artist-malayalam-movie-review

2013 ன் மளையாளப் படங்களைப் பற்றிப் பேசிய நண்பர்கள் யாரும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கவில்லை. பகத் பாசில் உருவத்தைக் குறுவட்டின் அட்டையில் பார்த்துத் தற்செயலாய் வாங்கி வந்ததுதான். இப்படத்தின் இயக்குநர் சாம்பிரசாத்தின் ‘இங்கிலிஷ்’

படத்தைப் பார்த்திருந்தபோதும் அதன் இயக்குநர்தான் இவர் என்பதும் நினைவில் இல்லை. எல்லாவற்றையும் மீறி இப்படம் அற்புதமான கலை அனுபவத்திறகுள் மூழ்க்கடித்தது.

ஓவியத்தை உயிராக நேசிக்கக் கூடிய ஒருவன். அவன் பெயர் மைக்கேல். உலகத்தின் வனப்புகளையெல்லாம் வண்ணங்களால் வானம்போன்ற அகன்றதொரு கான்வாசில் தீட்டிவிடத் துடிப்பவன். ஓவியக் கல்லூரி சிற்றுண்டிச் சாலையில் தேநீருடன் பிகாசோவையும் வான்காவையும் அலசிக்கொண்டிருக்கும்போது புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் காயு என்ற காயத்ரியைச் சந்திக்கிறான். ஓவியங்களில் யாதார்த்தத்தைப் பற்றிய அலசல் அது. பீத்தோவனின் சிம்பனியிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் யாதார்த்தத்தையா அளவுகோலாக வைக்கிறீர்கள்… ஒரு நல்ல ஓவியம் என்பது என்ன? … ஏ.. குட்டி நீ சொல்லு .. என்கிறான் காயத்ரியைப் பார்த்து. யாதார்த்தமோ என்னவோ ஒரு ஓவியம் வரைபவனின் எண்ணத்தை, மனதை நேர்மையாக பிரதிபலிக்க வேண்டும் என்கிறாள். இருவரும் பரஸ்பரம் ஈர்க்கப் படுகிறார்கள்.

ஒரு கலைஞனின் கலகத்தனமான வாழ்க்கைமுறை. அவனுக்குள் ஊறிப்போன ஒருவகையான சுயநலம். சுற்றிலும் இருப்பவர்களைப் பொருட்படுத்தாத கர்வம், அகம்பாவம் ஒரு பக்கம். அதேபோல் காதலுக்காக எல்லாவற்றையும் இழப்பவளாக அவனையே சுற்றிவரும் எளிமையான பெண்மனம். குடும்பத்தை, நண்பர்களை, சுகவாழ்வை தன் சொந்த விருப்பங்களை எல்லாவற்றையும் உதறியவளாக வரும் அவள். அவளுடைய காதலும் தாய்மையும் நட்பும் தூக்கியெறியப்பட்ட பின்பும் தன்வழியே ஒதுங்கிக் கொள்ளும் காயத்ரி. வரலாறுநெடுகவும் இணைந்து வரும் நட்பும் துரோகமுமாய் அவர்களின் நண்பன் அபய். அவனுடைய காதல் மனைவி. பிரதான பாத்திரங்கள் இவர்களே. மைக்கேலின் அப்பா திரைக்குள் நுழைவதேயில்லை. காயத்ரியின் அப்பாவும் அம்மாவும் சில காட்சிகளில். பெரும்பாலான காட்சிகள் நான்கு சுவர்களுக்குள். மைக்கேலும் காயத்ரியும்.. நண்பர்களாய்… சேர்ந்து வாழ்பவர்களாய்… காதலும் கோபமும் எரிச்சலும் விரக்தியும் மாறி மாறி துரத்தும் வாழ்க்கைச் சுழலில் சிக்கும் பொழுதுகள். இருவரும் கச்சிதமான நடிப்பால் திரையை நிறைக்கிறார்கள். பகத் பாசிலின் மெருகேறிவரும் நடிப்பாற்றலைப் பற்றிப் புதிதாய்ச் சொல்லவேண்டியதில்லை. ஆனால் காயத்ரியாக நடித்திருக்கும் பக்கத்துவீட்டுப் பெண்போன்ற குட்டையான.. அடக்கமான உறுத்தாத வண்ணங்களில் உடையணிகிற நடுத்தரவர்க்கப் பிராமணப் பெண்ணாக வரும் ‘ஆன் அகஸ்டின்’ நடித்திருப்பதாகவே தெரியவில்லை. அற்புதம். 2013ன் மாநில விருதுகளில் சிறந்த நடிகர் நடிகைக்கான இருவிருதுகளையும் இப்படம் பெற்றிருப்பது மிகப் பொருத்தமானதே.

