சென்ற வாரம் டெல்லியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மபூஷன் விருதை வழங்கினார். அதைப் பெற்றதும் கமல் அவர்களுக்கு நாட்டுப் பற்று திடீரென்று உச்சமாகிவிட உடலெங்கும் புல்லரிக்க அவர் ‘இந்தியனாக’ மாறி தந்திருக்கும் உணர்ச்சிகரமான அறிக்கை இதோ..(உணர்ச்சி மேலிட எழுதியதால் நிறைய எழுத்துப் பிழைகளும் வந்திருக்கின்றன. அவற்றை பொறுத்துக்கொள்ளுங்கள்)
“ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத்தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கான பதில் எனக்கு கிடைத்தது.
எனக்கு வழங்கப்படும் விருது என்னைப் பெருமைப்படுத்த மட்டும் அல்ல. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டும் ஒருமுறை குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன்.
தேசிய கீதம் இசைத்தபோது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சட்தின் விழுது என்பதுணர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு
என்றாலும் பிடித்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியா கிரிகெட் விளையாடி வென்றால் புல்லரித்துப்போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித்தகர்களுடன் தோலுரசி நின்றதில் பெருமை கொள்கிறேன். இன்னும்
இப்பெருமைப் பெறப்போவோரையும், பெறாவிட்டாலும் தன் கடமையைச் செய்யப்போகும் இந்தியர்களையும் என் மனம் நெடுன்சான் இடையாக விழுந்து வணங்கியது” என்று கூறியுள்ளார்.
கொடுக்கப்பட்ட பத்மபூஷனை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தவர்கள் பலர் இருக்க கமல் இப்படி புல்லரிப்பு அடையும் காரணமென்ன ? மேலோட்டமாகப் பார்த்தால் நாட்டுப்பற்றை அள்ளித் தெளிக்கும் இந்த அறிக்கை, நிஜத்தில் மக்களை கைவிட்டுவிட்ட இந்த
அரசையும் அதிகாரத்தையும் காலரைப் பிடித்து கேள்வி கேட்கும் தன்மையை ஒரு நடிகனாக கமல் இழந்துவிட்டிருப்பதைக் காட்டுகிறது. 1973ல் அமெரிக்காவில் புறக்கணிக்கப்படும் அமெரிக்காவின் மூதாதைய இனமான அமெரிக்கப் பழங்குடியினருக்காக தனக்கு
கொடுக்கப்பட்ட ஆஸ்காரை வேண்டாமென மறுத்த மார்லன் பிராண்டோவா அவர்? “ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யும் ராஜபக்சேவுக்கு துணைபோகும் மத்திய அரசு தரும் விருதை நான் வாங்கமாட்டேன்” என்றா சொல்வார் ? இன்னும்
எப்படியாவது உலக நாயகனாக ஆகிவிட கனவு கானும் இளைஞர் தானே அவர். அத்தோடு அவரது சினிமாக்களில் மறைமுகமாக ஊடாடும் இந்துத்துவா கலந்த போலி நாட்டுப்பற்றை ஆதரிப்பது இந்த அரசும் எந்த அரசியலும் புரியாத பாமர ரசிகர்களும் தானே!!
ரீலீஸாகப் போகும் விஸ்வரூபம் -2 க்கு இஸ்லாமியரின் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பினால் அவரைக் காப்பாற்ற இந்த ‘இந்தியன்’ வேடம் தானே பயன்படும்? இல்லையா ?!