இளையராஜாவின் இசையில், அமரர் பாலு மகேந்திரா இயக்கி, நடித்த படம் தலைமுறைகள். தனது வாழ்நாள் முழுதும் தான் இயக்கிய படங்களில் ஒருபோதும் நடித்திராத பாலுமகேந்திரா இந்தப் படத்தில் பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்தார். வளரும் தலைமுறை தமிழில் பேச வேண்டும் என்ற
செய்தியைத் தாங்கி வந்த இந்தப் படத்தில், பாலு மகேந்திரா ஒரு ஈழத்து தாத்தாவாகவே வாழ்ந்திருந்தார்.
அவரின் மரணத்தோடு இது அவருக்கு கடைசிப் படமாகவும் ஆனது. சமீபத்தில் இந்தப் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினை மத்திய அரசு அறிவித்தது. டெல்லி சென்று குடியரசுத் தலைவர் கையால் இந்த விருதினைப் பெற்று வந்தார் படத்தை தயாரித்த இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிகுமார். இந்தப் படத்தில் சிறு வேடம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தார்.
விருது பெற்ற கையோடு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் சென்ற சசிகுமார், அதனை இளையராஜாவிடம் வழங்கி ஆசி பெற்றார். அப்போது மறைந்த பாலு மகேந்திரா குறித்தும், இந்தப் பட உருவாக்கம் குறித்தும் பல விஷயங்களை சசிகுமாருடன் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டாராம் இளையராஜா.