கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்ததுதான் நம்ம பாரதநாடு. இதுபோன்ற புராணக் கதைகளாக எண்ணற்ற படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கோச்சடையான் கதையும் அதுபோன்ற ஒரு வழக்கமான பழிவாங்கும் மன்னர் கதைதான். கதையை விட அதை கே.எஸ்.ரவுிக்குமார் ‘புரியாத புதிர்’ ஸ்டைலில் திரைக்கதையாக்கியதுதான் படத்தின் ஸ்பெஷாலிட்டி.
முன்னொரு காலத்தில் கோட்டையபுரம், கலிங்கபுரம் என்ற இரு நாடுகள் இருந்தன. கலிஙக்புரத்தின் போர்த்தளபதியாக புகழ்பெறும் ராணா(ரஜினிகாந்த்) அங்கு அடிமைகளாக பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேல் துன்பப்படும் கோட்டையபுரத்து வீரர்களை தன் படையில் சேர்ந்து கோட்டையபுரத்தையே நோக்கி படையெடுத்துப் போகிறார். அங்கே போர்க்களத்தில் யாருமே எதிர்பார்க்காதது நடக்கிறது.
அப்புறம் தான் தெரிகிறது ராணா சிறுவயதிலேயே கோட்டைபுரத்திலிருந்து தப்பி வந்த சிறுவன் என்று. அவர் ஏன் தப்பி வந்தார்? கோட்டைபுரத்தில் இருக்கும் அரசர் நாசருக்கும் கோச்சடையான் ரஜினிக்கும், அவரது மகன் ரஜினிகளான ராணாவுக்கும், சேதுவுக்குமிடையே நிகழ்ந்தது என்ன ? என்பது போன்ற பல கேள்விகளுடன் முடிச்சுகளுடன் நீளுவதுதான் கோச்சடையானின் கதை.
இதுபோன்றதொரு கதையை ரஜினிகாந்தை முன்வைத்து சரித்திரப் படமாக எடுக்கும் உத்தேசம் கே.எஸ்.ஸுக்கு இருந்திருக்கலாம். அந்த ராணா என்கிற படமே இப்போது கோச்சடையானாகியிருக்கலாம். அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அது நிச்சயம் தமிழில் வந்த சரித்திரப்படங்களிலேயே பிரம்மாண்டமானதாக இருந்திருக்கும். அப்படி நடக்க சந்தர்ப்பம் வாய்க்காமல் சௌந்தர்யா குறுக்கே புகுந்துவிட்டார்.
படத்தின் நிறையான அம்சங்களில் கதை, எடிட்டிங், ரஹ்மானின் இசை என்ற மூன்றும் நிற்கின்றன. கொஞ்சம் வரைகலையும். படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை விறுவிறுப்பாக கதை நகர்ந்துகொண்டே இருப்பதால் படத்தின் பல குறைகளை பார்வையாளர்கள் மறந்துவிட்டு பார்க்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக ரஹ்மானின் இசை. சரித்திரப் படத்திற்கு அவர் தனது இசையாலேயே கட்டும் பிரமாண்டத் தோரணம் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை கைகொடுக்கிறது. உண்மையில் ரஹ்மான் படம் முழுக்கத் தெரியும் கிழிசல்களை தனது இசையாலே மறைக்க முயன்றிருக்கிறார். ஆண்டனியின் எடிட்டிங் படத்தின் கிராபிக்ஸ் சறுக்கல்களை முடிந்த அளவிற்கு பிடித்திழுத்து வைத்திருக்கிறது. நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை விட நன்றாகக் பிண்ணணி குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். வழக்கமான ரசிகர்களின் விசில் பறக்க ரஜினியின் தத்துவ டயலாக்குகள் நிரம்பிய பாடல்கூட உண்டு.
படத்தின் விமர்சனத்துக்குள் மேலும் செல்லுமுன் மோஷன் கேப்சுர்(Motion Capture) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் பற்றி கொஞ்சம்.. இந்த மோ.கே சினிமாவில் அறிமுகமாகி சுமார் 15 வருடங்களாகின்றது.
