புகழ் பெற்ற பாடலாசிரியரும், நடிகருமான வாலி நேற்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82. தமிழ்ச் சினிமாவில் இதுவரை சுமார் பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார் வாலி.
1931ல் டி.எஸ்.ரெங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலி தனது முப்பதுகளில் சென்னை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்தபடியே சினிமாவுக்கு பாடலாசிரியராக முயன்றுள்ளார். ஆனால் வாய்ப்புக்கள் வரவில்லை. ஒருமுறை வறுமையின் காரணமாக தற்கொலைக்கு அவர் முயன்ற போது அவரைக் காப்பாற்றியதும் ஒரு பாடல். அது அவரது நண்பர் பி.பி.சீனிவாஸ் பாடிய ‘மயக்கமா கலக்கமா’. அப்பாடலைக் கேட்டு மனம் மாறி மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தார்.
1963ல் இதயத்தில் நீ படத்தில் தான் அவருக்கு முதன் முதலாகப் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டு வெளியான கற்பகம் படத்தில் எழுதிய பாடல்கள் தான் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன. ஆரம்பத்தில் எதுகை மோனைக்கு சரியான வார்த்தைகளைப் போட்டு பாட்டெழுதி நல்ல பாடல்களைத் தந்த வாலி பின்னாளில் மெட்டுக்கு ஏற்ப வரிகளை போட்டு நிரப்புவதில் சமர்த்தரானார்.
பின்பு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியர்களில் நிறைய வருடங்கள் நீடித்தார். வைரமுத்துவின் வரிகளில் உள்ள இலக்கிய நயம் இவருடைய பாடல்களில் அவ்வளவு இல்லை தான். மாறாக ஜனரஞ்சகமாக எளிய சாதாரணமாகப் பேசும் வரிகளை சினிமாப் பாடல்களில் புகுத்தினார். அதனால் அவை எல்லோரையும் கவர்ந்தன. ஆனால் பின்பு அவையே இலக்கணமாகி இப்போது கவித்துவமான வரிகளை சினிமாவில் தேடிப்பிடித்து தான் எடுக்கவேண்டும் என்கிற அளவு மாறிப்போனது. அதே போல பாடல் வரிகளில் ஏதாவது புரியாத வார்த்தைக் கோர்வைகளை ரசனைக்காக சேர்ப்பதும் இவரது பாணி. முக்காலா முக்காபலா முதல் தற்போது மரியானில் இவர் எழுதிய “சோனாப்பரியா’ வரை இதற்கு எடுத்துக் காட்டுகள் நிறைய சொல்லலாம். இப்படி ஜனரஜ்சகமாகவே பெரும்பாலும் எழுதினாலும் கவித்துவமிக்க பாடல்களையும் இவர் நிறைய எழுதியிருக்கிறார்.
வாலிக்கு ஒரு ஓவியரும் கூட. அவரது ஓவியங்களைப் பார்த்து அவரது நண்பர்கள் அவருக்கு இட்ட பெயரே வாலியாம். இவர் நடித்த பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரைகள் படம் மிகவும் பிரபலமானது. ஹேராம், சத்யா, பார்த்தாலே பரவசம் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் பாடும் சோகப் பாடலை எழுதிய போது கமல் பலமுறை பாடல் வரிகள் பிடிக்கவில்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். ஆறுமுறை எழுதிவிட்டு பின்பு கடைசியாக எழுதிக் கொடுத்துவிட்டு என்னால முடிஞ்ச அளவு நல்லா எழுதியிருக்கேன். இதுக்கு மேல எனக்கு முடியவில்லை என்று கொடுத்துவிட்டாராம் வாலி. ‘உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ என்கிற அந்தப் பாடல் பெரும் ஹிட்டானதோடு தேசிய விருதும் பெற்றது.
வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரிவு வந்தபோது வாலி நிறைய பாடல் வாயப்புக்களை இளையராஜாவிடம் பெற்றார். அதன் விளைவாக நிறைய பாடல்களை எழுதியதால் வெறும் வரிகளை நிரப்புவதாகவே அவை பெரும்பாலும் அமைந்து பாடல்களின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டன. தமிழ்ச் சினிமாவின் பாடல் வரிகளை ஜனரஞ்சகப் படுத்தியதில் வாலிக்கு மிக முக்கியப் பங்குண்டு.
ஆனால் பட்டுக் கோட்டை, கண்ணதாசன் போன்றவர்கள் செய்த தத்துவ விசாரங்கள் மற்றும் சமூகக் கருத்துக்களைச் சொல்லும் எண்ணம் இவருக்கு இருந்ததில்லை. இரண்டு தி.மு.க கட்சிகளுடனும், பொதுவாக எல்லா பிரமுகர்களுடனும் கருத்து வித்தியாசம் வைத்துக் கொள்ளாமல் சமரசமாகவே வாழ்ந்திருக்கிறார். இக்காலச் சமூகத்தினர் அரசியல் விழிப்புணர்வு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கவைத்ததில் இவருக்கும் கூட பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலி நேற்று மாலை மூச்சுத் திணறல் அதிகமாகி மரணமடைந்தார். தனி மனிதனாக இருந்தாலும் பாடல் என்னும் கலை வடிவத்தால் தமிழ்ச் சினிமாவையும், தமிழ்ச் சமூகத்தையும் ஒரு 50 ஆண்டுகள் தனது பாணியால் கட்டிப் போட்ட வாலி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவரே.
அவருடைய மரணம் தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு இழப்பே என்றாலும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியில் தமிழ்ச்சினிமாவுக்கு தன் பங்கையளித்த நல்லதொரு கலைஞன் தன் தனிமனித வாழ்வில் நிறைவாகவே சாதித்துவிட்டுச் சென்றிருக்கிறான் என்ற நிறைவில் அவரை அன்போடு வழியனுப்புகிறோம்.
சென்று வாருங்கள் வாலி.. உன் இடம் இப்போ காலி..