கொண்டையம்பட்டியிலிருந்து தனிமனிதனாக அம்மா, அப்பா இல்லாத தன் பேரன் விமலை தாத்தா ராஜ்கிரண் வளர்க்கிறார். சென்னை வந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியராகும் விமலுடன் கொஞ்சநாள் தங்க மஞ்சப்பையுடன் வரும் தாத்தாவுக்கும் இந்த பட்டினத்து வாழ்க்கைக்குமிடையே இருக்கும் இடைவெளிகளும், கலாச்சார பிரச்சனைகளுமே படம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் கதை. சுமார் பத்துவருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் சக்கை போடு போட்டிருக்கும். இப்போதைய காலத்துக்கும் ஓரளவு காரம் குறையாமல் தான் இருக்கிறது.
நடுவில் மானே தேனே பொன்மானே போடுவது போல கிராமத்து மணம் மாறாத நாயகன் விமலுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி லட்சுமிமேனனுக்கும் இடையே நடக்கும் காதலைப் போட்டிருக்கிறார் இயக்குனர் ராகவன். இந்தக் காலத்தில் ராஜ்கிரண் போன்ற மனதுள்ள கிராமத்து தாத்தாக்கள் அப்படி யாரும் இல்லாததால் பார்வையாளர்களுக்கு தாத்தா அடுத்த கணத்தில் என்ன செய்வார் என்பதை ஊகிக்க முடியாமலே இருக்கிறது. அந்த விறுவிறுப்பிலே படம் முழுவதும் நகர்கிறது.
படத்தின் நாயகன் விமல் கிராமத்திலிருந்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியராக நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய தோற்றம் குரலுக்கு ஏற்றபடி அவரைத் தேர்வு செய்த இயக்குனருக்கே இந்தப் பாராட்டு போய்ச் சேரும். ஒவ்வொரு முறை தாத்தா ராஜ்கிரண் ஏதாவது பிரச்சனைகளோடு வரும்போதும் அதைச் சமாளித்து ஆனாலும் தனது தாத்தாவின் மேல் பாசம் குறையாது அவரை பராமரிக்கிறார். லட்சுமிமேனனைக் காதலிக்கும் இடங்கள் இருவர் காதலிக்க அவர்களிக்கிடையே பெரிய அளவு விஷயங்கள் ஏதும் நடந்துவிடவேண்டியதில்லை; சிறு சிறு விஷயங்களே போதும் என்கிற யதார்த்தத்தில் பொருந்திப் போகின்றன.
மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் லட்சுமிமேனனுக்கு விமலைக் காதலிக்கும் காட்சிகள் தவிர நடிக்கும்படியான பல காட்சிகளும் படத்தில் உள்ளது. அவரும் அனாயசமாக நடித்துவிடுகிறார். லட்சுமி மேனனின் தங்கை, அப்பா, அபார்ட்மென்ட் மாந்தர்கள் என்று வரும் எல்லா பாத்திரங்களும் சரியாகச் செய்திருக்கிறார்கள். படத்தின் முக்கிய பாத்திரமான ராஜ்கிரண், கிராமத்து அப்பாவாக இயக்குனர் சொன்னதை உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய கிராமியத்தனம் பெரும்பாலும் ரசிக்கும்படி சரியாகப் பொருந்துகிறது சில இடங்கள் தவிர. போலீஸ் அதிகாரியை, ஆட்டோ ஓட்டுநரை, ஈவ்டீசிங் செய்பவனை அறையும் இடங்கள், குழந்தை எலி விஷத்தைச் சாப்பிட்டவுடன் பதறும் இடம், விமலிடமும் லட்சுமிமேனனிடமும் மன்னிப்புக் கேட்குமிடம் என்று பல இடங்களில் மிளிர்கிறார்.
