நடிகை சுஹாசினி 1980களில் பிரபலமாக விளங்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக ’80ஸ் க்ளப்’என்று ஆண்டுதோறும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். 2009லிருந்து தொடர்ந்து ஐந்து வருடங்களாக வருடத்தில் ஒருநாள் இந்த சந்திப்பு நடந்துவந்துள்ளது.1980களில் முன்னணி
நட்சத்திரங்களாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து விருந்துண்டு மகிழ்வார்கள். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசைபோடுவார்கள். இந்த ஆண்டுக்கான சந்திப்பு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சென்னை ஈஞ்சம்பாக்க பண்ணை வீட்டில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் ஒரு விதிமுறையாக யாரும் தனது குடும்பத்தை உடன் அழைத்துச் செல்வதில்லை. இவர்கள் முதல்முறை சந்தித்தபோது ரஜினிகாந்த் சொன்ன ஐடியாவாம் இது. சந்திப்பின்போது எல்லோரும் தீம் உடையணிந்து வருவார்கள். இந்த முறை ஹவாய் தீவு உடைகளணிந்து அனைவரும் வந்திருந்தார்கள்.
விருந்தில் நடிகைகள் ராதா, அம்பிகா, ராதிகா சரத்குமார், சுஹாசினி, லிசி, ரேவதி, குஷ்பு, சுமலதா, சரிதா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், நதியா, நடிகர்கள் மோகன், சுமன், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் கோச்சடையான் படவேலையால் வரமுடியாது என தெரிவித்திருந்த ரஜினிகாந்த் திடீர் வருகை புரிந்து ஆச்சரியப்படுத்தினாராம்.
விருந்தில் கமல் ஹாஸனை காணவில்லை.அவர் தனது படவேலையாக இருந்ததால் வரமுடியவில்லை என்றும் அடுத்த ஆண்டு சந்திப்பில் கட்டாயம் கலந்துகொள்வதாகவும் தகவல் தெரிவித்தாராம்.