திரையுலகில் படங்கள் எடுக்கப்படும்போது அது குறிப்பிட்ட இனத்தவரை புண்படுத்துகிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுப்பதும் உடனே அதை அவர்களுக்கு போட்டுக் காட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க விரும்பினால் எடுப்பதும் அல்லது காட்சிகளை, டயலாக்குகளை மாற்றுவதுமான சமரசங்கள் நடப்பதும் இப்போது சகஜமாகிவிட்டது.
சமீபத்தில் வடிவேலு நடித்த தெனாலிராமன் என்கிற படம் திரைக்கு வர இருக்கிறது. இதை இன்னும் பார்க்காமலேயே இதில் தெலுங்கு மன்னன் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக யாரோ கிளப்பிவிட அதையடுத்து சில தெலுங்கு அமைப்புக்கள் செய்தது தான் விவகாரம்.
இந்தத் தெலுங்கு அமைப்பினர் தயாரிப்பாளரிடமோ இயக்குனரிடமோ தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்காமல் நேராக கூட்டமாகக் கிளம்பி நாயகனாக நடித்த வடிவேலுவின் வீட்டுக்குச் சென்று அவரை மிரட்டிவிட்டு வந்திருக்கின்றனர். அவர் உடனே பயந்துபோய் ‘எனக்கு எதுவும் தெரியலைங்க. எனக்குத் தெரிஞ்சவரை படத்தில் அப்படி எதுவும் இழிவுபடுத்தும் காட்சி இல்லைங்க’ என்று சமாதனமாகப் பேசியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட தமிழ்ச் சினிமா பிரமுகர்கள் பலரும் கொதித்து எழுந்துவிட்டனர். பிரச்சனைக்குரிய காட்சிகள் இருந்தால் அதை முறைப்படி இருதரப்பும் கலந்து பேசி சரிசெய்வதை விட்டுவிட்டு முறைப்படி இதுபோன்ற அடாவடியான செயல்கள் செய்வது இரு மொழியினத்தாருக்குமிடையே பகைமையை வளர்க்கும் செய்ல் என்று சீமான், கௌதமன் போன்ற பலர் கண்டித்துள்ளனர்.
வடிவேலு போன்ற அனைத்து தரப்பு தமிழ் மக்களாலும் விரும்பப்படுகிற ஒரு தமிழ்க் கலைஞனை இந்த மாதிரி அவமானப் படுத்தியதையும் அவர்கள் கண்டித்துள்ளார்கள். இதையடுத்து பிரச்சனை பேச்சுவார்த்தை நோக்கி திரும்பும் என்று தெரிகிறது.