லேப்டாப்பை டோஸ்டராக நினைப்பது, வளைகாப்பு வைப்பது, வெள்ளையனே வெளியேறு என்று கத்துவது போன்ற இடங்களில் ராஜ்கிரணின் நடிப்பு மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் இயக்குனர் அதை கதையின் சுவராசியத் திருப்பங்களுக்காக உபயோகப்படுத்தியிருப்பதால் விட்டுவிடலாம். எழுதி இயக்கியிருப்பவர் ராகவன். முதல்படம் போல் தெரிகிறது. சமூகப் பார்வையில் பழசாகிப் போன கதைக்களமாக இருந்தாலும் அதற்கு அவர் எழுதிய திரைக்கதை படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. வெறுமனே காதல், பாட்டு, பைட்டு என்று மசாலா அயிட்டங்களில் லயித்துவிடாமல் சமூக அக்கறையுடன் கதையைக் கொண்டு சென்ற அவருக்கு பாராட்டுக்கள். எடிட்டர் தேவா, ஒளிப்பதிவாளர் மசானி மற்றும் இசையமைத்த ரகுநந்தன் ஆகியோர் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றியிருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய மையமக்கருவாக, எந்திரமயமான வாழ்க்கைக்கும் நமது பழைய கலாச்சாரங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் இருக்கிறது. நகரமயமாகிவிட்ட வாழ்க்கையில் சகமனிதர்களின் மீது மதிப்பும், நம்பிக்கையும் இல்லாத, ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிரியாகப் பார்க்கும் தன்மையைக் கொண்டவர்களாக, நகரத்தவர்கள் எல்லோரும் வாழ்கிறார்கள். அதை நியாயப்படுத்தவும் அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. எல்லோரும் விஷம் தின்கிறார்கள். விஷம் கக்குகிறார்கள். படத்தில் சொல்லப்பட்ட உடலைக் காண்பிக்கும் உடைக்கு எதிர்ப்பு, மற்றவர்களுக்கு இரங்கும் மனம், குழந்தைகளைக் கருக்காத உள்ளம், அடுத்த வீட்டுக்காரனிடம் வலிந்து பேசும் பேச்சு (இளிச்சவாயன்) போன்ற விஷயங்களை இந்தக் காலத்தில் எவ்வளவு பேர் ஆமோதிப்பார்கள்?
பீர் குடிப்பதெல்லாம் சாதராணம் என்று பேசக்கூடிய அளவு சுதந்திர, அனுபவிக்கும் மனோபாவம் ஊறிய பெண், தனது உடல் அழகு நன்றாக காண்பிக்கப்பட்டு பிறரை ஈர்ப்பதற்கே என்பதை மனப்பூர்வமாக நம்பும் பெண்ணால் எப்படி கருப்பட்டி மிட்டாய்களையும், விகல்பமில்லாத பேச்சுக்களையும், பக்கத்துவீட்டுக்கரானை தேடிச்சென்று அன்போடு நடத்தும் குணத்தையும், தகப்பன் போன்ற பாசத்தையும் புரிந்துகொள்ள முடியும்? இதற்குக் காரணம் வெறும் கலாச்சார இடைவெளி மட்டுமல்ல. பணத்தைத் தேடுவதை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைக்கு நடுவே சிலச்சில சந்தோஷங்களையும் அனுபவித்துவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பொருளாதார நிலையும், அதையொட்டி குடும்ப உறவுகள் சின்னாபின்னமாகிப் போனதும் காரணம். நாமும் பிஞ்சிலேயே விஷமாகிப் போனோம். அதையே நாம் நமது கலாச்சார மாற்றமாகவும் கருதிக்கொண்டோம்.
ஏன் நம் பழமையான கலாச்சாரங்கள் நல்லவையாக இருந்தாலும் அழிந்துபோகின்றன? ஏன் வயதானவர்களை விமல்போல் சகித்துக்கொள்ளும் பேரன்கள் நகரங்களில் உருவாவதில்லை? ஏனென்றால் புரிந்தோ புரியாமலோ நாம் இந்த நுகர்வுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்குள் இருக்கும் நுகர்வுக் கலாச்சார வாழ்க்கைக்குள் தான் வாழவேண்டியிருக்கிறது. நம்மால் இந்த கலாச்சாரச் சிதைவுகளின் காரணங்களை, ஒரு அம்மன் டி.ஆர்.ஒய். முறுக்குக் கம்பிகள் வழங்கும் ‘நீயா நானா’வைத் தாண்டி விடைதேட முடியாது. ‘கலாச்சாரம் இப்படி மாறியது ஏன்?’ என்று புரிந்துகொள்ளமுடியாமல் புலம்பித் திரியும் மஞ்சப் பைகளுக்கு ஒரு அனுதாப ஒலியெழுப்புவதுடன் நாம் சினிமா உலகை விட்டு வெளியே வந்துவிடுவோம். ஏனென்றால் ‘மஞ்சப்பை’ நம்முள் எழுப்பும் கேள்விக்கான பதில் ‘நமது கலாச்சாரத்தின் நல்ல அம்சங்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்து போய்விடும்’ என்பதே. அந்தப் பதில் நமக்கும் நன்றாகத் தெரியும். அதை அழித்தது அனேகமாய் நுகர்வு கலாச்சாரமாகத்தானிருக்கும்.