புதியவர்களின் படத்துக்கு இசையமைப்பதில் இப்போதும் அதே ஆர்வம் காட்டுகிறார் இளையராஜா. எந்தப் படத்துக்கும் இரண்டு நாட்களுக்கு மேல் பின்னணி இசையமைக்க எடுத்துக் கொள்வதில்லையாம். முழுப்படத்தையும் ஒருமுறை பார்த்துவிடுவாராம். பின் பின்னணி இசையை மனதில் தீர்மானம் செய்துகொண்டு ஒவ்வொரு ரீலாக போட்டுப் பார்த்து கடகடவென்று நோட்ஸ் எழுதிக் கொடுத்துவிடுவாராம். புதிய இயக்குனர்களாயிருந்து பின்
புகழ்பெற்றுவிட்ட இயக்குனர்கள் சிலர் இளையராஜாவிடம் ஏன் இன்னும் யார் யாருக்கோ இசையமைக்கிறீர்கள் ? என்று கேட்க அவர் நீங்களும் புதிதாய் வந்தபோது நான் உங்களுக்கு இசையமைத்தேனே அதுபோலத் தான் இவர்களும் என்றாராம்.
இப்போது புதிய இயக்குனர் வசந்தகுமாரின் இயக்கத்தில் ‘ஒரு ஊர்ல’ என்கிற படத்துக்காக இசையமைக்க இருக்கிறார். இசையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதையை இளையராஜாவை சந்தித்து சொன்னாராம் வசந்தகுமார். கேட்டுவிட்டு கதையில் சில திருத்தங்களை இளையராஜா சொல்லியிருக்கிறார். அந்தத் திருத்தங்களை மறுத்து ‘இது உண்மைச் சம்பவம் அதனால் அப்படியே சொல்ல நினைக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். ‘உண்மைச் சம்பவம் என்றால் என்னவேண்டுமானாலும் சொல்லலாமா?’ என்று கேட்டுவிட்டு ‘இப்படத்திற்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு வசந்தகுமார் ‘உங்கள் இசையில் தான் இது படமாகவேண்டும் என்பது என் ஆசை. நீங்கள்
இசையமைக்காவிட்டால் இது கதையாகவே அப்படியே இருக்கும். படமாக எடுக்க மாட்டேன்’ என்றிருக்கிறார். ‘சிரித்தபடியே படத்துக்கு இசையமைத்துத் தந்தாராம் இளையராஜா.
இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் இளையராஜா சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் மைல்ட் அட்டாக் ஏற்பட்டது. அதனால் ஆஞ்சியோ செய்திருக்கிறார்கள். அவர் குணமடைந்துவிட்டார் என்றும் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.