nova-zembla-movie-review

கண்டுபிடிப்புகளின் யுகமாக வரலாறு குறிப்பிடும் (Age of Exploration or age of Discovery)இருநூற்றாண்டுகளில் (1450 – 1650) நிகழ்ந்த கடல் பயணங்கள் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்த வரலாற்றுக் கதைகள் நாம் அறிந்ததே.

சாகசங்கள் மீது குறிப்பாக, கடல் பயணங்கள் மீதும், வரலாற்றைப் புரட்டிப் போட்ட நிகழ்வுகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்தப்படம் உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகக்கூடும். 2011ல் வெளிவந்த நோவா ஜெம்ப்லா (NOVA ZEMBLA) ஒரு ஹாலிவுட்

படமாக இல்லாத காரணத்தினாலேயே அது கவனம் பெறவில்லை என்று தோன்றுகிறது. நெதர்லாந்தில் டச்சு மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படம் பதினாறாம் நூற்றாண்டில் கடல்வழி காணப் புறப்பட்ட ஒரு சாகசத்தைப் பேசுகிறது.

டச்சு மாலுமி வில்லியம் பாரன்ட்ஸ் (Willem Barents), ஜேக்கப் வேன் ஹீம்ஸ்கெர்க் (Jacob Van Heemskerk) இருவரும் வடதுருவத்தின் வழியாக சீனாவுக்கு கடல்வழி காண்பதற்காக மேற்கொண்ட மூன்று பயணங்களில் மூன்றாவது பயணத்தின்போது எழுதப்பட்ட நாட்குறிப்புகளின் அடிப்படையிலான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப் பட்டபடம் நோவா ஜம்ப்லா. ஏற்கனவே இரண்டுமுறை முற்றுப் பெறாத பயணங்கள் செய்திருந்த வில்லியம் மூன்றாவது முறையாகப் பயணத்தைத் திட்டமிடுகிறார். ஸ்பெயினுடனான போருக்குப்பின் திவாலான நிலையில் ஹாலந்து இருந்தபோது தூரகிழக்கு நாடுகளுடன் வர்த்தகம் செய்து பொருளீட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் அது இருந்தது. அதற்கான முகாந்திரங்களை யோசித்தபோது, கடல்வழி அதற்கான முட்டுக்கட்டையாக இருப்பது தெரிகிறது. ஆம்ஸ்டர்டாம் நகர கவுன்சில் இந்தப் பயணத்தை ஊக்குவிக்கிறது. அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பயணமும் அதன் பதிவுகளுமே உண்மையில் வரலாற்றுச் சம்பவங்கள். இவற்றோடு ஒரு எளிமையான காதல் கதையையும் இணைத்திருக்கிறார்கள்.

நகர கவுன்சிலின் முக்கியஸ்தர்களில் ஒருவருக்கு தேவதை போன்ற மகள். அவள் காதலிக்கும் இளைஞன் கீரிட் டி வேர் (Gerrit de Veer), படித்தவன். நட்சத்திரங்களையும் கோள்களையும் பற்றிக் கற்றவன். எழுத்தாளனாகும் எண்ணம் உள்ளவன். எல்லாவற்றையும்விட எப்படியாவது காதலியை அடைந்துவிடத் துடிப்பவன். மிகச் சாதாரணமான அவனுக்கு மகளைக் கொடுக்க கவுன்சிலர் விரும்பாததில் என்ன ஆச்சரியம். அப்போது அந்நகரில் திட்டமிடப்படும் கடல் பயணத்தில் இணைந்து கொள்வதன் மூலம் செல்வந்தனாகித் திரும்பி காதலியைக் கைப்பிடிக்கலாம் என்று எண்ணமிடுகிறான். கேப்டனிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். வழி தேடிச்செல்லும் கடல் பயணத்தில் எழுத்தாளனுக்கு என்ன வேலை? என்கிறான் கேப்டன். நான் உங்கள் பயணத்தை எழுதி ஆவணப்படுத்துவதன் மூலம் உங்களைப் புகழடைச் செய்வேன் என்கிறான். வாஸ்கோடகாமாவும் கொலப்பஸும் அப்படி ஆவணப்படுத்தப்பட்டதால்தான் புகழடைந்தார்கள் என்பதை கேப்டன் புரிந்து கொள்கிறான்.

