deepan-chakravarthy-villa-interview

பீட்சா பட கார்த்திக் சுப்பாராவ் எந்தவித சினிமா அனுபவங்களும் இன்றி குறும்படம் வாயிலாகவே சினிமாவில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியவர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும் தீபன் சக்கரவர்த்தியும் குறும்படங்கள் வாயிலாகவே சினிமாவுக்குள் என்ட்ரி செய்திருக்கிறார். அவரிடம் பேசிய போது..

இது பீட்சாவின் இரண்டாம் பாகமா?
இல்லை தான். பீட்சா போலவே இதுவும் ஒரு த்ரில்லர் என்பதைத் தவிர படத்தில் பெரிய கதை சம்பந்தம் ஏதுமில்லை. பீட்சா நடந்தா காலகட்டத்தில் இதுவும் நடப்பது போல் திரைக்கதை எழுதியிருக்கிறோம். அவ்வளவு தான்.

எப்படி குறும்பட உலகில் நுழைந்தீர்கள்?
நான் கோயமுத்தூர்காரன். இன்ஜினியரிங் படித்துவிட்டு அது தொடர்பான வேலைகளை செய்துகொண்டு போர் அடிக்கும் போது இணையத்தில் வந்து ஹாலிவுட் படங்களைப் பார்ப்பேன். அப்படி ஒரு நாள் ஒரு வெளிநாட்டுச் சேனலில் பார்த்த நிகழ்ச்சியில் ஆறேழு பேர் போட்டியாக குறும்படங்கள் எடுப்பார்கள். பின்னர் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அலசி ஆராய்ந்து நல்ல படத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

இதுபோல தமிழில் இல்லையே என்று நினைத்தபோது ‘நாளைய இயக்குநர்’ தொடர் வர ஆரம்பித்தது. உடனே வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து குறும்படம் எடுக்க இறங்கினேன். அமுதா, ஆசை, ஒரு நாள், காபி என்று வரிசையாக குறும்படங்கள் எடுத்தேன். உடனிருந்த நண்பர்கள் ஊக்கமும், ஆதரவும் தந்தார்கள்.

பிட்சா வெளிவந்து வெற்றி பெற்றது. அதைப் போலவே ஒரு கதை என்னிடம் இருந்தது. நேரே போய் அதன் தயாரிப்பாளர் சி.வி.குமாரைப் பார்த்தேன். கதையை கேட்டுவிட்டு இதை பார்ட் -2 என்றே பண்ணலாம் என்றுவிட்டார். இதோ படம் ரெடியாகிறது.

ஹீரோவாக குறும்பட டீமின் விஜய் சேதுபதி இல்லையே ஏன்?
விஜய் சேதுபதி எனக்கு நல்ல நண்பர். அவரிடம் போய் இந்த ஸ்கிரிப்டை கொடுத்து படிக்கச் சொன்னேன். பார்த்துவிட்டு சில ஐடியாக்கள் கொடுத்தார். ஆனால் 5 படங்களில் கமிட் ஆகி ரொம்ப பிஸியாகிவிட்டதால் கால்ஷீட் இல்லை. எனவே சூது கவ்வும்மில் அவருடன் நடித்திருந்த அசோக்கைப் பார்த்ததும் அவரை நடிக்க வைக்கலாம் என்று தோன்றிவிட்டது. அவரும், நாயகி சஞ்சீத ஷெட்டியும் பாத்திரத்தை நன்கு உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து அடிபட்டு, அழுத்தங்களை தாங்கி வருபவர்களுக்கே பல சமயங்களில் தோற்கும் போது, குறும்பட அனுபவங்களை மட்டுமே வைத்து வரும் இயக்குனர்கள் வெற்றியாவது எப்படி ?
அப்படி நேராக சொல்லிவிட முடியாது. உதாரணமாக குறும்பட பாதிப்பில் எந்தத் திரைக்கதை எழுதினாலும் 20 நிமிடத்துக்குள் கதை முடிந்துவிடுவது போலவே எழுதிவிடுவோம். அதை பயிற்சியில் தான் மாற்றினேன்.

இப்போது தான் குறும்பட இயக்குநர்களை மதித்து கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல ஆரம்பம். குறும்பட அனுபவம் நீண்ட சினிமாவுக்கு உதவுமா? என்கின்ற சந்தேகங்கள் உடைந்து இப்போது குறும்பட அனுபவம் பெரும் சினிமாவுக்கு உதவும் என்ற எண்ணம் வருகிறது. குறும்படத்தின் சவால் குறைந்த நேரத்தில் சுவராசியமாக சொல்லவேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்லவேண்டியிருப்பது. அதுவே இயக்குனர்களையும் வளர்க்கிறது.

தயாரிப்பாளர்களுக்கு குறும்பட ஆட்களிலிருந்து இயக்குனர்களைத் தேர்வுசெய்வதில் லாபம் தான் என்ன?

குறும்படம் தயாரிப்பாளர்களுக்கு இந்த ‘இயக்குனர் தகுதியானவர் தானா ? அவர் சொல்லும் விஷயத்தை திரையில் அவரால் கொண்டு வர முடியுமா ?’ என்று சுயபரிசோதனை செய்து கொள்ளும் தளமாகவும் உபயோகப்பட முடியும். எனவே ஒரு இயக்குனரை நம்பி பெரிய அளவில் செலவு செய்து படம் எடுக்கும் முன் அதே இயக்குனரை வைத்து ஒரு குறும்படம் எடுப்பதன் மூலம் அவரது திறமையை ஓரளவு அளந்துகொள்ள முடியும்.

குறும்படம் எடுப்பதும் மிகுந்த சிரமத்தையும் உழைப்பையும் வைத்துத் தான். எனவே குறும்படம் எடுப்பவர்களை தயவு செய்து குறைத்து மதிப்பிடாதீர்கள். சொல்லப் போனால் நிறைய சினிமா உதவி இயக்குனர்கள் பலவருடங்களாக அஸிஸ்டெண்ட்டாகவே இருந்தும் அவர்களுடயை படைப்பு என்று தனியாக எதுவும் காட்டிக்கொள்ள முடியாத சூழலில், வாய்ப்புகளே வராததால் சிறிய அளவில் குறும்படங்களை இயக்கி அவற்றைக் கொண்டு வாய்ப்புத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.