பத்மபூஷண் விருதுகள் வழக்கமாக கலை உலகில் சாதித்து முடித்த சாதனையாளர்களின் அந்திமக் காலத்தில் அல்லது மேனேஜ்மண்ட் கோட்டாவில் வேண்டியவர்களுக்கு வழங்கப்படும். இந்த முறை பத்ம பூஷண் பெற்றவர்களில் நிஜமாகவே சாதனைகளின் உயரத்தைத் தொட்ட நடிகர் கமல்ஹாசனும் உண்டு. சென்னையில் எல்டாமஸ் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதைப் பகிர்ந்துகொண்டார். இந்த விருது மற்றவர்கள்
போல் தனது சாதனைகளின் முடிவல்ல; மாறாக ஆரம்பத்தைக் குறிக்கும் என்று உறுதியுடன் கூறுகிறார் இந்த 55 வயது இளைஞர். சாதனையாளரே என்றாலும் இந்துத்துவாவை மறைமுகமாகப் பேசுவதிலும், அரசுகள் சொல்லும் தீவிராவத, பயங்கரவாத நியாயத்தை ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களில் வழிமொழிவதிலும் இவர் ஒரு ‘அரசு தேசியவாதி’ ஆதலால் அந்த வகையிலும் இந்த விருதுக்குத் தகுதியானவர்தான்.
நீங்கள் பத்மபூஷண் விருது பெற்றது பற்றி கூறுங்கள்?
இந்த விருதுக்குத் தகுதியான எத்தனையோ பேர் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு வித்தை கற்றுக்கொடுத்தவர்கள், என்னை கைப்பிடித்து அழைத்து வந்தவர்கள் கூட எத்தனையோ சாதனைகள் செய்தும் இந்த விருது பெறாமல் போய்ச்சேர்ந்துவிட்டார்கள். அதற்கான தகுதி இல்லாவிட்டாலும் எனக்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே. இந்தப் பெருமைக்குத் தகுதியுள்ளவனாக இனிமேல் என்னை ஆக்கிக்கொள்வேன். அதற்காக உழைப்பேன்.
விருதுகள் பற்றி சர்ச்சைகளும் உண்டே. உங்கள் விஷயத்தில் எப்படி?
ஒருவரின் சாதனைக்கு மக்கள் கொடுக்கும் அங்கீகாரமே முதன்மையானது. தொடர்ந்து பணிசெய்ய ஊக்குவிக்கும் இந்த விருது அடுத்த கட்டமே. இதை அந்த இடத்தில் வைத்துத்தான் பார்க்கவேண்டும்.
ரஜினி வாழ்த்தினாரா?
இன்னும் இல்லை. ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார். நிதானமாக எல்லா பரபரப்புக்களும் முடிந்தபின் வந்து வாழ்த்துவார்.
25 வருடங்களாக விளையாட்டுலகில் சாதனை புரிந்து மக்கள் மனதில் இடம்பிடித்த சச்சினுக்கு பாரத ரத்னா கிடைத்தது. 50 வருடங்களாக சாதனைகள் பலபுரிந்து மக்கள் மனதில் இருக்கிறீர்கள். உங்களுக்குக் கிடைக்கவில்லையே!
இதெல்லாம் சுதந்திரப் போராட்டம் மாதிரி. சம்பளம் போல எதிர்பார்த்து நிற்கக்கூடாது. பரிசு போல கிடைத்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். கொடுக்கவில்லையென்றாலும் கவலை இல்லை. பாரத ரத்னாவுக்கான தகுதிகளை ஒருநாள் நான் அடையக்கூடும்.
விருதை யாருக்கு சமர்ப்பிக்கிறீர்கள் ?
எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும், என்னுடன் இணைந்திருந்த குடும்பத்தாருக்கும், வழிகாட்டிகளுக்கும், சண்முகம் அண்ணாச்சி, பாலசந்தர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
விஸ்வரூபம் அனுபவம் பற்றி ? அதன் வெளியீட்டில் நாடே திரும்பிப்பார்க்க நடந்த பிரச்சனைகள்.. அதனால் ஏற்பட்ட காயங்களுக்கு இதை மருந்தாகக் கருதிக்கொள்வீர்களா?
