“தடைகள் இல்லாவிட்டால் வாழ்வில் ருசி இல்லை. துன்பமில்லாத வெற்றிக்கு சுவையில்லை. இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. ஒன்று நேராகவும் மற்றொன்று வளைந்து வளைந்தும் வளர்ந்திருந்ததாம். இரண்டு மரங்களில் மனதைக் கவர்ந்தது எது என்ற கேள்வி எழுந்தது. சிலர் நேரான மரம் என்றார்கள்.
சிலர் வளைந்த மரம் என்றார்கள். நேரான மரத்தில் மனது உடனடியாக நேராக மரத்தின் உச்சிக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் வளைந்த மரத்தில் மனது ஒவ்வொரு வளைவிலும் மனது நின்று நின்று செல்கிறது. எனவே மனதை அதிகம் கவர்வது வளைந்த மரம்தான் என்று தீர்ப்பு சொன்னார்களாம். நாம் வாழும் வாழ்க்கையும் அப்படித்தான். துன்பங்களாலும், தடைகளாலும் வளைந்து நெளிந்து போகிற வாழ்க்கையில்தான் அதிகம் ருசி உணரப்படுகிறது.
நானும் என் எழுத்தும் இளமையாக இருப்பதாக நண்பர்கள் மேடையில் பாராட்டுவார்கள். வாழ்வை நேசிக்கிறவன் இளமையாக இருக்கிறான். சூரியன் மிகப் பழையது. ஆனால் ஒவ்வொரு நாளும் வரும் சூர்யோதயம் புதிது. நிலா மிகப் பழையது. ஒவ்வொரு சந்திரோதயமும் புதியதும். பூங்கொடி பழையது. ஆனால் அதில் பூக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் புதியவை. வாழ்க்கையும் அப்படித்தான்.
மனிதன் இயல்பிலே குறைகளுடையவன். அவன் வாழ்வில் நிறைய வெற்றிடங்களே இருக்கின்றன. அந்த வெற்றிடத்தை நிரப்ப ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிகளே நாம் வாழும் வாழ்க்கை. ஆண் பெண்ணைக் கொண்டும், பெண் ஆணைக் கொண்டும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முயன்றும் அது நிறைந்துவிடுவதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் இன்னொரு முயற்சியே கலை.” ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசிய நிஜமான தத்துவ வரிகள் இவை. சினிமாவை முழுக்க தானே ஆக்கிரமித்து எழுதும் தனது ஆட்சிக் காலம் முடிந்துவிட்டதால் தனக்கு மனதில் ஏற்பட்ட வெற்றிடத்தை அவர் குறிப்பிடவில்லை என்று நாம் நம்பலாம்.