அசோக்செல்வன் ஒரு எழுத்தாளர். சென்டிமெண்டாக இன்னும் டைப்ரைட்டரில் கதை எழுதிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது கதைகளை பதிப்பிக்கத்தான் யாரும் முன் வருவதில்லை. கதை எழுதி பணம் சம்பாதிக்க முயலும் எழுத்தாளர்கள் என்று இன்று யார் இருக்கிறார்கள்? தெரியவில்லை. அசோக்செல்வனின் அப்பா நாசர் ஏதோ ஆக்ஸிடெண்ட்டில் கோமாவில் இறந்து போகிறார். பின்பு தான் அசோக்செல்வனுக்குத் தெரிகிறது அப்பாவுடைய சொத்துக்கள் எதுவும் இவருக்கு கிடைக்கப்போவதில்லை எல்லாம் வேறு பங்காளிகளுக்குப் போய்விட்டது என்று. ஆனால் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு பாழடைந்த வில்லாவைத் தவிர.
பாண்டிச்சேரி செல்லும் அசோக் அந்தப் பாழடைந்த பங்களாவில் தனியே தங்கி கதை எழுத ஆரம்பிக்கிறார். அப்போது நாசர் வரைந்த ஓவியங்கள் அதில் ஒரு பூட்டிய அறையில் இருந்து கிடைக்கின்றன. அசோக் அவரது காதலியான சஞ்சிதாவிடம் வில்லா பற்றிப் பேச அவள் அந்த வீட்டை விற்றுவிடலாம் என்கிறாள். நாசர் வரைந்த அந்த ஓவியங்கள் சொல்லும் விஷயங்கள் வாழ்வில் நடப்பதைக் காட்டுவதாக படிப்படியாக தெரிகிறது. அதிலிருந்து அவர் வாழ்வில் தொடராக நடக்கும் சங்கிலிக்கோர்வை விஷயங்களும் அதன் திருப்பங்களும் தான் வில்லாவின் ரகசியங்கள்.
பிட்சா -2 என்று போட்டுவிட்டதால் பிட்சாவைப் போலவே சில புத்திசாலித்தனமான காட்சிநிலைத் திருப்பங்களை வைத்திருக்கிறார்கள் (உதாரணமாக சஞ்சிதா ஷெட்டி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள். கார்த்திக் சுப்பாராஜின் பங்களிப்பாக இருக்கலாம்). மற்றபடி கதை மனிதவிஷயங்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பற்றிப் பேசுகிறது. எனவே ஆவி, ஈ.எஸ்.பி போன்றவற்றை நம்பாதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து டென்ஷனாக வேண்டாம்.
‘விசித்திரம்’ என்றொரு குறும்படமே இப்போது ‘வில்லா’வாக விரிந்திருக்கிறது. விசித்திரம் குறும்படத்தில் தெரிந்த த்ரில் இந்த வில்லாவில் பெரிதாக உண்டாக்கப்படவில்லை. விசித்திரத்தில் வரும் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாக ப்ளோ-அப் செய்து வரைந்திருந்து அதிலிருந்து கதையை பெரிதாக விரித்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கலாமோ டைரக்டர் சார்.
குறும்பட இயக்குனரின் இயக்கம் என்பதால் பட்ஜெட் கருதி தேவையில்லாத ஆடம்பரங்கள் படத்தில் இல்லை. அத்தோடு ஷாட்கள் யதார்த்த நிலை காட்சியமைப்புக்களாக வந்திருப்பதும் நன்று. ஆனாலும் தொழில் நுட்பச் செலவு அதிகம் தான் என்கிறார்கள். படத்தில் ஒளிப்பதிவு(தீபக் குமார் பாடி), எடிட்டிங் (லியோ ஜான் பால்), இசை (சந்தோஷ் நாராயண்) போன்றவை பரவாயில்லை. இயக்கமும்(தீபன்) பரவாயில்லை. படமும் பரவாயில்லை ரகமே. தீபன் இன்னும் முயற்சி செய்து திரைக்கதை எழுதியிருந்தால் படம் இன்னும் அதிகமான த்ரில் கொண்டிருந்திருக்கும். அத்தோடு கதாபாத்திரங்கள் உயிரோட்டம் இல்லாமல் இருப்பது போன்று காட்சியமைப்புக்கள் இருப்பதும் ஒரு மைனஸ்.
வில்லா என்கிற பெயரே பொருத்தமானதாக இருக்கும்போது பிட்சா – 2 என்று ஏன் சேர்த்து வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. தமிழில் இதுபோன்ற ‘நீட்’டான த்ரில்லர்கள் இப்போது தான் வர ஆரம்பித்திருக்கின்றன. பிட்சா போல ஹிட் மிரட்டலாய் இல்லை தான் ஆனாலும் இதுவும் ஒரு நல்ல முயற்சியே. பேய், ஆவி சம்பந்தப்பட்ட படமாக இருந்தும் வில்லா நம்மளை நல்லா பயமுறுத்தலை பாஸ்.