திருநங்கை லீமா ரோஸ் கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் சூதாட்டம் எவ்வாறு நடக்கிறது? அதில் புக்கிகள் எவ்வாறு பெட் பேரம் பேசுகிறார்கள் என்பது உட்பட பல பிண்ணணி விஷயங்களை அதில் காட்டப்போவதாகக் கூறியிருந்தார். லீமா ரோஸின் படம் பற்றி மேலதிக தகவல்கள் எதுவும் காணோம்.
இப்போது கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் காமெடி பிண்ணணியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் ரஜினியின் ‘தில்லு முல்லு’வை ரீமேக் செய்த பத்ரி. படத்தின் பெயர் ‘ஆடாம ஜெயிச்சோம்டா’. இதற்காக கிரிக்கெட் சூதாட்ட நபர்களைப் பின்தொடர்ந்து கண்காணித்து கதையமைத்திருக்கிறாராம். ‘டபிள்யு.வி. ராமன், சடகோபன் ரமேஷ், பத்ரிநாத் போன்ற கிரிக்கெட் பிரபலங்களிடம் அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டு திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம்.(லீமா ரோஸூம் இதேமாதிரி சொன்னதா ஞாபகம். இவருமா ?)
கிரிக்கெட் சூதாட்டத்தின் உண்மையான வில்லன்கள் அதை உருவாக்கிய சீனிவாசன் போன்ற ஐ.பி.எல். முதலாளிகளே என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவர்களை சட்டங்களே தண்டிக்காமல் விட்டுவிட்டன. மூளை மழுங்கிய ரசிகர்களோ (நீங்களே தான் பாஸ்!) தான் ஏமாற்றப்படுவது பற்றி எந்த சொரணையும் இல்லாமல், ஐ.பி.எல்லை புறக்கணிக்காமல் அடுத்த மேட்ச்சைப் பார்க்க ஆவல் கொண்டு திரியும் அரை லூசுகளாய் மாறிவிட்ட நிலையில் சூதாட்டம் பற்றிய இந்தப் படங்கள் அதை எவ்வளவு தூரம் வெளிக்கொண்டுவரும் ?
அப்படியே உண்மையை வெளிக்கொண்டுவந்தாலும் பல்லாயிரம் கோடியின் அதிபர்களான ஐ.பி.எல் சூதாடிகள் இப்படங்களை சிலகோடிகளுக்கு வாங்கி ஏப்பம் விட்டுவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதனாலே படம் வந்தா பாப்போம். வராட்டி .. ஐ.பி.எல் பார்ப்போம்.