அமலா.பால்.விஜய்.. ஸாரி அ.ல.விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் நடிக்கும் தலைவா படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டு ஒரு மாதமாகி விட்டது. பாடல்களுக்கு வழக்கமாக விமர்சனம் எழுதும் இசையமைப்பாளர் பிரபாகரய்யா அவரே ஒரு படத்துக்கு (ஹலோதமிழ்சினிமா முத்தண்ணாவின் ஸ்நேகாவின் காதலர்கள்) இசையமைப்பதில் பிஸியாகிவிட்டார். சும்மா ஒரு பேச்சுக்கு ஆபிஸின் டீ பாய் மருதுபாண்டியை கூப்பிட்டு பாட்டு பற்றி கேட்டதுதான் தப்பாகிப் போனது.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவர் எல்லா மொழி ஆல்பங்களையும் தவறாது கேட்கக்கூடியவர் என்பது அவர் அங்கங்கு உருவியிருக்கும் பாடல்களைப் பார்த்தால் சென்னை சாக்கடையில் கலந்து மேலாக ஓடும் கார்ப்பரேஷன் குடிநீர் போல தெளிவாகத் தெரியும்.
பாடல்களை எழுதியிருப்பவர் நா.முத்துக்குமார். வரிகள் பொதுவாகப் பரவாயில்லை. தலைவா பாடல் தான் மோசம். ஒரே ஜால்ரா சத்தம் கேட்கிறது. விஜய் தன்னை அடுத்த ரஜினியாக உள்ளுக்குள் கருதியிருப்பது பாட்டில் வெளியாகிவிட்டது.
தமிழ் பசங்க. பென்னி டாயல். ஷூசே. சைக்கோ யூனிட்.
மைக்கேல் ஜாக்சனின் ஹிஸ்டரி ஆல்பத்தின் முதல் மற்றும் மூன்றாவது பாடல்களைக் கலந்து கட்டி ஓப்பனிங் செய்யும் பாடல் தான் தமிழ்ப் பசங்க. சரணத்தில் கொஞ்சம் ட்ராக்கை கேட்கிற மாதிரி போட்டிருக்கிறார். சைக்கோ யூனிட் என்று பாடியவர்கள் லிஸ்டில் போட்டிருக்கிறார்கள். அப்படின்னா என்னங்கோ?
யார் இந்த சாலை ஓரம். ஜீ.வி.பிரகாஷ். சைந்தவி.
ஜீ.வி.பிரகாஷ் தனது காதல் மனைவி சைந்தவிக்கு திருமணத்துக்கு முன்பு காதலுடன் மெட்டமைத்த பாடல் போலவே இருக்கிறது. இரண்டு பேரும் இழைந்து பாடியிருக்கிறார்கள். நல்ல மெலடி. ஹிட்டாகும் டைப்.
எக்ஸ்டஸி ஆஃப் டேன்ஸ். தீம் இசை.
யார் இந்த சாலை ஓரம் தான் படத்தின் தீம் இசை. குரல்கள் இல்லாமல் அந்தப் பாட்டை கேட்டால் அது இந்த தீம் மியூசிக்.
தலைவா.. தலைவா. ஹரிச்சரண்.
ரஜினியின் பாதையில் தலைவாவாக விஜய்யை கருதி எழுதப்பட்டிருக்கும் புகழ்ப் பாடல். தளபதி தன் ரசிகர்களுக்கு என்ன அரசியல் பாதை காட்டினார் என்று எந்த ரசிகர்களுக்காவது தெளிவாகத் தெரியுமா ? மகளிர் மட்டும் படத்தில் ஒரு டைட்டில் பாடல் வரும். அதைப் போலவே இப்பாடல் இருப்பது இன்னும் விசேஷம்.
வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா. விஜய், சந்தானம்.
விஜய், சந்தானம் இருவரும் பாங்கு போட்டுவிட்டு சாங்கு பாடுவது போல வரும் குத்துப் பாடல். நல்ல ஹிட்டாகும் இந்தப் பாடல். விஜய்யின் சந்தானத்தின் பேச்சுக்கள், குரல்கள் நன்றாகவே இருக்கின்றன. விஜய் பாடுவதில் நன்றாகவே தேறிவிட்டார்.
சொல்.. சொல் அன்பே. விஜய் பிரகாஷ், மேகா.
பப்களில் போட்டுவிட்டு ஆடுவதற்கென்றே போடப்பட்ட பாட்டுபோல இருக்கிறது. ஹிப் ஹாப் இசை கலந்து போட்டிருக்கிறார் ஜீ.வி.பி. விஜய் பிரகாஷின் குரல் பரவாயில்லை. பாட்டு தேறிவிடும். மொத்தத்தில் தளபதி விஜய்க்கு ஏற்றமாதிரி வரிகள் போடப்பட்டு உள்ள பாடல்கள். தேறுமா தேறாதா? தளபதி ரசிகர்களுக்கே வெளிச்சம்.
யார் இந்த சாலை ஓரம் எனக்குப் பிடித்த பாடல்.
-மருதுபாண்டி.