பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் முகத்தைத் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை என்கிற இன்னொரு முகத்தைக் கொடுத்தது ‘மறுமுகம்’ படம். அவருடன் ஒரு ஜாலி பேட்டி.
சொல்லுங்க பிரீத்தி எப்படி நடிகையானீங்க,,? அதுவும் முதல் படமே தமிழில்..?
மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன்.. அப்பொழுது இயக்குனர் கமல் அவரது படத்திற்குக் கதாநாயகி தேடிக்கொண்டிருந்தார்… எனது புகைப்படத்தைப் பார்த்து விட்டு தேர்வுக்கு (ஆடிஷன்) வரச்சொன்னார்…. நம்பிக்கையுடன் கலந்து கொண்டேன்…. ஆனால் அடுத்த மூன்று நாட்கள் ஒரே டென்ஷன் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று… திடீரென்று ஒரு போன் இயக்குனரிடமிருந்து “உங்களை செலக்ட் பண்ணியிருக்கோம்..” என்று … இன்று அடுத்தடுத்த இரண்டு படங்கள் ‘மறுமுகம்’ மற்றும் ‘உயிருக்கு உயிராக’ வெளியாகவிருக்கிறது….
மாடலிங்குக்கும் நடிப்பதற்கும் உள்ள வேறுபாடு..?
மாடலிங்கில் விதவிதமான உடைகளை உடுத்திக் கொண்டு ராம்ப் வாக் மட்டும் தான் வரமுடியும்….
ஆனால், நடிப்பது அப்படியல்ல… கதாபாத்திரங்களுக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்… காதல், ரொமான்ஸ், சோகம் இப்படி பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சவாலான துறை நடிப்புத் துறை…. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது….
மறுமுகத்தில் உங்களது கதாபாத்திரம்..?
ராதிகா என்கிற கதாபாத்திரம்…. டேனியல் பாலாஜி, அனூப் இருவரும் நடித்துள்ளனர். பக்கா த்ரில்லர். முதல் படம். கொஞ்சம் நடுக்கத்தோடு நடித்த படம். நிறைய சொதப்பினேன். முதல் படம்.. மொழி தெரியாது. காமிரா தெரியாது. எனக்கு முன்னாடி நடிப்பில் தூக்கி சாப்பிடுகிற டேனியல் பாலாஜி. ஆனால் எல்லோரும் பொறுமையா என்னை நடிக்க வச்சாங்க. தேங்க்ஸ் டு டைரக்டர் கமல் சார். தயாரிப்பாளர் சஞ்சய்க்கு நன்றி சொல்லியே ஆகணும். என் சினிமா வாழ்க்கையை தொடங்கி வச்சார். மறுமுகத்தில் நடிக்க நிறைய இடம். ஒன்றும் தெரியாத வயதில் நாம் எடுக்கும்முடிவுகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது…. அதிலிருந்து எப்படி வெளியே வருகிறோம் என்பது மாதிரியான கதாபாத்திரம்….
‘உயிருக்கு உயிராக’வில்..?
இதில் எஸ் ஆர் எம் கல்லூரியில் படிக்கும் பிங்கி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்… துறுதுறுப்பான பப்ளி ஹீரோயினாக இயக்குனர் விஜய மனோஜ்குமார் என்னைக் காட்டியிருக்கிறார்….
இரண்டு படங்களுமே எதிரும் புதிருமான கதைகள்…. மறுமுகம் திரில்லர் படம் என்றால் உயிருக்கு உயிராக ஒரு சாஃப்ட்டான படம்……
வழக்கமா ஹீரோக்களுக்குத் தான் இதுபோன்ற அதிஷ்டம் அடிக்கும்…. இரண்டு படங்கள் நான்கு ஹீரோக்கள்….?
மறுமுகத்தில் டேனியல் பாலாஜி மற்றும் அனுப்…. உயிருக்கு உயிராகவில் சஞ்சீவ் மற்றும் சரண்…. இதில் நந்தனாவும் இருக்கிறார்…. நான்கு ஹீரோக்களுமே என்னுடைய நல்ல நண்பர்களாகிவிட்டனர்….
கவர்ச்சியாக நடிப்பீர்களா..?
