திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் ஆடியோ வெளியீடு எளிமையாக சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் எம்.ஜிப்ரானின் இசையில், புது இயக்குனர் அனிஸின் இயக்கத்தில் ஜனவரியில் வரவிருக்கிறது இந்தப் படம். படத்தின் தலைப்பே இந்து மற்றும்
இஸ்லாமிய மதங்கள் சம்பந்தமானது என்று ஹிண்ட் கொடுக்கிறது. அதைப் போலவே ஒரு பாடல் கர்நாடக ஸ்டைலிலும் மற்ற பாடல்கள் அனைத்தும் இஸ்லாமிய இசை, வடக்கிந்திய இசை தொனியிலும் அமைந்திருக்கின்றன. சில முறை கேட்ட பின்னரே பாடல்கள் நமக்குப் பரிச்சயமாகின்றன.
சில்லென்ற சில்லென்ற – சுந்தர் நாராயண ராவ், கௌஷிகி சக்ரவர்த்தி
பாடல் – காதல் மதி,முன்னா ஷௌக்கத் அலி
ஒரு அருமையான கவ்வாலிப் பாடலாக ஆரம்பமாகும் இந்தப் பாடல் சுந்தர் மற்றும் கௌஷிக்கின் குரலில் கவ்வாலிப் பாடல் ட்யூனிலேயே ஒரு நல்ல மெலடியாக விரிகிறது. பாடல் வரிகள் அருமை.ஹிந்தி வரிகளுக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனாலும் இரண்டையும் கலந்திருப்பது நன்றாயிருக்கிறது.
என்தாரா என்தாரா – ஷதாப் ஃபரிதி, சின்மயி
பாடல் – கார்த்திக் நேதா
ஷதாப் ஃபரிதி மற்றும் சின்மயி பாடும் டூயட் பாடல். மெலிதான ஹிந்தி ஸ்டைல் வெஸ்டர்ன் பாடலாக இருக்கிறது. கேட்கலாம்.
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் – விஜய் பிரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி, டாக்டர் ஆர்.கணேஷ்
பாடல் – பார்வதி
சாதனா சர்கம் மற்றும் விஜய் பிரகாஷின் குரலில் வரும் கர்னாடக இசை டூயட் பாடல். கேட்கக்கூடிய மெலடி. சாதனா சர்கம்மின் குரல் கொஞ்சுகிறது. விஜய் பிரகாஷின் குரல் இளம் ஷங்கர் மகாதேவனின் குரலை ஞாபகப்படுத்துகிறது.
க்வாஜா ஜி – அரிஃபுல்லா ஷா காலிஃப் ஈ ரிஃபாயீ
பாடல் – நஸீமி
முழுக்க முழுக்க ஹிந்திப் பாடலாக வரும் இந்தச் சிறிய பாடல் இனிமையான கவ்வாலி டைப் பாடல். அரிஃபுல்லாவின் குரல் வசீகரிக்கிறது.
ரயிலே ரா – பான்னி சக்ரவர்த்தி, நிவாஸ், ‘இசை மழை’ ஹரேஷ் மற்றும் அஷ்விதா
பாடல் – தேன்மொழி தாஸ்
ரயில் பயணத்தின் போது வருவது போன்ற பாடல். இசை மழை புகழ் ஹரேஷ்ஷூம் மற்றும் அஷ்விதாவும் உடன் பாடியிருக்கிறார்கள். ஃபாஸ்ட் பீட் பாடல். வடக்கிலிருந்து வரும் ரயிலோ ? தேன்மொழி தாஸின் தத்துவ வரிகள் பரவாயில்லை. கேட்கலாம்.
யாரோ இவள் – யாசின் நிஸார்
பாடல் – பார்வதி
தாண்டியா ஸ்டைல் பாடல். நாயகன் காதலியை பாரத்ததும் பாடும் பாடல் போன்ற பாடல். யாசின் நிஸாரின் பின்னணிக் குரலும் உண்டு. பார்வதியின் வரிகள் நன்றாயிருக்கின்றன.
சிக்கர் (Traditional)
லாயி லா ஹா இல்லல்லா என்கிற இஸ்லாம் மதத்து பாடல். சிறிய பாடல். படத்தின் ஏதோ ஒரு முக்கிய காட்சியில் பின்னணி இசையாக வர வாய்ப்பிருக்கிறது.
புது இசையமைப்பாளராக இருந்தாலும் ஜிப்ரான் துணிந்து பல புதுமுகப் பாடகர்களை, புதுப் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது இசைக் கலவை பரந்துபட்டு பல கருவிகளையும் தேடி இணைத்திருக்கிறது. சில்லென்ற சில்லென்றவும், க்வாஜா ஜியும் எனக்குப் பிடித்தவை. படம் ஹிட்டாகும் பட்சத்தில் பாடல்கள் இன்னும் ஹிட்டாகும்.
ஹலோ தமிழ் சினிமாவின் சார்பாக வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
–மருதுபாண்டி.
—————————————————————-