திட்டமிட்டபடி கோவையிலும், கொடைக்கானலிலும் 25 நாட்கள் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியது ‘சிநேகாவின் காதலர்கள்’ குழு.
’அழகர்சாமியின் குதிரை’ படநாயகி அத்வைதா [ தற்போதைய பெயர் கீர்த்தி ] தவிர்த்து மற்ற அனைவரையும் புதுமுகங்களாக கொண்டு உருவாகிவரும் படம் ‘சிநேகாவின் காதலர்கள்’. கடந்த ஜூலை 17 அன்று கோவை நேரு கல்லூரியில் துவங்கிய இதன்
முதல்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ம் தேதியன்று கொடைக்கானலில் நிறைவுற்றது.
‘நீங்கள் படப்பிடிப்புக்கு திட்டமிருக்கும் கோவையிலும் கொடைக்கானலிலும் கனத்த மழை பெய்யக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுகிறது. முதல்படம், கொஞ்சம் யோசித்துவிட்டுக் கிளம்புங்கள்’ என்று அன்பின் மிகுதியால் சில நண்பர்கள் எச்சரித்ததையும் மீறியே கடந்த மாதம் 68 பேர் கொண்ட யூனிட்டுடன் கிளம்பினேன். படப்பிடிப்பு நடந்த 25 தினங்களில் நான் மழையால் பாதிக்கப்பட்டது, வெறுமனே இரு அரைதினங்கள் மட்டுமே’ என்கிறார் இயக்குனர் முத்துராமலிங்கன்.
தனது முதல்பட, முதல் ஷெட்யூல் அனுபவம் குறித்து தனது சக மீடியா நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி முத்துராமலிங்கன் அனுப்பி இருக்கும் ஓலை இது;
’அன்பு நண்பர்களே ‘சிநேகாவின் காதலர்கள்’ போன்ற ஒரு சிறுபட்ஜெட் படத்தின் செய்தியை ஆரவாரமாக வெளியிட்டு, சக பத்திரிகையாளனகிய என்னை உற்சாகப்படுத்தியதை என்றென்றும் மறக்கமாட்டேன்.
இதற்கு அடுத்த, எனது முதன்மையான நன்றி, தமிழன் திரைப்பட நிறுவன அதிபர் கலைக்கோட்டுதயம் அவர்களுக்கு. சொன்ன தேதியில் பணத்தை மட்டும் அனுப்பிவிட்டு, படப்பிடிப்பு எங்கு நடக்கிறது? யாரெல்லாம் நடிக்கிறார்கள்?? கதாநாயகி யார்? அவர் கறுப்பா,சிகப்பா?? நாயகன்கள் யார் என்றெல்லாம் எதுவும் தெரிந்துகொள்ளாமல், இப்படியெல்லாம் பெருந்தன்மையாக ஒருவர் நடந்துகொள்ளமுடியுமா என்று என்னைத் திக்குமுக்காட வைத்தவர். ஒவ்வொரு நாளும் முதல்ஷாட் எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்ற நானே வலிந்து அனுப்பிய எனது குறுஞ்செய்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் அவர்.
கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் முடிவான படம் இது. தயாரிப்பாளர் ‘ம் கிளம்புங்க’ என்று சொன்ன மறுநிமிடத்திலிருந்து என் மானசீக ‘சிநேகா’வைத் தேடும் படலத்தில் நான் மூழ்கித்திளைத்த அனுபவம் சொல்லி மாளாதது.நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் சில மாடல்-கோ ஆர்டினேட்டர்கள் மூலம் என் மெயிலில் 200க்கும் மேற்பட்ட வரன்கள் வந்திருந்தன. ‘ஏப்ரல் மேயில ஹீரோயின் கிடைக்கலே போரு போருடா’ என்று ஆன நிலையில் திடீரென ஒரு நண்பர் மூலம் கீர்த்தியின் மாடர்ன் ட்ரெஸ் அணிந்த ஸ்டில்கள் கிடைத்தவுடன் எனது தலையின் இடது ஓரத்தில் பல்பு எரிந்தது.அடுத்து, பெங்களூர் சென்று கதை சொன்னது, அவரை சம்மதிக்கவைக்க பெங்களூரு காஃபி ஷாப் ஒன்றில் ‘மூன்றாம் பிறை’ கமல் பாணியில் நான் பல்டி அடித்தது இத்யாதிகள் எடிட்டிங் ஃபுட்டேஜ்.
எனது கதைநாயகி சிநேகாவாகவே மாறி, நடிப்பில், இவர் மொத்த யூனிட்டையும் மிரளவைத்ததும், சிறு பட்ஜெட் படம் என்பதற்காக எந்த சவுகரியங்களும் கேட்காமல் தந்த ஒத்துழைப்பும் மறக்கமுடியாதது. அவரது காரில் தினமும் மூன்று உதவி இயக்குனர்களையும் ஏற்றிக்கொண்டே படப்பிடிப்புக்கு வருவார். [ இடம் பத்தலைன்னா அக்கா மடியில கூட உட்கார்ந்துட்டு வருவாய்ங்க போல’].
ஒரு கல்லூரி நிர்வாகம், ஒரு படப்பிடிப்புக் குழுவுக்கு, கேட்கும்போதெல்லாம் மாணவ, மாணவிகளையும் நடிக்க அனுப்பி, சிறுதொந்தரவுகூட தராமல் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமா? என்று என்னை வியக்கவைத்த கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும், கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது எங்கள் சொந்தங்களாகவே மாறி உபசரித்த ஆதிவாசி மக்களையும் மறக்கமுடியாது.
இதுவரை திலக், உதய் என்ற இரு காதலர்களை சந்தித்து காதலித்து, கசிந்துருகி, கண்ணீர்பெருகி பிரிந்திருக்கிறார் சிநேகா.
இன்னும் மூன்றே வாரங்களில், அடுத்த ஷெட்யூலில், சென்னையிலும் கொடைக்கானலிலும் சிநேகாவின் காதல்கதை தொடரும்…
முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இசை ; இரா.ப்ரபாகர்
ஒளிப்பதிவு ; மாரி வெங்கடாச்சலம்
படத்தொகுப்பு ; சஜ்ஜித்
பாடல்கள்: நெல்லைபாரதி
நடனம் ; பாலகுமாரன்–ரேவதி, சதீஷ்
ஆக்ஷன் ; ஜாகுவார் தங்கம்
ஸ்டில்ஸ் ; ஜெயக்குமார்
டிசைன்ஸ்: டேவிட், ஹாரிஸ்
நிர்வாகத்தயாரிப்பு ; ஜெ. அருள்
இணைத்தயாரிப்பு ; அமலா கலைக்கோட்டுதயம்
மக்கள் தொடர்பு ; நிகில்முருகன்
எழுத்து, இயக்கம் முத்துராமலிங்கன்
தயாரிப்பு ; தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக கா.கலைக்கோட்டுதயம்.