ஆனந்தபாபு நடித்து எண்பதுகளில் வெளிவந்த பாடும் வானம்பாடி படம் ஹிந்தியில் வெளிவந்த டிஸ்கோ டான்சர் என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். பாடலையும் நடனத்தையும் மையமாகக் கொண்ட இந்தப் படத்தை இயக்கியவர் ஜெயக்குமார். இதில் ஆனந்தபாபு தன் தந்தை நாகேஷிடமிருந்து கற்ற
வித்தியாசமான நடன அசைவுகளை பயன்படுத்தியிருப்பார். படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
அதற்குப் பின்னர் பல படங்களில் நடித்து பின் திரையுலகிலிருந்து காணாமல் போனார் ஆனந்தபாபு. பின் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். அதன்பின்பு தான் தெரிந்தது அவர் மனநலப்பாதிப்பிலிருந்து மீண்டு வந்த விஷயம். ஆதவன் படத்திற்குப் பின்பும் அவர் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழவே விரும்பினார்.
தற்போது ‘ஜமாய்’ என்ற படத்தை ஜெயக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கவிருக்கிறார். அது ஒரு இசைக்கலைஞனின் மீது காதல் கொள்ளும் ஒரு இசை ரசிகையைப் பற்றியது. படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருப்பதோடு, இசைக்குழுவும் வருகிறது. அதற்கு மாஸ்டராக நடனமும், இசையார்வமும் உள்ள நடிகராக மீண்டும் ஆனந்தபாபுவையே ஜெயக்குமார் தேர்ந்தெடுத்து அவரை அணுகினார். கதையைக் கேட்டவுடன் ஆர்வமாக மீண்டும் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தாராம் ஆனந்தபாபு.