1596 மே 16ஆம் நாள் ஆம்ஸ்டர்டாம் நகரத்திலிருந்து அவர்களின் பயணம் தொடங்குகிறது. மூன்றுமாதப் பயணத்திற்குப் பின் 1596 ஆகஸ்டு 16ஆம்நாள் ஒரு நிலப்பரப்பை அடைகிறார்கள். வடதுருவத்திலிருக்கும் ‘நோவா ஜம்ப்லா’ எனும் தீவுதான் அது என அறிவிக்கிறார் கேப்டன். உற்சாகத்தில் துள்ளுகிறார்கள் மாலுமிகள். நோவா ஜம்ப்லாவின் ஓரமாக பனிப் பாறைகளின் ஊடாக பயணப்பட்டால் வெகுசீக்கிரம் சைனாவை/ இந்தியாவை அடைந்துவிட முடியும் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் சைனா அவர்கள் கற்பனை செய்வது மாதிரியான அருகாமையில் இல்லை என்பதையும், நோவா ஜம்ப்லா தீவு ஒரு கொடுங்கனவாக மாறப்போகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தீவைக் கடக்குமுன்னமே கடல் உறையத் தொடங்கி பெரும் பனிப்பாறைகளுக்கிடையே கப்பல் சிக்குண்டு பயணம் ஸ்தம்பிக்கிறது. மரத்தால் தற்காலிகமாகத் தங்குவதற்காக தீவில் கட்டிய வீட்டில் மாதக்கணக்கில் தங்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இருளும் இரத்தத்தை உறைய வைக்கும் குளிரும் அவர்களை வீட்டுக்குள் முடக்குகிறது. பசியும் பிணியும் மனச்சோர்வும் பீடிக்கத் தொடங்கும் வேளையில் துருவக் கரடியொன்றோடு போராடி அதைக் கொல்ல வேண்டிய இம்சையும் நேர்கிறது.

ஏறத்தாழ பத்து மாதங்களுக்குப் பின் 1597 ஜூன் 14ஆம் நாள் வடதுருவத்தின் இருளை சூரியன் முத்தமிட வெளிச்சக்கீற்றுகள் நம்பிக்கையையும் புதிய ஐயங்களையும் கொண்டுவருகின்றன. படுத்தபடுக்கையாகிவிட்ட கேப்டன். கப்பலை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழ, நாயகன் எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும், வரைபடத்தையும் படிக்க முடியும் என்கிறான். கப்பலைச் சீர் செய்யமுடியாத நிலையில் எஞ்சியவர்கள் சிறு திறந்தபடகில் நம்பிக்கையற்ற பயணத்தை வீடுநோக்கி மேற்கொள்கிறார்கள். எழுபது நாட்கள் பயணம் செய்து தீவு ஒன்றை அடைந்தபோது படுக்கையில் இருந்த கேப்டன் இறந்து விடுகிறார். கண்மூடும்முன் நாயகன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு கண்மூடுகிறார். கடிதத்தில் தன் காதலியின் தந்தை எழுதிய வாசகங்கள் ‘ இந்தப் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் மகளிடமிருந்து தூரமாக இருக்கட்டும். முடிந்தால் அவனை ஒரு முழுமனிதனாக மாற்றி அழைத்துவாருங்கள். இல்லையேல் அவனை அங்கிருக்கும் வட்துருவக் கரடிக்குத் தின்னக் கொடுத்துவிடுங்கள்’ என்பதைப் படிக்கிறான். தீவுக்கு அந்தப்புறம் டச்சுக் கப்பலொன்று நங்கூரமிட்டிருப்பதாக நண்பர்கள் கூவுகிறார்கள். கப்பலில் தஞ்சம் கேட்டு 1597 அக்டோபர் 06 ஆம்நாள் வீடுவந்து சேர்கிறார்கள்.

மேற்கத்திய படங்களுக்கே உரித்தான் நேர்த்தியான ஒளிப்பதிவும். இசையும், நடிகர்களும் படத்திற்கு மெருகூட்டுகிறார்கள். அளவான சம்பவங்களோடு டச்சுமொழியின் முதல் முப்பரிமான தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கும் இப்பட்த்தை ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு என்று கூற இயலாவிட்டாலும் அது பதிவுசெய்ய முயலும் வரலாற்றுத் தருணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

-இரா.பிரபாகர் (http://prabahar1964.blogspot.in)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.