இளையராஜாவின் மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் மகள் பவதாரிணி ஆகியோர் ஏற்கனவே இசையமைப்பாளர்களாக இருக்கிறார்கள். யுவன் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். கார்த்திக் ராஜாவும், பவதாரிணியும் பலபடங்களுக்கு இசையமைத்திருப்பதுடன் இளையராஜாவிடமும் பணிபுரிந்து வருகிறார்கள்.
கார்த்திக் ராஜா தந்தையைப் போலவே இசைஞானம் இருந்தும் சரியாக பிரகாசிக்காமல் போய்விட்டார். ஒரு காரணம் அவருக்கு இருந்த தலைக்கனம் என்கிறார்கள். ஆரம்பகாலங்களில் நிறைய படவாய்ப்புக்கள் வந்தும் அவர் இசையில் நிறைய தெரிந்தவன் என்கிற ரீதியில் மற்றவர்களை அலட்சியமாக நடத்தியதால் படிப்படியாக வாய்ப்புக்களை கெடுத்துக்கொண்டார் என்பார்கள். அவரது தந்தை இளையராஜாவின் மீதே இதுபோன்ற குற்றச்சாட்டு உண்டு எனினும் அவருடைய அசாத்திய இசைஞானமும், மலைபோன்ற சாதனைகளும், சமயங்களில் மிகவும் கஷ்டப்படுகிறவர்களுக்கு இசையால் பெரும் உதவிகளைச் செய்துவிடும் அவருடைய தன்மையும் அந்தக் குற்றச்சாட்டுக்களை பெரிதாக்கிவிடவில்லை.
ரஹ்மானின் அலை இந்தியா முழுவதும் எழுந்த பின்பும் அந்த அலைகளின் மீது பயணிக்கும் சமகாலத்தவராக ராஜாவின் வாரிசுகளில் யுவன் மட்டுமே இருக்கிறார். இளையராஜாவின் பாடல்களுக்கும் இசைக்கும் இன்னும் மவுசு குறைந்துவிடவில்லை. அவருடைய இசையும் ரஹ்மானின் அலைகளையும் கடந்து காலத்தைத் தாண்டி இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது இன்னும் எவ்வளவு காலத்தை தாண்டி நிற்கும் என்பது இளையராஜா ‘மற்ற இசைகளெல்லாம் இரைச்சல்’ என்கிற தனது வெறுப்பான பார்வையிலிருந்து வெளிவந்து உலக இசைகளையும் இசைக்கருவிகளையும் தமிழுக்குக் கொண்டுவருவதைப் பொறுத்தது.
இப்போது இசைராஜாவின் குடும்பத்திலிருந்து இன்னுமொரு வாரிசு இசையில் இறங்குகிறது. அது பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவா. ‘மகா மகா’ என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். முழுக்க ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது இப்படத்தின் கதை.
ஆஸ்திரேலியாவிற்கு வேலைபார்க்கச் செல்லும் ஹீரோவிற்கு அங்கு வாழும் ஆஸ்திரேலியப் பெண் மீது காதல் வருகிறது. திடீரென்று அநதப் பெண் காணாமல் போய்விடுகிறார். அவரை போலீஸ் உதவியுடன் ஹீரோ தேடிக் கண்டுபிடிக்கிறாரா ? இல்லையா ? என்பதுதான் கதை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெலிசா என்பவர் நாயகியாக நடிக்க புதுமுக இயக்குனர் மதிவாணன் கதை எழுதி இயக்குவதோடு ஹீரோவாக நடிக்கவும் செய்கிறார்.
பாவலர் சிவா பாவலரின், சித்தப்பா இளையராஜாவின் பெயரைக் காப்பாற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.