சுவாமி கந்தன். இந்தியாவில் பிறந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர். நியூயார்க்கில் உள்ள பிலிம்ஸ் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு, விஷூவல் எஃபக்ட்ஸில் படித்து பட்டம் வாங்கியவர். 2008ல் இவர் முதன்முதலாக ஹாலிவுட் படத்தை இயக்கினார். கேட்ச் யுவர் மைண்ட் என்கிற ஆங்கிலக் குடும்பக் கதை அது.
அதில் அவருக்கு பெரிய பாராட்டுக்கள் வந்ததா ? தெரியவில்லை. அவர் இப்போது ‘ஜேசன் பிட்டியர்’ என்பவருடன் இணைந்து எழுதி இயக்கும் படம் ‘தி சீக்ரட்
வில்லேஜ்’ அதாவது ரகசிய கிராமம். ஜோனதன் பென்னட், அலி ஃபால்கனர் நடித்துள்ள இப்படம் ஒரு த்ரில்லராகும்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திடீர் திடீரென் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்கள். அதுவும் சரியாக வருடா வருடம் அக்டோபர் மாதத்தில் மட்டுமே இப்படி இறந்து போகிறார்கள். இதை ஆராய ஒரு திரைக்கதை ஆசிரியரும், ஒரு பத்திரிக்கையாளரும் சேர்ந்து அந்த ஊருக்கு வந்து தங்குகிறார்கள்.
அந்த கிராமத்தில் ஒரு வினோதமான வழிபாட்டு முறை நிலவி வருகிறது. அதன் பிண்ணனியில் திரைக்கதையாசிரியர் ஒரு நாள் மாயமாய் மறைந்து விட அவரைத் தேடிச் செல்லும் பத்திரிக்கையாளர் சந்திக்கும் பரபரப்பான விஷயங்களே இந்தத் த்ரில்லர் படமாகும்.
அக்டோபரில் இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியாக இருக்கிறது. நம் கந்தன் இன்னொரு மனோஜ் சியாமளனாக ஹாலிவுட்டிற்கு கிடைப்பதற்கும் தமிழன் பெயர் ஹாலிவுட்டிலும் நிற்பதற்கும் அந்த குன்றத்தூர் கந்தன் அருள் பாலிப்பானாக.