நடிகர்கள் தானே படம் தயாரிக்கவும் ஆரம்பிக்கும் ட்ரண்ட் முதலில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களிடம்தான் இருந்தது. கடந்த ஐந்தாறு வருடங்களாக புது நடிகர்கள் தங்களது மார்க்கெட் கொஞ்சம் நன்கு பிக்கப் ஆனவுடனேயே படம் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
பினாமியில் பணம் வைத்துக்கொண்டு இருக்கும் நிறைய பேர் அவர்களது பணங்களை ரகசியமாய் எடுத்துவிட முன்வருவதால், நடிகர்கள் தங்கள் தொடர்புகளின் மூலம் பணம் புரட்டுவது எளிதாவது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம் தங்களது மார்க்கெட் நல்லாயிருந்தால் ஓடப்போகும் படத்தினால் கிடைக்கும் பெரும் லாபத்தையும் தயாரிப்பாளர் என்கிற முறையில் தானே அடையும் நோக்கம்.
நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர் நீச்சல்’ எடுத்தார். அது ஹிட்டானது. இப்போது தான் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தையும் தனது தயாரிப்பில் வெளியிடுகிறார். ‘பாண்டிய நாடு’ படத்தின் மூலம் தனது தந்தையைப் போல் தானும் தயாரிப்பாளரான விஷால் அடுத்தபடியாக தானே நடிக்கும் ‘நான் சிவப்பு மனிதன்’ ஐ தயாரித்து வெளியிட இருக்கிறார். ஆர்யா சுகா இயக்கும் ‘படித்துறை’ படத்தை தயாரிக்கிறார்.
இதுபோல நடிகர் சூர்யா ‘டி2′ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி புது இயக்குனர்களுக்கு குறைந்த பட்ஜெட் படங்களில் நல்ல கதை டைப்பில் படவாய்ப்புக்கள் வழங்கும் ஐடியாவை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். சென்ற ஆண்டில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதியும் தான் நடிக்கும் “சங்குத் தேவன்’ படத்தை தானே தயாரிப்பதுடன் புதுமுகங்கள் நடிக்கும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்கிற படத்தையும் தயாரிக்கிறாராம்.
சினிமாத்துறையில் கார்ப்பரேட் பெரும் பணக்காரர்கள் ஈடுபட்டது குறைவதும், குறைந்த பட்ஜெட் படங்களை டிஜிட்டலில் மிகக் குறைவான செலவில் எடுக்கமுடியும் என்கிற நிலை ஏற்பட்டதும் இதன் காரணங்களாக இருக்கலாம். வரட்டும். நல்ல படங்கள் வரட்டும்.