ஆம்… கதைக்குத் தேவைப்படும் போது கவர்ச்சி காட்டுவது தப்பில்லையே! மேலும் நம்முடைய அழகை ஆரோக்கியமாக வெளிப்படுத்திவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்….
லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களாமே ??
மறுமுகத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது…முதல் படத்திலே லிப் டு லிப் கொடுக்க வைத்துவிட்டார்கள். கதாநாயகர்களுக்கு சந்தோசம் இருக்கலாம் . ஆனால் நமக்குத்தான் அத்தனை பேருக்கு முன்னால் கொடுக்க தயக்கமாகிவிடுகிறது. அதுவும் ஒரு டேக்கில் முடிந்தால் பரவாயில்லை. எது சீக்கிரம் முடிஞ்சிடம்னு நினைக்கிறோமோ அது இன்னும் அதிக டேக் வாங்கும். முத்தக்காட்சி பத்து டேக் போயிருக்கும். இருந்தாலும் கதைக்குத் தேவைப்பட்டது , நடித்தேன்… மிகவும் கண்ணியமாக படமாக்கியிருக்கிறார்கள்….
விருதுகள் வாங்கும் ஆசை இருக்கிறதா..?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை…. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்…..எனது முதல் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையப்படுத்தி எழுதப்பட்ட படங்கள்… அதுபோல ஹீரோயினுக்கும் ஓரளவு நடிக்க வாய்ப்பிருக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும்…. ரெண்டு பாடல் நாலு சீன் என்று வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை….
வட மாநிலத்திலிருந்து தமிழுக்கு வந்த மூத்த நடிகைகள் குறிப்பாக பஞ்சாப்பிலிருந்து வந்திருக்கும் சிம்ரன் உங்களுக்கு அறிவுரை வழங்கினாரா..?
இல்லை…. ஆனால் சினேகாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்….உனக்கு என்ன விருப்பமோ அதை தைரியமாகச் செய். கிளமாரோ ஹோம்லியோ அதை அழகாகச் செய்யணும். வெறுக்கும்படி இருக்கக்கூடாது என்று ஊக்கப்படுத்தினார்…அவ்வளவு பெரிய நடிகை என்னையும் மதித்து அறிவுரை சொன்னது எனக்கு பெரிய விஷயம்.
அஜீத்துடன் நடிக்க ஆசையா?
அஜீத்தை கல்யாணமே பண்ணிக்கலாம். நடிக்க மாட்டமா? அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதனால் பொழச்சிப்போகட்டும். நடிக்க எப்போ எப்போன்னு எதிர்பார்த்திருக்கேன். ஆனா அப்படியொரு வாய்ப்பு அமையுமான்னு தெரியல. குட் லக் டு மைசெல்ஃப். இருந்தாலும் எனக்கு எல்லா நடிகர்களுடனும் நடிக்கணும். அஜித், விஜய், இன்றைய டாப் நாயகர்களுடன் நடிக்கணும். நயனுக்கு அடிச்ச லக் எனக்கும் அடிச்சா போதும்ங்க.
காதல் அனுபவம் ஏதேனும்..?
காதல் ஒரு சுகமான அனுபவம் தான்… நான் இன்னும் யாரையும் காதலிக்கவில்லை…..
தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா..?
ஆம்…. தமிழ்ப்படங்கள் நிறைய பார்க்கிறேன்…. எதிர்நீச்சல் கடைசியாக பார்த்தேன்.
ஏன் தமிழ் சினிமா? இந்தியில் நடிக்கப்போகவில்லை…?
ஷாருக்கான் தீபிகா படுகோன் போன்றவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ்ப்படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை நான் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறேன்….அவர்கள் நார்த்தில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் இங்கு தங்களை பிரபலப் படுத்திக்கொள்ளவே ஆசைப் படுகின்றனர். ஆக தமிழ்நாடு இந்திய சினிமாவின் மிகமுக்கியமான இடம். இங்கு ஜெயித்தால் போதும்.
கேள்விகளுக்கு டான் டான் என்று பதிலளித்த பஞ்சாப்பைச் சேர்ந்த பகவான் தாஸ் –ஆர்த்தி தம்பதியரின் மகளான +2 படித்திருக்கும் பிரீத்தி தாஸ் தனது தாய்மொழியான பஞ்சாபியுடன், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் தமிழும் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.