எனக்கு வரும் இகழ்வுகளை தனிச்சொத்தாக கருதிக்கொள்வேன். புகழ் வரும்போது பங்கிட்டு அனைவருக்கும் கொடுப்பேன். விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரையும் அப்படித்தான். இதை அந்தக் காயங்களுக்கான மருந்தாக எடுத்துக்கொண்டால் கொடுக்கல் வாங்கல் போல ஆகிவிடுமே. (சரிதான் விஸ்வரூபம் வசூலித்த 100 கோடியே இவர் காயங்களை ஆயிரம் மடங்கு ஆற்றியிருக்குமே. இவரால் மனக்காயப்பட்ட முஸ்லீம்கள் பதிலுக்குப் படம் எடுத்தா தங்கள் காயத்தை ஆற்றமுடியும்?)
வைரமுத்துவுக்கும் விருது கிடைத்திருக்கிறதே..
மகிழ்ச்சியான விஷயம். அவருக்கு கிடைக்கும் எல்லாப் புகழும் எனக்குக் கிடைத்தமாதிரி.
ஆஸ்கர் விருது பற்றி..
இந்த ஊரில் வியாபாரம் செய்ய ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் போதும். வெளிநாட்டில் வியாபாரம் செய்ய யு.எஸ்.ஐ சான்றிதழ் வேண்டும். அவர்களுக்கு நானும் எனக்கு அவர்களும் தேவைப்படும்பேது எல்லாமே சாத்தியமாகும்.
கலையில் சாதித்த பலரும் வேறு எதையாவது தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் விஷயம் எது ?
நிறைவு என்பது ரசிகர்களுக்குத் தான் வரவேண்டும். பசி மாதிரிதான். பூர்த்தியடைந்த பின்பும் தேடுதலை நிறுத்த முடியாது. தொழில் நுட்பங்களும், சினிமா நுட்பங்களும் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்த நேரத்தில் போதுமென்ற மனம் பொன் செய்யாது.
65 ஆண்டு குடியரசாகி.. இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறதா ?
குடியரசை எட்டிவிட்டது என்பதற்கான எல்லா அடையாளங்களும் எட்டவில்லை என்பதற்கான எல்லாச் சான்றுகளும் உள்ளன. முழு வெற்றி தென்படவில்லை. ஜாதி இன்னும் ஒழியவில்லை. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடிய பாப்பாக்களுக்கு கொள்ளுப் பேத்திகளே வந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் ஜாதிக்காக ரத்தம் வடிந்துகொண்டுதானிருக்கிறது. குடியரசாகி 65 ஆண்டுகள் என்பதை 6.5 வயது என எடுத்துக்கொள்ளலாம்.
அரசியலுக்குள் வருவது பற்றி..
5 வருடங்களுக்கு ஒருமுறை அரசியலுக்குள் இருக்கிறேன். கை விரலில் மட்டும் கறை போதும். கை முழுவதும் வேண்டாமே. (எந்தக் கை சார் ?)
விஸ்வரூபம் -2 ,மருதநாயகம் ?
விஸ்வரூபம் – 2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இசைக் கோர்ப்பு, எடிட்டிங் என பெரும்பான்மையான பணிகள் தொடரவிருக்கின்றன. மருதநாயகம் செய்யவேண்டும்.
ரசிகர்களுக்கு சொல்ல விரும்பவது ?
இந்த விருது எனக்கு ஒரு ஊக்கிதான். இந்த உயரம் போதும் என்று நானும் சோர்ந்துவிடக் கூடாது ரசிகர்களாகிய நீங்களும் என்னை விட்டுவிடக்கூடாது. மொழி, இனம் கடந்து என்னை ஏற்றுக்கொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.
சுயசரிதை எழுதும் எண்ணமுண்டா?
நிஜம் பேசுகிறோம் என்கிற தைரியத்தில் எல்லோரையும் புண்படுத்திவிடக்கூடாது. என்னைப் பற்றி என்னென்ன சந்தேகங்கல் உங்களுக்கு இருக்கிறதோ அதுவெல்லாம் அப்படியே இருக்கட்டும்.