அழகிரியை கட்சியிலிருந்து சேர்த்தது தப்பா? நீக்கியது தப்பா ? என்று நீங்கள் குழம்பி யோசிக்காதீர்கள். இந்த ‘தப்பு’க் கருணாநிதி புதுமுக இயக்குநர் கருணாநிதி என்பதைச் சொல்லிவிடுகிறோம். இவர் இயக்கவிருக்கும் படம் தான் ‘ஆதி தப்பு’.
“சில தொழில்களுக்கான சமூக மரியாதை இன்னும் ஏற்படவில்லை. சமத்துவம், சகோதரத்துவம், என தெருவுக்குத் தெரு பேசிக்கொண்டிருந்தாலும் சாதீய ரீதியான தொழில்கலைஞர்களாகவே இன்னும் சிலர் பார்க்கப்படுகின்றனர். ஆதிமனிதன் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தயாரித்த இசைக்கருவி தான் ‘தப்பு’ என்பார்கள். இன்று அந்த தப்புக்கருவிக்கான சமூக அங்கீகாரம் என்பது தாழ்ந்ததாகவே உள்ளது.
தலைமுறைகள் கடந்தும் அதை ஒரு நல்ல இசைக்கருவியாக அங்கீகரிக்கத் தவறிவிட்டோம். அதன் மதிப்பை எடுத்துரைக்கும் படமாக ‘ஆதி தப்பு’ இருக்கும். சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே படத்தின் மையக்கரு.
சந்தோஷ்குமார், யுகவர்த்தினி, பவானி சிவம் போன்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பரம்பரை தப்பாட்டக் கலைஞர்களைக் கொண்டு பெரும்பான்மையான காட்சிகளை எடுத்துள்ளேன்” என்கிறார் கதை, வசனம், எழுதி இயக்கும் இந்த இளைஞர் கருணாநிதி. அது 90 வயது இளைஞர் கருணாநிதியின் பழைய பராசக்தி போல் புதுமையாய் வர வாழ்த்துக்கள்.