அட்டக் கத்தியில் யதார்த்தமாக அசத்திய தினேஷ் தனது நிஜ வாழக்கையிலும் இயல்பான யதார்த்தமானவராகவே இருக்கிறார். அடுத்தடுத்து உடனே படங்கள் வரவில்லையென்றாலும் முக்கியமான ரோல்களுக்கு நினைவு வைத்து அழைக்கும்படி தான் இருப்பதில் அவருக்கு சந்தோஷமும் நம்பிக்கையும்
இருக்கிறது. தற்போது வெங்கட் பிரபுவின் உதவியாளர் மற்றும் ராஜூமுருகனின் படங்களில் நடித்து வருகிறார். அவரிடம் பேசிய போது
சினிமாவுக்கு முன் தினேஷ் பற்றி சொல்லுங்கள்..
சினிமா வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்தவன் நான். சென்னை ராயபுரம் தான் சொந்த ஊர். எல்லோரையும் போல சினிமா ஆசைகள் எனக்கும் இருந்தன. விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு சினிமாவை மேலும் நெருக்கமாக்கியது. பாலுமகேந்திரா சாரின் பட்டறையில் போய் சினிமா அவரிடம் கற்றுக் கொண்டேன். அங்குதான் இயக்குனர் வெற்றிமாறனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் பட்டறையை விட்டு வெளியே வந்ததும் ‘தசையை தீச்சுடினும்’ அப்படீன்னு என்னை வைத்து ஒரு படம் ஆரம்பித்தார். அது ஆரம்பித்திலேயே நின்று போனது.
சினிமாவினுள் நுழைவதற்கு பற்றிய உங்கள் போராட்டங்கள் பற்றி?
சினிமாவில் வந்த பெரும்பாலோனோருக்கு நிறைய கதைகள் இருக்கும். எனக்கு வாழ்வில் கவலை, துக்கம், மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாம் கலந்தே இருந்திருக்கின்றன. ஆனால் நிறைய பேர் சிந்தி வரும் ரத்த வியர்வைகளும், கசப்பான நிகழ்வுகளும் எனக்கு வராமல் தவிர்க்கப்பட்டன. காரணம் என் வாழ்வில் வந்த நண்பர்களும் மனிதர்களும் நல்லவர்களாக இருந்துவிட்டார்கள். அவர்களுடைய வழிகாட்டுதலும், யோசனைகளுமே என்னை பெரும்பாலும் வழிநடத்தியுள்ளன. நிறைய பேர் என்னை பெரிய ஆளு என்று நினைத்தார்கள். அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் கூட என்னைப் பற்றி அப்படி உயர்வாக நினைத்திருப்பவர் தான். அதனாலேயே அவர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து எனக்கு சினிமாவில் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொடுத்தார்.
அட்டகத்தி தந்த அனுபவம் எப்படி ?
ஒரு படம் தான் முடித்திருக்கிறேன். நிறைய வாழ்த்துக்கள் சொன்னார்கள். “இயல்பா இருக்கேப்பா” என்று நிறைய பேர் சொன்னதில் எனக்கு மிகவும் சந்தோஷம். நிறைய துணை இயக்குனர்கள் என்கிட்ட வந்து “ஊருக்கு திரும்பிப் போலாம்னு இருந்த எனக்கு உங்க சினிமா மூலமா மீண்டும் நம்பிக்கை வந்திருக்கு” என்று சொன்னது எனக்கு பெரிய பலத்தைக் கொடுத்திட்டது. இந்த நம்பிக்கைக்கு உண்மையாக நான் இருக்கு வேண்டும். இன்னும் நல்ல படங்களில் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போலவே நடக்கவும் செய்கிறது.
உங்களது தற்போதைய படங்கள் பற்றி சொல்லுங்கள்..
சசிதரண், வெங்கட் பிரபுவின் அஸிஸ்டெண்ட் அவரது இயக்கத்தில் வாராயோ வெண்ணிலாவே படம். இதில் ஹரிப்ரியா மற்றும் காவ்யாஷெட்டி ஆகியோர் ஜோடிகள். காதல் கதைதான். ஆனால் படத்தின் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை எனக்கு மிகவும் நம்பிக்கையைக் கொடுத்து எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. அடுத்து ராஜூமுருகனின் இயக்கத்தில் ‘குக்கூ’ என்கிற படம். மாற்றுத் திறனாளிகள் இருவரிடையே வரும் காதல் பற்றியது. இப்படத்தின் மூலம் நான் நல்ல பெயர் அடைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக எஸ்.பி.பி.சரணின் தயாரிப்பில் கார்த்திக் ராஜூ இயக்கும் ‘திருடன் போலீஸ்’ படம். அட்டகத்தி ஐஸ்வர்யா இதில் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார். யுவனின் தீவிர ரசிகன் நான்.
எதிர்காலம் பற்றிய கனவு?..
துடிப்புள்ள இளைஞர்களாக இயக்குனர்கள், நல்ல கதைகள், நெருக்கமான நண்பர்கள் என சாதகமான விஷயங்கள் அருகேயே இருக்கின்றன. சினிமா பதட்டத்தோடு இருக்கவேண்டிய இடம் தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால் நமக்கென்று ஒரு இடம் அடைவதற்கு கிடைக்கும். நன்கு நேரம் எடுத்து, சிந்தித்து மனசில் இருந்தவற்றையெல்லாம் துடைத்து விட்டு புதிதாக யோசித்து உழைக்கத் தயாராகிவிட்டேன்.
வரும் காலம் சுவராசியமான, தீவிரமான படங்களுக்கான காலம். இனி அப்படிப் படங்களில் நானும் இருப்பேன்.