‘அட அப்படி ஸ்பெக்டரம் ராஜா ரேஞ்சுக்கு என்ன பண்ணிவிட்டார் பேரரசு திகார் ஜெயில் போவதற்கு?’ என்று யோசிக்காதீர்கள். அவர் கடைசியாய் எடுத்த திருத்தணிக்கு ரசிக பக்தர்கள் கூட்டமாய் வராததால் மனமுடைந்த இயக்குனர் பேரரசு இம்முறை நேராக திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார். உள்ளூர் ரெவுடிகளுக்கு ரசிகர்கள் பெரிதாய் பயப்படாததால் வெளிமாநிலத்துக்குப் போய்விட்டார். படத்தின் பெயர் ‘திகார்’.
ஆனால் இம்முறையும் தனது ஆக்ஷன் பார்முலாவைக் கைவிடுவதாய் அவர் இல்லை. டான் அலெக்ஸாண்டர் என்கிற திகார் ஜெயிலை கலக்கிய கற்பனையான டானை தனது கற்பனையாலேயே உருவாக்கியிருக்கிறார் பேரரசு. புதுமுகம் உன்னிமுகுந்தன் கதாநாயகனாகவும், புதுமுகம் அகன்ஷாபூரி கதாநாயகியாகவும் (இவர் ஏற்கனவே அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சிறு ரோலில் வந்திருக்கிறாராம்) நடிக்க டைட்டில் வில்லன் ரோலில் நடிக்க இருப்பவர் நடிகர் பார்த்திபன்.
வழக்கமாக ஆக்ஷன் போக மற்ற காட்சிகளுக்கு என்ன செய்வது என்பதற்காக இவர் தங்கை, அண்ணன், அம்மா போன்ற பாசங்களில் எதையாவது மானே தேனே பொன்மானே போல போட்டுக் கொள்வது வழக்கம். இப்படத்தில் அந்த சென்ட்டிமென்ட்டுகளே இல்லையாம். திகாரை மையமாகக் கொண்ட கதை ஸ்பெயின், மும்பை என்று பறந்து சென்னையிலும் ஒரு ரவுண்ட் அடிக்குமாம்.
ஹெலன் புயல் வருகிறது என்றுதான் வானிலை முன்னறிவித்தார்கள். இந்தத் திகார் படம் வருகிறது என்று எதுவும் பாதுகாப்பு அறிவிப்பு சொல்லவேயில்லையே பாஸ் என்று நீங்கள் என்னைக் கேட்காதீர்கள். ரமணன் சாரைப் போய்க் கேளுங்கள்.