தவறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.
சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ்
கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும்.
தற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள். அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவதற்கு கருத்துரிமை இல்லை என்று பேச முடிகிறது. விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் நம் பார்வைக்கு வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளம் என்றால் இப்பேற்ப்பட்ட கருத்துரிமையே நமக்கு வேண்டாம்.
விஜயை பிடிக்கவில்லை என்றாலும், அவரது அசட்டுத்தனமான படங்களை விரும்பவில்லை என்றாலும் அவரது படத்தை வெளியிடும் ஜனநாயக உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்த கருத்துரிமைக் காவலர்கள் சீறுகிறார்கள். இதனால் விஜயை ஆதரிக்கிறேன், தலைவா படம் வெளியிடப்பட வேண்டும் என்று இணையத்தில் பிரச்சாரமும் செய்கிறார்கள். சரி இவர்களுக்காக இவர்களே உருவாக்கி வைத்திருக்கும் வாத வழிப்படியே கருத்துரிமையின் இலட்சணத்தை புரிய வைப்போம்.
முதலில் விஜயின் தலைவா படம் ஏன் வெளியிட முடியவில்லை? அதற்கு, ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள தமிழக அரசுதான் காரணம் என்பது உலகறிந்த விசயம். அதை நாமும் மறுக்கவில்லை. இந்த மறைமுகத் தடைக்கு என்ன காரணம்? அது ஏதோ தனிப்பட்ட ஈகோ சார்ந்த காரணங்கள். இருக்கட்டும். இந்நிலையில் விஜயை ஆதரிப்போர் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசை எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழக அரசை எதிர்க்க முடியுமா? இல்லை அவர்கள் தரும் ஆதரவை நடிகர் விஜய்தான் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
முதலில் தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா? இல்லை அவரது தந்தை, தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பினர்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையே! உயிரோடிருப்பவன் செத்துவிட்டான் என்று சொல்லி எப்படி ஐயா அழ முடியும்? அவர்கள் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, என்ன சொன்னார்கள் என்பதும் முக்கியம்.
தலைவா படப் பிரச்சினைக்காக விஜய் தரப்பு கொடநாட்டிற்கு சென்று ஜெயாவை பார்க்க முடியவில்லை. பிறகு ஜெயா சென்னை திரும்புகிறார் என்றதும் அடித்துப் பிடித்து, “அம்மா ஆட்சியின் மகிமைகள்” என்று விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டாரே! அது ஏன்? ஜெயலலிதா எப்படி மறைமுகமாக தடை செய்திருக்கிறாரோ அது போல விஜயும் செய்த பாவத்துக்கு மன்னியுங்கள் என்று மறைமுகமாக இறைஞ்சுகிறார். இப்படி அவர்களது சண்டையும், மன்னிப்பும், சமாதானமும் அந்தரங்க, கிசுகிசு, மறைபொருள் வழியில் இருக்கும் போது இங்கே ஜனநாயக உரிமைக்கு எங்கே இடம்?
வெளிப்படையாக இருப்பது உண்மையான ஜனநாயகத்தின் விதிகளில் ஒன்று. மறைமுகமாக பேசுவது என்பது சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் முதலாளிகளுக்கு உரியது. விஜய் தரப்பினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட தமிழக அரசை திட்ட முடியாதவர்கள். ஆனால் திட்டும் விருப்பம் உள்ளவர்கள். அதனாலேயே வெளிப்படையாக தினமும் அம்மா பஜனையை செய்து வருபவர்கள். அதிலும் நடிகர் விஜய், புரட்சித் தலைவியின் சாதனைகளை பட்டியல் போட்டு தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக வைத்திருக்கிறார் என்று தீர்ப்பே அளித்து விட்டார். இப்பேற்பட்டவரை யாரய்யா ஆதரிக்க முடியும்?
ஒருவேளை விஜய் வெளிப்படையாக பேச இயலாத சூழ்நிலையில் இருக்கிறார், அதனால்தான் இப்படி சரணடைந்து பேசுகிறார் என மேற்கண்ட கருத்துரிமைக் காவலர்கள் சொல்லக்கூடும். சரி, அவர் என்ன ‘அல்கைதா’வின் பணையக் கைதியாகவா இருக்கிறார்? ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை? விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்களே அது ஏன்? தன்னால்தான் முடியவில்லை என்றால் மற்றவர்களை வைத்துக் கூட பேச முடியாதபடி உங்களை யார் பிடித்து வைத்தது?
சில இடங்களில் விஜய் ரசிகர்கள் இருக்கும் உண்ணாவிரதத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விஜய் தரப்பு போலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பதிவு செய்கிறது. ஏனிந்த பயம்? இத்தனைக்கு பிறகும் அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்க வில்லை என்பதால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் காமரா முன்னால் கண்ணீர் விட்டு வேறு பார்க்கிறார். படம் வெளியாகவில்லை என்றால் இவர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாராம். இதென்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் வேலை, வசதிகளை இழந்து வாடுபவர் போலவா?
இந்த தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று யாராவது அழுதார்களா? இல்லை 50 கோடி தயாரிப்பில் விஜய் விரலை அசைத்து பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று எவராவது தவமிருந்தார்களா? ஏதோ சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்வது போலவும், அந்த சேவை நிறுத்தப்பட்டது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ‘நன்றாக’ நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இல்லையென்றால் இந்த சமூக சேவகர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த தலைவா படத்திற்கு விஜயுக்கு கருப்பும் வெள்ளையுமாக எவ்வளவு கொடுத்தார் என்ற உண்மையையாவது சொல்ல முடியுமா? அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கருப்பில் எவ்வளவு கொடுத்தார்கள் என்று சான்றிதழைத்தான் காட்ட முடியுமா?