நடிக்கும் நடிகர்களின் உடல், கை, கால்களின் முக்கியமான பல இயங்கு புள்ளிகளில் வயர்களை இணைத்து அவர்கள் நடிக்கும்போது அவர்களின் அங்க அசைவுகளை அந்தப் புள்ளிகளின் நகர்வாக கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்வார்கள். பின்பு கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் வரையப்படும் நடிகரின் உருவ அமைப்பின் மேல் இந்தப் புள்ளிகளை பொறுத்தி அவற்றை இயக்கினால் கிராபிக்ஸ் உருவத்தின் அசைவுகள் நடிகரின் நடிப்பு அசைவுகளை அப்படியே ஒத்திருக்கும்.
இந்த முறையில் ரஜினி, தீபிகா படுகோனே முதல் படத்தின் சிறு பாத்திரங்கள் வரை அனைவருக்கும் மோஷன் கேப்சர் செய்து கம்ப்யூட்டரில் அவற்றை அனிமேஷனாக்கி காட்டியதுதான் கோச்சடையான். இந்தத் தொழில்நுட்பத்தின் தயவால் ரஜினி நன்றாக டான்ஸ் ஆடுகிறார், பாடுகிறார், வாளெடுத்து சண்டை போடுகிறார். மறைந்த நடிகர் நாகேஷ் கூட ஒரு பாத்திரமாக நடித்திருக்கிறார்.
இதை இவ்வளவு நீட்டி முழக்கி எழுதுவதன் காரணம் படத்தின் மிகப் பெரிய குறையாக இந்த கிராபிக்ஸ் ஆகிவிட்டதால்தான். வெறும் மோஷன் கேப்சரை வைத்து படமெடுத்தால் அது நிஜ மனிதர்களின் நடிப்பைப் போல யதார்த்தமாக தோன்றாது. எனவே தான் ஹாலிவுட்டில் நிஜ பாத்திரங்களை வைத்து ஷூட் செய்துவிட்டு பின்பு அதை மோஷன் கேப்சருடன் இணைப்பது. பிண்ணணி செட்டுகள் போட்டு அவற்றை படமாக்கி பின் கிராபிக்ஸில் பொறுத்துவது என்று பல யுக்திகள் செய்துதான் அனிமேஷன் படத்தை நிஜ படம்போல மாற்றுகிறார்கள். வித்தியாசம் என்ன என்று தெரியவேண்டுமெனில் போன வருடம் வந்த ஹியூகோ(Hugo), டின்டின்(Tin Tin), அவதார் என்ற ஆங்கிலப் படங்களை பார்க்கவும். இதில் மேலும் ரெண்டரிங், 3-டி எபெக்ட்கள் என்று பல விஷயங்களும் சேரவேண்டும்.
படத்தில் வரும் ரஜினியோ ஸ்டில்லாக மட்டும் அழகாகத் தெரிகிறார். நடந்தால் யாரோ தோளில் நூலைக் கட்டி நடத்தும் பொம்மை போல நடக்கிறார். அவருடயை ஸ்டைலான நடை ஸ்பிரிங் கட்டி குதித்து நடப்பது போலத் தெரிகிறது. அவர் மட்டுமல்ல படத்தின் எல்லா பாத்திரங்களும் ஏதோ ஒரு திசை பார்த்து திருகிக் கொண்டே நடக்கிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள். பாலிவுட்டே மயங்கிக் கிடக்கும் தீபிகா படுகோனேவின் கிராபிக்ஸை நீங்கள் திடீரென அருகில் பார்த்தால் ஹார்ட் அட்டாக் வருவது உறுதி.
படத்தில் காட்டப்படும் இரண்டு பெரிய அரண்மனைகளைத் தவிர வேறு எந்த இடமும் பேப்பரில் வரைந்தது போல இருக்கிறது. 3டி கண்ணாடிக்கு 30 ரூபாய் வாங்கிவிட்டு அவர்கள் தரும் அட்டைக் கண்ணாடியில் பார்த்தால் தலை சுற்றுகிறது. பாதி நேரத்தில் திரையில் மின்வெட்டு வெட்டுவதுபோலவே பிம்பங்கள் விட்டுவிட்டுத் தெரிகின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சௌந்தர்யா வெளிநாட்டில் போய் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் படித்து வந்தவர். ஆனால் அதை வைத்தே அப்பா ரஜினியை முதலாகப் போட்டு பணம் செய்ய ஆசைப்பட்டார் அவர். அப்பாவை முதலாகப் போட்டு படமெடுப்பது தப்பா? தப்பே இல்லை. ஆனால் அதில் கலைநோக்கம் கொஞ்சம்கூட இல்லாமல் 125 கோடி ரூபாய் செலவு செய்து சுட்டி டி.வி.யில் வரும் அனிமேஷன் படங்களை விட சற்றே பரவாயில்லையான படம்தான் எடுத்தார் என்றால் அதை எப்படிச் சகிப்பது? உண்மையிலேயே இவ்வளவு பணம் செலவழித்துதான் இந்தப் படம் எடுக்கப்பட்டதா ?
