சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அதிகப் படங்களுக்கு பாட்டு எழுதியவர் என்கிற பெயரை தட்டிச் சென்றுள்ளார் நா.முத்துக்குமார். கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்த முதலிடத்தில் இருந்து வருகிறார் முத்துக்குமார்.
எவ்வளவோ புதுவரவுகள் இருந்தும், முன்பு போல் யாரும் யாருடைய வளர்ச்சியையும் தடுத்துவிடாதபடியும் சூழல்கள் இருந்தும் இதைச் சாதித்திருக்கிறார் முத்துக்குமார்.
முப்பத்து நான்கு படங்களில் 106 பாடல்களை சென்ற ஆண்டு மட்டும் எழுதியிருக்கிறார். சினிமாவில் பாடல் எழுதுவது கலையாக இல்லாமல் வெறும் வார்த்தைத் திறனாக மாறிவிட்டது. அதே வழியை பெரும்பாலும் பின்பற்றி தொடர்ந்திருக்கிறார் முத்துக்குமார். இருந்தாலும் அதில் தங்கமீன்களில் வந்த ஆனந்தயாழை மீட்டுகிறாய் போன்ற சில தரமான பாடல்களையும் தந்திருக்கிறார்.
இந்த ஆண்டில் ‘தலைவா’, ‘வணக்கம் சென்னை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘மூன்றுபேர் மூன்றுகாதல்’ போன்ற படங்களில் இவருடைய பாடல்கள் வெகுவாக ரசிக்கப்பட்டன. தற்போது சேரனின் ‘ஜே.கே’., ராமின் ‘தரமணி’, வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களில் தற்போது எழுதிவருகிறார்.