இல்லை பாடல் உரிமை, சாட்டிலைட் உரிமை, தமிழகம் தவிர்த்த ஏனைய ரிலீஸ் இவற்றில் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்வாரா? இத்தனை கோல்மால் இருந்தும் இவர்கள் அழுகாச்சி புராணத்தின் மூலமாவது ஏதாவது சிம்பதி கிடைக்குமா என்று வெறியுடன் அலைகிறார்கள். இடையில் விஜய் தரப்பு, தலைவா படத்தை வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. அதுவும் போலிஸ் அனுமதி கொடுத்தால், தானும் கலந்து கொள்வதாக விஜய் தெரிவித்திருக்கிறாராம். ஏன் அனுமதி கொடுக்க வில்லை என்றால் மீறி இருக்க மாட்டீர்களா? அப்படி இருந்தால் கைது செய்வார்கள் என்று பயமா?
முதலில் அந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து? தலைவா படத்தை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலேயே யாரை எதிர்த்து இந்த அறப் போராட்டம்? ஒருவேளை சத்யம் திரையரங்க புரஜெக்டர் எந்திரம்தான் எங்கள் தலைவா படத்தை டிஸ்பிளே செய்ய மறுக்கிறது என்றாவது சொல்லித் தொலையுங்களேன்! உங்களது ஜனநாயகப் போராட்டத்தின் தரம் என்ன என்பதை இதற்கு மேலும் விளக்கினால் அந்த ஜனநாயகமே அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓடிவிடும்.
சரி, விஜய்தான் சூழ்நிலைக் கைதி நாங்கள் களத்துக்கு வருகிறோம் என்று ஏனைய நாயகர்கள் எவராவது களத்திற்கு வந்தார்களா? வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை? ரஜினி, கமல், அஜித், சிம்பு, எல்லாரும் வம்பு எதற்கு என்று ஏன் ஒளிய வேண்டும்? கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரனுக்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும்? விஜயை ஆதரிக்கும் அப்பாவிகள் பதில் சொல்லட்டும்.
ஜெயலலிதா நினைத்தால் ஒரு படத்தைக்கூட வெளியிட அனுமதிக்க மாட்டார், வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் இதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.
இங்கேதான் மீண்டும் அந்த கேள்வியை நினைவுபடுத்துகிறோம். சினிமா வழியாகத்தான் உங்களுக்கு ஜனநாயக உணர்வும் அதன் உரிமை குறித்த கவலையும் நினைவுக்கு வருமா? அதுவும் தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி என்று இவர்களே நம்மிடம் சண்டைக்கும் வருவார்கள்.
கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்கு, தருமபுரியில் நேற்று போலி சுதந்திரம் என்று பிரசுரம் வினியோகித்த எமது தோழர்கள் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைப்பு, பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு என்று ஜெயலலிதா இந்த ஆட்சிக் காலத்திலேயே தனது ஜனநாயக ரிக்கார்டுகளை ஏராளம் பதித்துத்தான் வைத்திருக்கிறார். ஆகவே நம்மைப் பொறுத்த வரை இந்த அரசு சர்வாதிகாரமாகத்தான் செயல்படுகிறது என்பதற்கு தலைவா படம் தேவையில்லை. அன்றாடம் நமது வாழ்க்கையிலேயே அதை சந்தித்து வருகிறோம்.
தமிழ் சினிமா என்பது கருப்பு பணத்தில் தயாரிக்கப்பட்டு, மக்களின் பணத்தை சட்டபூர்வ பிக்பாக்கெட் கொள்ளையுடன் ஓரிரு வாரங்களில் பறிமுதல் செய்யும் ஒரு அநீதியான தொழில். இதற்கு அரசும் உடந்தை என்பதும், அரசியல் கட்சிகள் சினிமா நட்சத்திரங்களை பிரபலம் காரணமாக தமக்கு பயன்படுத்திக் கொள்வதும், பதிலுக்கு சினிமா முதலாளிகள் கேளிக்கை வரி ரத்து, படம் வெளியாகும் போது டிக்கெட் விலைக்கு வரம்பில்லாமல் கட்டணம் வைக்கலாம் என்று சலுகைகள் பெறுவதும் கண்கூடு.
எனவேதான் தமிழகத்தில் அரசியல் விவாதம், உரிமைப் போராட்டம் அதிகம் நடக்காமல் மக்கள் மீது திணிக்கப்படும் சினிமாவில் வாரம் முழுவதும் கழிக்கிறார்கள். மக்களின் இந்த போதையை பயன்படுத்திக் கொண்டுதான், ரெண்டு சைக்கிள், மூன்று அயனிங் மிஷன், நான்கு தையல் எந்திரத்தை கொடுத்து விட்டு அடுத்த முதல்வர் என்ற எரிச்சலூட்டும் வரியை அலறவிடும் நட்சத்திரங்களின் ஊளையை அடிக்கடி எதிர்கொள்கிறோம்.
ஆகவே அதன் பொருட்டு அதாவது உண்மையான ஜனநாயகம் வளர விரும்புவோர் தலைவா படத்தில் இரண்டு தரப்பும் அடித்துக் கொள்வதை ஆதரிக்க வேண்டும். எத்தரப்பையும் ஆதரிப்பதோ இல்லை கருத்துரிமையின் பாற்பட்டு பேசுவதோ அபத்தம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவின் மாயையிலிருந்து விடுபடுவதும், பாசிச ஜெயாவின் அரசியலை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல. ஆளும் வர்க்கங்களுக்குள் சண்டை நடக்கும் போது நாம் அதில் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது என்பது இங்கேயும் பொருந்தும். தலைவா படத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போர் எக்காலத்திலும் பாசிச ஜெயவை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எது ஜனநாயக உரிமை, எது கருத்துரிமை என்பதே தெரியாது.