வில்லாவுக்குப் பின்பு திரைக்கு வந்து சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் டீசன்ட்டான த்ரில்லர் தெகிடி. தெகிடி என்றால் மாயமாக ஏமாற்றுதல் என்று அர்த்தமாம். படத்திற்கு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இந்த அரிய தமிழ்ப்பெயரை வைத்திருக்கிறார்கள். படமும் நேராக சாதாரணமாகத் தோற்றமளிக்கும் விஷயங்களுக் குள்ளிருக்கும் ஏமாற்றும் விஷயங்களைப் பற்றியது தான்.
அசோக் செல்வன் கிரிமினாலஜி படிக்கும் ஒரு மாணவர். கல்லூரிப் பேராசிரியரையே அசத்தும் வண்ணம் விஷயங்களை கூர்ந்து நோக்கும் திறமையுள்ளவர். படிப்பு முடித்த கையோடு அவருக்கு ஒரு துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.அவருக்கு சில பேரை அவர்களுக்கே தெரியாமல் கண்காணிக்கும் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் அவர் கண்காணிக்கும் நபர்கள் எல்லாம் வரிசையாக மரணத்தைத் தழுவுகிறார்கள்.
இயற்கையாகத் தோன்றும் அவர்களின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறார் அசோக் செல்வன். அவருடைய கண்காணிப்பு லிஸ்டில் அவர் காதலிக்க ஆரம்பித்த பெண் ஜனனியும் இருக்க இந்த மர்மத்தை தானே துப்பறியக் கிளம்புகிறார். அதன் பின்னே நடக்கும் விஷயங்கள் தான் படத்தின் விறுவிறுப்பான கதை.
ஹாலிவுட்டில் கணக்கின்றி இதுபோன்ற படங்கள் வந்திருந்தாலும் தமிழில் நீட்டான த்ரில்லர்கள் வரிசையில் வில்லாவுக்குப் பின் இந்தப் படத்தை சேர்க்கலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் பார்வையாளர்களை சோதித்தாலும் போகப் போக வேகமெடுக்கிறது தெகிடி. அசோக் செல்வன், அவர் நண்பராக வரும் காளி, ஜனனி, புரபசர், வில்லன்கள் பாத்திரத்துக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். படம் நடந்தவற்றை விவரிக்கும்படியாகவே செல்வதால் நடிப்புக்கென்று பெரிய மெனக்கெடல்களும் தேவையில்லாமல் இருக்கிறது.
படத்தை இயக்கிய விதத்திலும், நடிகர்களிடம் நடிப்பு வாங்கிய விதத்திலும், நுணுக்கமான வசனங்களை உபயோகித்ததிலும் ஓ.கே வாகிவிடுகிறார் இயக்குனர் ரமேஷ். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா படத்திற்கேற்ற த்ரில்லர் இசையை தந்திருக்கிறார். பாடல்கள் சுமாராக இருக்கிறது. அடுத்த படத்தில் பார்க்கலாம். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கேற்றபடி இருக்கிறது. தண்ணீர்க்கடியில் எடுத்த அந்த ஷாட்கள் எப்படி தெளிவாக எடுத்தார்கள்?
படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்காமல் போனதற்கு சில காரணங்களைச் சொல்லலாம். முதலில் படம் ஆரம்பித்தவுடன் அசோக் செல்வன் துப்பறியும் வேலையை செய்வது பற்றிய காட்சிகள் பார்வையாளர்களுக்கு சம்பந்தமில்லாமல் எதையோ காட்டுவது போலத் தோன்றச் செய்கின்றன. அதனால் கதாபாத்திரத்துடன் ஒன்றுவது சிரமமாகிறது. ஜனனி ஐயர் வந்ததும் கொஞ்சம் ஈர்ப்பு உருவாகிறது.
அடுத்ததாக அசோக் செல்வனுக்கு சந்தேகம் வரும் கணத்திலிருந்து உண்மை தெரிந்தபின் அவரே துரத்தப்படும் வரையுள்ள இடைப்பட்ட பகுதிகளில் அது இயறகையான மரணமென்றே பார்வையாளர்களுக்கும் காட்டப்பட்டிருக்கவேண்டும். அசோக் செல்வன் மட்டுமே அந்த மரணங்களை இயற்கையல்ல என்று உணரவும் அதைத் தொடரவும் செய்திருந்தால் ‘அது ஏன் இயற்கையானதல்ல?’ என்று பார்க்கும் பார்வையாளர்களும் படத்தினுள் நுழைந்திருப்பர்.
படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தபின் நடைபெறும் வில்லன் துரத்தல்கள் தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. இருந்தாலும் கடைசி க்ளைமாகஸில் திரைக்கதை அருமையான அப்சர்வேஷனுக்கு வலுசேர்த்து பார்வையாளர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
த்ரில்லர் திரைக்கதை பாதியளவுக்கு நன்றாக் இருந்தாலும் பிற்பாதியில் வலுவின்றிப் போனதும், கதையின் பாத்திரங்களை பார்வையாளர்கள் பின்தொடர சரியான முறையில் திரைக்கதை அமையாததாலும் தெகிடி நமது அதீத எதிர்பார்ப்புக்களுக்குத் தருவது தெகிடிதான்.