மறைந்த இயக்குனர் இராம.நாராயணன் தமிழ்ச் சினிமாவில் ஏன் உலக அளவிலேயே அதிக படங்களை இயக்கிய (128 படங்கள்) இயக்குனராக இருக்கலாம். மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிகக்குறைந்த நாட்களில் படங்களை எடுத்து மாபெரும் வெற்றிப் படமாக ஆக்கியவர்.
‘சுமை’, ‘சிவப்பு மல்லி’, ‘சிவந்த கண்கள்’, ‘சோறு’ போன்ற புரட்சிகரமான படங்களை எடுத்த அவர் அவர் பின்பு கமர்ஷியல் படங்களுக்கு மாறி மிருகங்களை வைத்து பக்திப் படங்கள், ஷாமிலி போன்ற குழந்தை நட்சத்திரங்களை வைத்து குழந்தைகள் படங்கள் என பல படங்கள் எடுத்தார்.
அவர் மறைந்ததையொட்டி பல பிரபலங்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள். நடிகர்கள் அர்ஜூன், ராமராஜன், போன்றவர்கள் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள். அவரைப் பற்றி அர்ஜூன் நினைவுகூர்கையில் “அவர் தனது ‘நன்றி’ என்ற படத்தில் தான் என்னை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அப்போது எனக்கு அன்பு காட்டி, உணவு தந்து, காலியாய் இருந்த தனது பிளாட்டை எனக்கு தங்கிக்கொள்ள அனுமதி தந்தார்.
ஒன்றரை வருடம் அந்த ஃப்ளாட்டில் நான் தங்கயிருந்தேன். அதற்கு அவர் என்னிடம் வாடகை கூட வாங்கவில்லை. இப்போது எனக்கு எப்படி மரியாதை கொடுத்தாரோ அதே போல மரியாதையுடனும் அன்புடனும் தான் என்னை தனது முதல் படத்தில் நடிக்கவைத்தபோதும் நடத்தினார். ‘நாம்தானே அறிமுகப்படுத்தினோம்’ என்ற அதிகாரம் அவர் எப்போதுமே கொண்டதில்லை.
மனிதர்களிடம் மட்டுமல்லை. விலங்குகளிடமும் மிகப் பொறுமையாக நடந்துகொள்ளக்கூடியவர். மனிதர்களிடம் வேலைவாங்குவது எளிது. மிருகங்களிடம் வேலை வாங்குவது இன்னும் கடினமானது. உயிருடன் இருக்கும்போது நாம் யாரையும் பாராட்டுவது இல்லை. இறந்தபிறகாவது அவர்கள் பெருமைகளை பாராட்டாமல் இருந்தால் நாம் மனிதர்களே இல்லை.”