‘காதல்’ பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18’ வணிக ரீதியான வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்ஜெட்டில் மிகத் தரமான ஒரு கலைப்படைப்பாக மிளிர்ந்தது. தமிழ்த் திரையுலகமே வியந்து பாராட்டிய படம் அது. அப்படத்தைத் தயாரித்த லிங்குசாமி மீண்டும் பாலாஜி சக்திவேலுக்கு இன்னொரு படம் தந்திருக்கிறார்.
பாலாஜி சக்திவேலின் மீதான நம்பிக்கையும் அவருடைய படைப்பின் மீதான மதிப்புமே லிங்குசாமி இப்படத்தை தயாரிக்க முன்வந்த முக்கிய காரணங்களாக இருக்கவேண்டும். அதுபோக குப்பையான கமர்ஷியல் படங்கள் பலவற்றை எடுத்து பணம் சம்பாதித்தாலும் நல்ல தயாரிப்பாளர் என்கிற பெயர் இதுபோன்ற கலைப்படைப்புக்களை உருவாக பங்குவகிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே வருகிறது. இதுபோக லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி ஹீரோவாக நடிக்க இருப்பதும் ஒரு காரணம்.
வ.எண்.18க்குப் பிறகு தனது அடுத்த கதைக்கான திரைக்கதையை சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக எழுதி வந்துள்ளார் பாலாஜி சக்திவேல். இந்தப் புதிய படத்தின் தலைப்பு ரா.ரா.ரா. முதல் காப்பி அடிப்படையில் பாலாஜி சக்திவேலின் எஸ்.கே.டாக்கீஸ் மூலம் அவர் படத்தை எடுத்துக் கொடுக்க லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் அதை வாங்கி வெளியிடுவார்கள் என்று பேசப்பட்டுள்ளது.
கோலிசோடா விஜய்மில்டன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் மற்ற பாத்திரங்கள் அனைத்தும் புதுமுகங்களாக இருப்பதால் நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மலை மற்றும் காடு சார்ந்த இயற்கை வளம் கொஞ்சும் பிரதேசத்தில் கதை நடப்பதுபோல் வருவதால் மலைப்பிரதேசங்கள் பகுதியில் படப்பிடிப்பு இருக்கலாம். ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிடும் உத்தேசத்தில் இருக்கிறாராம் பாலாஜி சக்திவேல்.