சமீபத்தில் சென்னையில் ‘மொசக்குட்டி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. ஆடியோவே வெளியிட்டு பாரதிராஜா பேசினார். அவர் பேச்சில் நீண்ட நாட்கள் படம் எடுக்காமல் போய்விட்ட வருத்தமும் தன்னால் மீண்டும் ஒரு சிறந்த படத்தை கொடுக்கமுடியவில்லையே என்கிற ஆதங்கமும் தெரிந்தது.
“சினிமாவில் நான் இரண்டாவது இன்னிங்ஸ் வரவேண்டும் என்று என அழைப்பு விடுத்தார்கள். என்னுடைய முதல் இன்னிங்ஸ் முடிந்ததாகவே நான் நினைக்கவில்லை. இன்னும் சினிமாவில் துடிப்போடுதான் இருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் மூன்று படங்கள் இயக்கப் போகிறேன்.
நான் என்னவோ சினிமாவையே விட்டுப் போன மாதிரி மீண்டும் வரவேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இளைஞர்கள் நிறைய வந்திருக்கிறார்கள் சினிமாவிற்கு. அவர்கள் என்னை அப்பா என்று அழைப்பது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் என்னை தாத்தா என யாரும் அழைத்துவிடாதீர்கள். நான் தாத்தா என்று ஓய்ந்து உட்காரமாட்டேன்.
இன்று டிஜிட்டல் சினிமாதான் கலக்குகிறது. அது நடிப்பை செலவில்லாததாக, எளிமைப்படுத்திவிட்டது. நவீன தொழில்நுட்பங்கள் பல சினிமாவில் வந்திருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்துடன் இணைந்து கதை சொல்வதில் வல்லுநர்களாக புதியவர்கள் பலர் கில்லாடிகளாக வந்திருக்கின்றனர். எங்கள் காலத்தில் இந்த வசதிகள் இல்லை.
நான் இப்போது ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டியுள்ளது. நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு படம் இயக்க வரவேண்டும் போல இருக்கிறது. நவீனமாக படம் எடுக்கலாம். ஆனால் நமது கலாச்சாரம், பண்பாடு, மண்ணின் ஈரத்தை மறைத்துவிடாமல் படம் எடுங்கள்” என்று புத்துணர்வோடு பேசினார் பாரதிராஜா.
மண்ணின் ஈரமெல்லாம் புதிய தலைமுறைக்குப் புரியாது சார். ஹாலிவுட்டில் மார்ட்டின் ஸ்கார்ஸீ, க்ளின்ட் ஈஸ்ட்வுட் போன்ற பெரிய டைரக்டர்கள் எல்லாம் எழுபது வயதுக்கு மேல் இன்னும் உலகமே வியக்கும் வகையிலான படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல நீங்களும் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு போன்ற விஷயங்களில் கற்பனை வளமும், தொழில்நுட்பமும் தெரிந்த இளைஞர்களை சேர்த்துக் கொண்டு உங்களது அனுபவத்தையும் முதிர்ச்சியையும் இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்தினால் உலகத் தரம் வாய்ந்த படங்கள் உங்களிடமிருந்து வருவது உறதி.