இயக்குனர் விஜய் ‘தலைவா’வில் பட்ட பிரச்சனைகளுக்குப் பின் நல்ல பிள்ளையாக அரசியல் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி ‘லைட்’டான குடும்பக் கதையொன்றை கொடுத்திருக்கிறார். கொஞ்சம் உல்டா செய்த சாப்பாடு போல் தெரிந்தாலும் சுவையான சாப்பாடுதான் என்று சொல்லலாம்.
நாசர் கிராமத்திலிருக்கும் வயதான தாத்தா. தன் மனைவி, ஒரு மகன், மருமகள் மற்றும் அவரது பேத்தியுடன் கிராமத்தில் வசித்து வருகிறார். வருடா வருடம் ஊரில் எல்லை காக்கும் கருப்பர் கோயில் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து வரும் தன் மகள் மற்றும் மகனையும் அவர்களின் குடும்பத்தையும் ஆவலோடு எதிர்நோக்கி நிற்பவர். நாசரின் குடும்பத்தோடு குடும்பமாகவே வாழ்ந்து வரும் வேலைக்காரனும் அவன் மனைவியும். பேத்தி நீத்தாவுக்கும் தாத்தாவுக்குமிடையேயான பாசம் அலாதியானது.
இந்நிலையில் ஊரில் திருவிழா வருகிறது. அதற்கு ஊரிலிருந்து அவரது மகன் மற்றும் மகள் தங்களது பிள்ளைகளுடன் வருகிறார்கள். வீடே கலகலப்பாகி களைகட்டுகிறது. அப்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் பிரச்சனைகளில் மூழ்கி இருப்பது தெரிய வர அதற்குக் காரணம் குலதெய்வத்துக்கு கொடுக்கப்படவேண்டிய நேர்த்திக்கடன் கொடுக்கப்படாமலிருப்பதே என்பது தெரியவர அதைச் செய்ய ரெடியாகிறார் நாசர். அந்த நேர்த்திக்கடன் பலியை கொடுக்கவிடாமல் நிறைய தடங்கல்கள் ஏற்படுகின்றன. அவை யாரால் ? எதனால் ? என்கிற காமெடியான சுவாரசியங்களை திரையில் பார்த்தே தெரிந்துகொள்ளுங்கள்.
முக்கிய பாத்திரங்களான நாசரும், சிறுமி பேபி சாராவும் அழகாகச் செய்திருக்கிறார்கள். பேபி சாராவுக்கு தெய்வத் திருமகளை விட இதில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். சிறுவன் சரவணனும் நம்மை நிறைய சிரிக்கவைக்கிறான். நாசருக்கு மட்டுமே நடிக்க நல்ல வாய்ப்பு வருகிறது. அதையும் அநாயசமாக ஊதியிருக்கிறார் மனிதர். ஆனாலும் யானைப் பசிக்கு சோளப் பொறிதான். படத்தின் ஆரம்பப் பாதியை ஆக்கிரமிப்பது சுவராசியமான அத்தைப் பெண்ணை காதலிக்க புதுமுக நாயகன் (நாசரின் மகன் பாஷா. நல்வரவு.) அலைவதும், திரிவதும், பின் காதலிப்பதும். அறிமுக நாயகி துவாராவும் நன்றாகச் செய்திருக்கிறார். கோழி பிடிக்க வீடு முழுவதும் எல்லோரும் ‘பக் பக்’ என்று அலையும் காட்சி, ஊரெங்கும் அதைத் தேடி சண்டைகள் பிடிப்பது என்று ஒரே கோழி பிடிக்கும் சமாச்சாரங்களே நிறைந்திருந்தாலும் அலுக்கவேயில்லை என்பதுதான் ஆச்சரியம். குறிசொல்லும் சாமியாராக வரும் சண்முகராஜன் நீண்டநாட்களுக்குப் பின், சிறிய பாத்திரமென்றாலும் ரசனையாகச் செய்திருக்கிறார். வேலைக்காரனாக வரும் ஜார்ஜூம் அவரது மனைவியாக வருபவரு்ம் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. கிராமிய மணம் தெரியவேண்டும் என்று டைரக்டரே மெனக்கெடாதபோது ஒளிப்பதிவாளருக்கென்ன ? பளிச்சென்று கிராமத்து வீட்டை தெளிவாக படம்பிடித்துவிட்டார். வேறு மெனக்கெடல்கள் ஏதும் இல்லை. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கேற்ற உழைப்பை கொடுத்திருக்கிறார். மோசமான இசையில்லை. ‘அழகோ அழகு’பாடல் மீண்டும் கேட்கவைக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் கை கொடுக்கிறது.
நாலு ஹெலிகாப்டர் பறப்பது, ஹீரோ பறந்து பறந்து பத்துப் பேரை வெட்டிச் சாய்ப்பது, ஹீரோவின் குடும்பத்தையை வில்லன் கொன்றுவிட்டான் என்று தேவையில்லாமல் அழுத்தப்பட்ட உணர்வுகள் அவசியமில்லை; மிக மென்மையான உணர்வுகளைக் கூட அடிப்படையாக வைத்து திரைக்கதை இயங்கமுடியும் என்று நம்பி, அதை நிகழ்த்தி சுவராசியமாக இரண்டு மணி நேரத்துக்கு பார்வையாளர்களை உட்கார வைக்க முடிந்த விஜய்யை பாராட்டியே ஆகவேண்டும். (ஆண்டவா.. இது வேறு எந்தப் படத்தின் காப்பியாக இருந்துவிடக்கூடாது என்று மனது வேண்டுகிறது..) படத்தின் முடிவில் இது அம்மா சொன்ன கதை என்று அவர் சொல்லிவிடுவதால் உல்டாவாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆறுதலடையலாம்.
அம்மா சொன்ன கதையை விஜய் 80களில் வந்த, கார்த்திக் நடித்த, பாசிலின் ‘வருஷம் 16’ படத்துக் களத்தை வைத்து கலந்து ரெடிபண்ணி விட்டார் என்பதற்கான ஆதாரங்கள் படம் முழுவதும் நிறையவே தென்படுகின்றன. அத்தோடு படத்தின் நேட்டிவிட்டியும் மிஸ்ஸிங். எல்லைக் கருப்பசாமி என்கிறார்கள். குடும்பத்தோடு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். கதை ஓ.கே.வாகி விடுவதால் இதையெல்லாம் பார்வையாளர்கள் மன்னித்துவிடுகிறார்கள் என்பது விஜய்க்கு ஆறுதலளிக்கும் விஷயம்.
பெரியவர்களை விட குழந்தைகள் இதை ரசித்துப் பார்க்க வாய்ப்பு அதிகமிருக்கிறது. காரணம் படத்தின் பிரதான பாத்திரங்கள் குழந்தைகளும் அவர்களின் லூட்டிகளுமே. எனவே குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பத்தோடு சிரித்து வாருங்கள் இந்த சைவ ஹோட்டலுக்கு.