இவ்வளவு பணம் செலவழித்த பின்பும் படத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி மற்றும் ஸ்டுடியோவுக்கு வாடகை பாக்கி போன்ற முகம் சுழிக்கவைக்கும் செயல்கள் நடந்து, பின்னர் அப்பா ரஜினிகாந்த் வந்து தலையிட்டு பணம் செட்டில் பண்ணவேண்டிய நிலை. இப்படி படம் முழுக்க பணம் பண்ணும் நோக்கம் மட்டுமே தெரிகிறதேயொழிய உண்மையான முயற்சியும், கடின உழைப்பும், கலை நோக்கமும் தென்படவே இல்லை. ஷங்கரின் எந்திரன் மிகப் பெரும் பட்ஜெட் படம்தான். பணத்தைத் தின்ற படம் தான். ஆனால் அதன் பின் தெரியும் உழைப்பும், கலை வடிவமாக அதன் கிராபிக்ஸ் முழுமையும் அதை கொஞ்சமேனும் ஈடுகட்டுகின்றன. மற்றபடி கோச்சடையான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படமெல்லாம் இல்லை.
முடிவா என்னதான்யா சொல்ல வர்றே? படத்தை பாக்கலாம்ங்கிறியா ? இல்லை அறுவைன்றியா ? என்று டென்ஷனாகுபவர்களுக்கு… இது அறுவைப் படம் இல்லை. ஆனால் மிக மோசமாக கையாளப்பட்ட கிராபிக்ஸ் இந்தப் படத்தில் இருக்கிறது, அது உங்களின் ரசனையை விரட்டியடிக்கக்கூடுமளவு நிறைய இருக்கிறது. வீட்டில் உள்ள வாண்டுகளை சும்மா லீவில் எங்கேயாவது கூட்டிச் செல்லவேண்டுமே என்று நினைத்தால் கூட்டிச் செல்லக் கூடிய படம் இது. அவ்வளவுதான். ஒருவேளை நீங்கள் கதையில் லயித்துவிட்டால் அல்லது ரஜினியின் ரசிகராக இருந்தால் கிராபிக்ஸ் குறைகளை மறந்துவிட்டு படத்தில் ஒன்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
தான் மட்டுமே பணம் பணணுவதற்காக, ஓடிக்கொண்டிருந்த எல்லா சிறிய படங்களையும் தியேட்டரை விட்டு தூக்கிவிட்டு சென்ற வாரக் கடைசியில் சென்னையில் மட்டும் சுமார் நூறு தியேட்டர்களுக்கு மேல் கோச்சடையானை திரையிட வைத்தது நடந்தது. சென்னை மாயாஜாலில் இருந்த 14 தியேட்டர்களிலும் கோச்சடையான் ஒரு நாளைக்கு 8-9 காட்சிகள் ஓட்டப்பட்டது. படத்தை ரிலீஸ் செய்வதிலும், விளம்பரம் செய்வதிலும் இருந்த வேகம் படத்தை எடுக்கும்போது எங்கே போனது? ஒரு தரமான படத்தைத் தரவேண்டும் என்று ஏன் சௌந்தர்யாவுக்குத் தோன்றவேயில்லை ? கே.எஸ்.ரவிக்குமாரின் விறுவிறுப்பான திரைக்கதை மட்டும் மிஸ்ஸாகியிருந்தால் கோச்சடையானின் கதி அதோ கதியாயிருக்கும்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் ரஜினி பேசும்போது தன் மகளைப் பார்த்து..’சௌந்தர்யாவின் இந்த அனிமேஷன் படம் செய்வது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் அத்தோடு இல்வாழ்வில் ஈடுபட்டு எனக்கு ஒரு பேரக்குழந்தை பெற்றுத் தந்தால் இன்னும் சந்தோஷப் படுவேன்’ என்று சொன்னார். சௌந்தர்யா மேடம்! நீங்க ஏன் உங்க அப்பவோட இந்த நியாயமான ஆசையையாவது உருப்படியா நிறைவேத்தக்கூடாது ?