். அங்கே நடக்கிற
விஷயங்களை ஆக்ஷன் கலந்த காமெடியில் சொல்லியிருக்கிறேன். சிரித்துக் கொண்டே ஒரு ஆக்ஷன் படம் பார்த்தால்
எப்படி இருக்கும். அதுமாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆக்ஷனுக்கும் காதலுக்கும் மத்தியில் லேசாய்
ஒரு காதலும் அவ்வப்போது ஒளிந்துகொண்டு வரும். எனவே இது எனது வழக்கமான ஆக்ஷன் படவரிசைப்
படங்களில் ஒன்றுதான். அத்தோடு காமெடியும் சேர்ந்திருக்கும் அவ்வளவுதான்.
விஷாலுக்கு இப்படம் ஒரு ப்ரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாமா ?
கண்டிப்பா. படத்தோட ஸ்கிரிப்ட் எழுதும் போது விஷால் என் மனசில் இல்லை. கதை தான் இருந்தது. எழுதி
முடிச்சதும் இதுக்கு விஷால் நடித்தால் சரியா இருக்கும்னு பட்டது. அவரிடம் போய்க் கதை சொன்னேன். கேட்டுட்டு
‘இதை மாத்தாம அப்படியே எடுங்க.. நல்லா வரும்னு’ நம்பிக்கையா சொன்னார்.
படத்தோட பேரு முதல்ல ‘அடேங்கப்பா ஆறுபேர்’ன்னு தான் தலைப்பு வைத்திருந்தேன். விஷால் அவன் இவன்ல
காமெடி வித்தியாசமா பண்ணியிருந்தார். இப்படி படத்துக்குப் படம் வித்தியாசமா தன்னைக் காட்டிக்கிறதுல விக்ரம்,
சூர்யாவைப் போல இவரும் முயற்சி செய்யறவர் தான்.
படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா பற்றி..
படத்தின் ஹீரோயின் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் அவரது நடிப்பின் மேல் எனக்குப் பெரிய
நம்பிக்கை இல்லை. பின்னர் அவர் நடிப்பைப் பார்த்துவிட்டு சில கனமான இடங்களில் அவர் நல்லா பெர்பார்ம்
பண்ணுகிற மாதிரி வசனங்களை மாற்றிக் கொடுத்திருக்கிறேன். மே மாத வெயிலில் திருச்சியில் 108 டிகிர வெயிலில்
ஒரு மாதம் ஷூட்டிங் நடந்தது. அசராமல் நடித்துக் கொடுத்தார் ஐஸ்வர்யா.
உதாரணமாக ஒரு காட்சியில் ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் நடுவே கண்ணில் நீர் வர அவர் பேசுவது
போல ஒரு காட்சி. கிளிசரின் கூட போட்டுக் கொள்ளாமல் சரளமாக நடித்துக் கொடுத்தார் அவர். நடிப்பில்
பிரகாசமாய் வர வாய்ப்பு நிறைய இருக்கிறது.