நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேந்திரன் மீண்டும் சினிமா இயக்கவிருக்கிறார். ஏற்கனவே ஒரு படம் இயக்கினார். அது அவருடைய முந்தைய பழைய படங்களின் தரத்தில் இல்லை. சமீபத்தில் புதுமைப்பித்தன் சிறுகதையின் வரிகளைப் படித்து அதில் சில வரிகள் தந்த பாதிப்பிலிருந்து இந்தப் புதிய படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளாராம்.
மகேந்திரன் இளையராஜா கூட்டணியின் முள்ளும் மலரும் கூட பத்திரிக்கையில் வந்த ஒரு சிறுகதையை மையமாகக் கொண்டு அவர் எழுதிய திரைக்கதை தான். தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமானதொரு படங்களில் ஒன்றாக முள்ளும் மலரும் இருக்கிறது.
சென்றமுறை இளையராஜா-மகேந்திரன் இணைந்து பணியாற்றிய படம் 1984ல், ரஜினி, ரேவதி நடித்து வெளிவந்த கை கொடுக்கும் கை. அதற்குப் பின் மீண்டும் இருவரும் இணையும் படம் இது. முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் அனுபவம் மிக்க நடிகர்கள் நடிக்க மற்ற பாத்திரங்களில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
வர்த்தகமாக மாறியுள்ள கலாசார மாற்றங்களால் குடும்பங்களிலும், உறவுகளிலும் சிதைந்து போய்விட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் கதையாக இது இருக்கும் என்கிறார். மகேந்திரன் மீண்டும் ஒரு உதிரிப்பூ போன்ற க்ளாசிக்கை கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.