நார்கோலப்ஸி என்பது ஒரு வகை அரிதான தூக்க நோய். கோபம், பாசம், காமம், சோகம், அதிர்ச்சி போன்ற இன்னபிற மனித உணர்வுகள் அதீதமான அளவு ஏற்படும் போது இந்த நோயுள்ளவர் உடனே மயக்கம் வந்து தூங்கிவிடுவார். கோடியில் ஒருவருக்கு மட்டுமே வரும் இது நம் பார்லிமெண்டில் நுழையும் எம்.பி., அமைச்சர், பிரதமர் என எல்லோருக்கும் கண்டிப்பாய் தொற்றிவிடும். உதாரணமாக 2ஜி ஊழல் நடந்து பார்லிமண்டே அமளிதுமளிப் பட்டபோது
மன்மோகன்ஜி இந்த வியாதி வந்ததவர் போலவே தூக்கத்தில் நடந்ததை நினைத்துப் பாருங்கள்.
இந்த நார்கோ தூங்கிக்கோ வியாதி இருப்பவர் நம் கதையின் நாயகன் விஷால். அதைப் பற்றி தெரிந்ததும் அவர்மேல் அன்புகொண்டு அவருடன் பழகும் கல்லூரி மாணவி ‘கும்கி’ லட்சுமிமேனன் பின்னர் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார். விஷால் ஃப்ரஸ்ட்நைட்டிலிருந்து எல்லா நைட்டுகளிலும் தூங்கிவிடுவாரே என்று லட்சுமியின் அப்பா கல்யாணத்துக்கு ‘நோ’ சொல்ல அதற்கு லட்சுமி மேனன் செய்யும் அஜால் குஜால் ஐடியா என படு ரொமான்டிக்காகப் போகும் கதையில் இடைவேளையில் ரஜினிகாந்த்தின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைப் போலவே ஒரு விபரீதம் நடந்துவிடுகிறது. பிற்பாதியில் துப்பாக்கியும் கையுமாக நண்பர்களுடனும் சேர்ந்து வில்லன்களைத் துரத்தும் விஷால் தன் வியாதியின் குறைபாட்டையும் தாண்டி வில்லன்களை வீழ்த்தினாரா என்பது விறுவிறுப்பான மீதிக் கதை.
தூக்க நாயகன் விஷால் பாண்டிய நாட்டுக்குப் பின் ப்ஞ்ச் டயலாக் விடும் ஹீரோவாக இல்லாமல் கதைக்கான ஹீரோவாக இதிலும் அசத்தியிருக்கிறார். வெல்டன் விஷால். வேகமாக ஓடி வரும்போதே மயக்கம் வந்து குப்புற விழும் அந்த இடத்தில் பார்க்க பாவமாக இருக்கிறது. உயரமான கேட்பரீஸ் சாக்லெட்டாக வரும் லட்சுமி மேனனும் லவ் பண்ணும் வழக்கமான கதாநாயகி பாத்திரத்தில் மனதைப் பறிக்கிறார். பாண்டி நாட்டில் ஆரம்பித்த ஜோடிப் பொருத்தம் இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறது. போதாதற்கு முத்தக் காட்சிகள், நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடை என்று சூடேற்றும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ‘படத்திற்கு தேவைப்பட்டதால் எடுத்தோம்’ என்கிறார் விஷால். நம்பிட்டோம். இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி நன்றாக்வே வொர்க் அவுட் ஆகிறது. எப்படியோ அது கல்யாணம் என்னும் பிசிக்ஸில் போய் முடியாமலிருந்தால் சரி(ஏதோ நம்மால முடிஞ்சதை கொளுத்திப் போடுவோம்).
இது போக அன்பான, பணக்கார, பாசக்கார, ஈரமுள்ள அப்பாவாக ஜெயப்பிரகாஷ். பண்ணையாரும பத்மினியும் படத்திற்குப் பின் இவர் நடிப்பின் மேல் தனி கவனம் ஏற்பட்டுவிட்டது. விஷாலின் அம்மாவாக சரண்யா. விஷாலின் நண்பர்கள். ப்ளாஷ்பேக்கில் இனியா. நான்கு வில்லன்கள். எல்லாரும் சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பு. பாடல்களில் ஏதோ ஒன்றை மெலடியாக மீண்டும் கேட்கலாம் போலிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமார் தேவையில்லாமல் எல்லா இடங்களிலும் சஜசஜ..என்று இசையமைப்பதை தவிர்த்திருக்கிறார். பரவாயில்லை. ஒளிபபதிவு ரிச்சர்டு. எடிட்டிங் ஆண்டனி ரூபன். இருவரும் சரியாக தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் திருவின் சென்ற படம் ‘சமர்’ சரியாகப் போகவில்லை. அந்தக் குறையை இந்தப் படத்தில் நிவர்த்தி செய்ய நன்கு உழைத்திருக்கிறார். அதற்கேற்றபடி கொஞ்சம் பலனும் கிடைத்திருக்கிறது. முற்பாதி திரைக்கதையை கச்சிதமாகவும் நறுக் வசனங்களிலும் சுவராசியமாக நகர்த்தியிருக்கிறார். பிற்பாதியில் அவருக்கும் கொஞ்சம் நார்கோலெப்ஸி வந்து தூங்கிவிட்டார் போலும். முற்பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை பிற்பாதியிலும் விறுவிறுப்பாகச் செல்கிறது வில்லன் யார் என்று தெரியும் வரை. அதற்குப் பின் அந்த சஸ்பென்ஸூக்கு ஒரு துரோகம்; துரோகத்துக்கு துரோகம்; துரோகத்துக்குள் துரோகம்; என்று கொஞ்சம் காமக்கொடூரமான ப்ளாஷ்பேக் வைத்து சப்பைக் கட்டு கட்டியும் நம்ப கஷ்டமாக இருக்கிறது. இவ்வளவு விகாரமான ப்ளாஷ்பேக்கை விலாவரியாக காட்டியிருப்பதை விட அதே திருப்பங்களோடு நறுக்காகக் காட்டியிருக்கலாம்.
வில்லனின் நடிப்பும் நொண்டுகிறது. வில்லன் யாரெனத் தெரிந்த பின்பும் விஷால் பொறுமை காப்பதை விரிவாகக் காட்டியிருக்கலாம். க்ளைமாக்சில் சஸ்பென்ஸை உடை்த்து அத்தோடு ப்ளாஷ்பேக்கையும் காட்டி கதையை முடித்திருக்கலாம். க்ளைமாக்சில் நட்பைத் தாண்டி அவ்வளவு கொடூரமாக விஷால் நடந்திருக்கவேண்டிய அவசியமில்லை. இப்படி நிறைய மாற்று வழிகளில் பிற்பாதியை சொல்லியிருக்க வேண்டிய இயக்குனர் ரத்தம் சொட்ட சொட்ட சிவப்பை மட்டுமே காட்ட இறங்கியதால் நல்ல த்ரில்லர் என்ற பெயர் வர கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது.
சமரை விட இந்தப் படத்தில் ‘திரு’ கொஞ்சம் தேறிவிட்டார். படமும் தேறிவிடும். வயது வந்தவர்கள் அட்ராஸிட்டி பண்ணும் கதை என்பதால் குழந்தைக்ளோடு போய் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள்.