நடைமுறை வாழ்க்கைச் சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாமல் வாழ முயற்சிக்கும் மைக்கேலை நேசிக்கும் காயத்ரி தன் வீட்டை, படிப்பை எல்லாவற்றையும் துறந்து அவனோடு திருமணமாகாமலே வாழத்தொடங்குகிறாள். மைக்கேலின் தந்தை தன் உதவியை நிறுத்திவிட அடிப்படைத் தேவைகளையே சந்திக்க இயலாமல் காயத்ரி வேலைக்குப் போகிறாள். சமைக்கிறாள். வீட்டையும் மைக்கேலையும் பராமரிக்கிறாள். அவனுக்குத் தேவையான வரை பொருட்களை வாங்கித் தருகிறாள். அவனின் கரிசனையற்ற சுடுசொற்களைப் பொறுத்துக் கொள்கிறாள். ஒரு விபத்தில் மைக்கேலின் பார்வை பறிபோகிறது. மிகக் கடுமையான நாட்களாக அவை அமைகின்றன. படிப்படியாக தடவித்தடவி மைக்கேல் வரையத் தொடங்குகின்றான். தொடர் ஓவியங்களாக வரைந்து ஒரு கண் காட்சியில் வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறான். துரித உணவகம் ஒன்றில் வேலைபார்த்து சமாளித்துக்கொண்டிருக்கும் காயத்ரிக்கு அவன் கேட்கும் வண்ணங்களையும் உபகரணங்களையும் வாங்கித் தருவது எளிதாக இல்லை. மிக நெருக்கடியான நிலையில் அவர்களின் கல்லூரி நண்பன் அபய் தன்னிடம் உபயோகமில்லாமல் கிடக்கும் பெர்சியன் ப்ளூ வண்ணப் பெட்டிகளை எடுத்துச் சென்று மைக்கேலிடம் கொடுத்துவிடு. அவனுக்கென்ன தெரியப் போகிறது என்று சொல்லும் அலோசனையை அவள் கேட்க வேண்டியதாகிறது. வரிசையாக வண்ணங்களை அடுக்கித் தரச்சொல்லும் மைக்கேலுக்கு காயத்ரி ஒரே வண்ணமான பெர்சியன் ப்ளூவை அடுக்கி வைக்கிறாள். மனதிற்குள் வெவ்வேறு வண்ணங்களைக் கற்பனை செய்தபடி மைக்கேல் ஒரே வண்ணத்தில் ஓவியங்களைத் தீட்டியபடி இருக்கிறான். குற்ற உணர்வுடன் மௌனமாக நாட்களை நகர்த்துகிறாள் காயத்ரி. நீல வண்ணத்தின் பல்வேறு கலவைகளால் நிறைந்த அவனின் ஓவியங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்று காயத்ரியைக் கேட்கிறான். ட்ரீம்ஸ் (கனவுகள் ) என்று வைக்கலாம் என்றவள் ட்ரீம்ஸ் இன் பெர்சியன் ப்ளூ என்று வைக்கலாம் என்கிறாள். விசயம் புரியாத மைக்கேல் ஏன் பெர்சியன் ப்ளூ? என்பவனிடம் ‘கனவுகளின் நிறம் நீலம்தானே’ எனச் சமாளிக்கிறாள்.

ஓவியக்காட்சி தொடங்குகிறது. காட்சியகப் பொறுப்பாளன் ஓவியங்களைப் பெரிதும் சிலாகிக்கிறான். பார்வையற்ற ஓவியன் தன் மனதின் இருண்ட படிமங்களை இதைவிட எப்படி வெளிப்படுத்தமுடியும் என்று காயத்ரியிடம் கூறி ‘இக்கண்காட்சி மிகப்பெரிய வெற்றியடையும் என மகிழ்கிறான். மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காகத் தயாராகும் மைக்கேலிடம் அதைத் தவிர்க்கச் சொல்கிறாள் காயத்ரி. உன்னால் அநாவசியமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்கிறாள். மைக்கேல் உற்சாகமாக இருக்கிறான்.

பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதை பொறுப்பாளன் சொல்லி.. காயத்ரியிடம் மைக்கேலை அழைத்து வரச் சொல்கிறான். காயத்ரி கலக்கத்துடன் செல்கிறாள். அங்கே உண்மை முழுவதையும் உணர்ந்தவனாய் மைக்கேல் அமர்ந்திருக்கிறான். இந்தக்கண்காட்சியே ஒரு நகைச்சுவை என்கிறான். காயத்ரியின் சமாதானங்களை அவன் ஏற்கத் தயாராக இல்லை. பொறுமையிழந்த பொறுப்பாளன் அங்கு வருகிறான். காயத்ரி வருந்தி அழைக்கிறாள். மைக்கேல் பொறுப்பாளனிடம் உன்னோடு வருகிறேன் என்று அவன் கையைப் பற்றியபடி செல்கிறான்.

பல்வேறு பாராட்டுக்களை, கேள்விகளை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கும் மைக்கேல், வெறுமையை வெளிப்படுத்த கருப்புதானே உகந்தது நீலம் ஏன்? என்ற கேள்விக்கு மட்டும் பதிலிறுக்கிறான். நீலம் என்பது நேர்மையின்மையின் (Deception) நிறம். பொய்மையின் நிறம். அதுதானே நம்மைச் சுற்றிலும் இருப்பது என்ற பதிலைக் கேட்டவாறு காயத்ரி அந்த இடத்தைக் கடக்கிறாள்.
ஓவவொரு வாழ்க்கையிலும் திரும்பி வர முடியாத இடமொன்று உண்டு. அப்போது அதைத்தவிர தேர்ந்தெடுப்பதற்கு வேறு ஒன்றும் இருப்பதில்லை. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குட் பை மைக்கேல்.. குட் பை என்ற மனக்குரல் ஒலிக்க காயத்ரி தன்வழியே செல்கிறாள்.

இப்படம் ஓவியங்களைப் பற்றி, வண்ணங்களைப் பற்றிப் பேசுவதன் வாயிலாகப் பார்வையாளர்களை ஓவியக் கலைஞனொருவனின் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதோடு காதலின் ஆழத்தையும் தொடுகிறது.
நடிப்பு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என்று எதுவுமே துருத்திக் கொண்டிராத ஒரு உணர்ச்சிமயமான சினிமா.
2010இல் ஆங்கிலத்தில் வெளிவந்த Paritosh Uttam எழுதிய ‘Dreams in Prussian Blue’ எனும் ஆங்கில நாவலின் தழுவலே இத்திரைப்படம். மும்பையை களமாகக் கொண்டிருந்த நாவலை திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.

–இரா.ப்ரபாகர்

மேலும் சிறப்புக்கட்டுரைகள்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.