மார்க்கெட் இருக்கும்போது திரையுலகினர் பெரும்பாலும் அரசியல் சாராதவர்களாகவே தங்களை காட்டிக்கொள்வதும், ஆளுங்கட்சிக்கு கூட்டமாக ஓடிப்போய் சாமியாடுவதும் சகஜமாக நாம் பார்த்துவரும் விஷயம்.
இந்த தேர்தலில் மோடியின் அலை என்று 300 கோடி செலவில் விளம்பரக் கம்பெனி ஏற்பாடு செய்து பி.ஜே.பிகாரர்கள் உருவாக்கிய அலை என்னதான் முக்கிப் பார்த்தாலும் சென்னையைத் தாண்டி நகரமாட்டாமல் நிற்க அதை தமிழ்நாட்டில் தள்ளிவிட ஆள்தேடும் நிலைமை பி.ஜே.பிக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதன் விளைவுகள்தான் திரையுலக நட்சத்திரங்களின் இந்த சந்திப்புகள். முதலில் நின்றவர் ரஜினிகாந்த். தனது மகள் ஒருவழியாய் ஒப்பேற்றிவிட்ட கோச்சடையானின் நஷ்டக்கணக்கில் அவர் போடும் லாபக்கணக்காக இது இருக்கலாம். அதனால் தான் ‘மோடி என் நண்பர். நலம் விரும்பி, எனக்கு உடம்பு சரியில்லாததால் என்னை வந்து பார்த்து நலம் விசாரித்தார். எல்லோருக்கும் தெரியும் அவர் ஒரு நல்ல நிர்வாகி..அவர் நினைத்த இடத்தை கடவுள் அருளால் அடைவார்..’ என்று முழு பூசணிக்காயை தாமரைக்குள் வைத்து மறைக்கிறார். நாளைக்கு மோடி அவுட்டானால் அம்மாவிடம் யார் டின் கட்டிக் கொள்வது ? என்கிற வருங்கால தொலைநோக்குப் பார்வையும் இந்த பூசிமெழுகலுக்குக் காரணமாக இருக்கலாம்.
அடுத்ததாக அந்த லிஸ்ட்டில் இன்று சேர்ந்திருப்பவர் நடிகர் விஜய். தலைவாவில் அம்மாவிடம் பட்ட பாடு தீர்வதற்குள் இந்த வேலையை இவர் செய்திருக்கிறார். தலைவா பட விவகாரத்தில் நான் அரசியல் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டேன் என்று சொன்னவர் இன்று முழு முகத்தையும் காட்டி நமோவுடன் போஸ் வேறு கொடுக்கிறார். இவராவது ‘மோடி நம் நாட்டுக்கு கிடைத்த நல்லதொரு கேடி..ஸாரி…கோடி அதனால் எல்லாரும் அவருக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று சொல்வாரென்று பார்த்தால் இவரும் மரியாதை நிமித்தமாக போய்ப் பார்த்தாராம்.
ரஜினியின் ஆன்மீக வாசனையில் குஜராத்தில் படுகொலையான முஸ்லீம்களின் வாசமும் சேர்வது போல் தெரிகிறது. விஜய்யின் சந்திப்பிலோ அரைவேக்காட்டுத்தனம் தெரிகிறது. விஜய் ஏற்கனவே ராகுல்காந்தி, அன்னா ஹசாரே என்று அவ்வப்போது ஹைலைட்டிற்கு வரும் புள்ளிகளை அந்த நேரத்தில் போய் சந்திப்பது, சென்ற தேர்தலில் அம்மாவுக்கு அணிலாய் நின்று பேசியது என்று அரசியல் டம்மி பீஸ் என்பதை வரிசையாக நிரூபித்தவர்தான்.
இந்த நடிகர்கள் தமிழகத்தில் நாளைக்கு பி.ஜே.பிக்கு பெரிய ஆப்பாக கிடைத்தால் தங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வார்கள்? ஒன்றும் நடந்துவிடாது. ஜெயலலிதாவை சர்வாதிகாரி என்று சன் டி.வியில் விமரிசித்த ரஜினி பினனால் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகப் போய்ப் பார்க்கவில்லையா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.