கோச்சடையான் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஞாயிறன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், நாசர் போன்ற படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன், பாலசந்தர், இயக்குனர் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், வைரமுத்து போன்றோரும் கலந்துகொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் ரஜினிகாந்த் ஆடியோவை வெளியிட்டார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக 3-டி மோஷன் கேப்சர் என்கிற தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் இது ஒரு சரித்திரப் படமாகும். இந்த கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் சுமார் 40 கேமராக்களைக் கொண்டும், நடிகர்களின் உடலில் பல முக்கிய இடங்களை கம்ப்யூட்டருடன் இணைத்தும் அவர்களின் நடிப்பு அசைவுகளை பதிவுசெய்து பின்பு அதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவத்தின் நடிப்பாக மாற்றுவது நடைபெறும். ஹாலிவுட்டில் ஹியூகோ, ஸ்பீல்பெர்க்கின் டின்டின் போன்ற படங்கள் இத்தொழில்நுட்பத்தை அற்புதமாகக் கையாண்ட படங்கள். தமிழில் சுமார் 125 கோடி ரூபாய்ச் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் கோச்சடையான் அந்தத் தொழில்நுட்ப நேர்த்தியைக் கொண்டிருக்கிறதா என்பது இன்னும் கேள்விக்குறியே.
நீணட நாட்களுக்கு முன்பு சிந்துபாத் என்று ஒரு படம் இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது. கோச்சடையானின் ட்ரெய்லர்களைப் பார்க்கும்போது ரஜினி ஸ்டைலாக நடந்துவருவதை காலை இழுத்து நடந்து வருவதுபோலக் காட்டும் அளவுக்குத் தான் இப்படத்தில் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதா ?என்ற கேள்வி எழாமல் இல்லை.
படத்திற்கு இசையமைக்க ஆரம்பத்தில் தயங்கிய ரஹ்மான் பின்பு ரஜினி தலையிட்டு பேசியபின்பே இசையமைக்க சம்மதித்திருக்கிறார். படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கின்றன.
விழாவில் பேசிய வைரமுத்து கோச்சடையான் என்றால் கொன்றைப் பூ சூடிய சிவபெருமான் என்று அர்த்தம் என்று படத்தலைப்பை விளக்கினார். படத்தில் கோச்சடையான் என்கிற மன்னராகவும், ராணா, சேனா என்கிற அவரது இரு மகன்களாகவும் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இளவரசி வதனாதேவியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஷோபனா, ஆதி போன்றோரும் நடிக்கிறார்கள்.
படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் 3டி மற்றும் 2டியாக வெளியிடப்படுகிறது.படத்தின் இயக்குரும் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா மேமாதம் நடக்கவிருக்கும் கேன்னஸ் விழாவில் படம் திரையிட முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம் என்றார்.