முதல் படத்திலேயே கலக்கி எடுத்த ‘பிட்சா’ டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜின் இரண்டாவது படம் இந்த ஜிகர்தண்டா. ‘டர்ட்டி கார்னிவல்’ என்கிற ஆங்கிலப் படத்தின் கதையின் கருவை தழுவிய படம் என்று இணையங்களில் எழுதியிருக்கிறார்கள். டர்ட்டி கார்னிவலை இன்னும் பார்க்கவில்லை. எனவே நம்மால்
இது தழுவலா அல்லது சுட்டதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இயக்குனர்கள் இது ஒரு படத்தின் தழுவல் அல்லது இன்ஸ்பிரேஷன் என்று ஒரு வரி டைட்டிலை படம் ஆரம்பிக்கும் முன்பே போட்டிருந்தால் பார்வையாளர்களின் கவனம் இயக்குனரது நேர்மையை சந்தேகிப்பதில் செல்வதில்லை. மாறாக உலகத்தரத்தில் படத்தை இயக்கினாலும் இயக்குனரின் நேர்மையின்மை அவரது திறமையை சிறுமைப்படுத்திவிடுகிறது.
கார்த்திக்(சித்தார்த்) சினிமா இயக்குனராகிவிட போராடும் இளைஞன். அவன் சந்தித்த தயாரிப்பாளர் ஒருவர் அவனிடம் ரத்தமும் சதையுமான ஒரு ரவுடியின் கதை கொண்டுவா என்று கூறிவிட அவனுக்கு தனது கதைக்காக ஒரு நிஜ ரௌடியை பின்தொடர்ந்து ரௌடியின் வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதும் ஐடியா உதிக்கிறது. அதற்காக மதுரையில் ரவுடியாக இருக்கும் ‘அசால்ட் சேது'( பாபி சிம்ஹா)வை ஃபாலோ செய்கிறான். அப்போது நடக்கும் விபரீதங்கள் இருவருடைய வாழ்க்கையையுமே பாதிக்கின்றன. சுமார் இரண்டே முக்கால்மணி நேரம் விறுவிறுப்பாக ஓடும் ஜிகர்தண்டாவின் கதையை படத்தின் சஸ்பென்ஸ் குறையாமல் சொல்லவேண்டுமானால் இவ்வளவுதான் கதை.
ஹாலிவுட்டில் இதுபோன்ற ஸ்டைலான படங்கள் டஜன் கணக்கில் வந்திருக்கின்றன. மார்ட்டின் ஸ்கார்ஸீ முதல் க்வென்ட்டின் டொரான்டினோ வரை பெரிய இயக்குனர்கள் இருக்கிறார்கள். கார்த்திக் சுப்பாராஜ் அந்த ஸ்டைலில் தமிழில் இந்தப் படத்தைத் தந்திருக்கிறார் என்பதற்காக அவரைப் பாராட்டலாம். படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்வையாளர்களை எதிர்பார்க்கவைத்து எதிர்பார்ப்பை ஏமாற்றி ட்விஸ்ட் வைத்தபடியே இருக்கிறார். பிட்சா போலவே படத்தின் இறுதிக் காட்சிவரை எதிர்பாராத திருப்பங்கள்தான். மதுரையின் நேட்டிவிட்டியையும் சரியாகப் பிடித்திருக்கிறார். ஆபாசம், கவர்ச்சியாட்டம் போன்ற கமர்ஷியல் விஷயங்களை நம்பாமல் இரண்டே முக்கால் மணிநேரம் படம் எடுக்க ரொம்ப ‘தில்’ வேண்டும்.
நாயகன் சித்தார்த்துக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம் கிடைத்திருக்கிறது. பாத்திரத்தை உணர்ந்து சரியாகவும் செய்திருக்கிறார். அவருக்கும் லட்சுமிமேனனுக்குமிடையே ஒரு சிறிய காதலும் தேவைப்பட்ட அளவு இருக்கிறது. சித்தார்த்தின் நண்பனாக வரும் தமிழ்ச்செல்வனும் குறும்படத்துக்காரரே. படத்தின் மிகப் பலமான மற்றும் முக்கியமான பாத்திரம் சிம்ஹா. குறும்படங்கள் பலவற்றில் பிரமாதமாக நடித்திருந்த அனுபவத்தில் ரௌடி அசால்ட் சேதுவாகவே மிரட்டியிருக்கிறார் மனிதர். தியேட்டருக்குள் நுழைந்து தனது படம் ரசிக்கப்படுவதைப் பார்க்கும் இடத்தில் சபாஷ் சிம்ஹா. ஒரு நல்ல நடிகர் தமிழுக்குக் கிடைத்திருக்கிறார் என்று சந்தோஷப்படலாம். ரௌடியாக அவர் தொடர்ந்து செய்யும் கொலைகளும் அவரது அடியாட்களாக வரும் அந்த நால்வரும் கச்சிதமான நடிப்பு.
சேதுவைக் கொல்ல நடக்கும் முயற்சி, ரவுடி சேகரின் கொலை, சினிமாப் படமெடுக்கும் காட்சிகள், சிம்ஹாவிடம் ஆட்டோகிராப் கேட்கும் குழந்தை, பேசாத சிம்ஹாவின் தாய் ‘தண்ணீர் மோந்து கொடுடா’ என்பது என்று சிறிதும் பெரிதுமாக விஷயங்கள் நுணுக்கமாக விரவி இருக்கின்றன. ‘கேவ்மிக் யு ஆரி’வின் ஒளிப்பதிவு இருளான கதைக்கு இன்னும் த்ரில் ஏற்றுகிறது. சந்தோஷ் நாராயணணின் பிண்ணணி இசை நன்றாயிருக்கிறது. ஸ்பெஷலாக எதுவும் செய்துவிடாவிட்டாலும் சொதப்பலில்லை. கண்ணம்மா பாடல் அவரது கானா பாலா ஸ்டைல் பாடல்.
சர்வ சாதாரணமாக கொடூரமாகக் கொலை செய்பவர்களை சித்தரிப்பதில் படம் வெற்றி பெற்றிருக்கிறது. ‘நான் செய்கை செய்றேன்’ என்று ஒருவன் கெஞ்சுவது. ‘விடியறதுக்குள்ள செஞ்சிடுங்க காலைல அப்பாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகனும்’ என்று கூலாகச் சொல்வது போன்று பல காட்சிகள். கொலைகாரர்களின் கொடூர முகம் தெரியும்போது சித்தார்த் மற்றும் அவரது நண்பனின் வாழ்க்கை என்னாகுமோ என்று நாமும் பதறுகிறோம். சுப்பிரமணியபுரத்துக்குப் பின் கூலிக் கொலைகாரர்களை மிக தத்ரூபமாகப் படம் பிடித்திருக்கும் படம் இது எனலாம்.
‘நம்ம மேல ஒவ்வொருத்தனுக்கும் இருக்கிற பயம் தான்டா நம்ம பலம்’ என்று சொல்லும் ரௌடிக்கு அதுவல்ல வாழ்க்கை என்று உணர்த்துகிறது இந்தப் படம். இன்னொருபுறத்தில் சிலபல இடங்களில் படம் ரௌடியிசத்தை மறைமுகமாகப் பெருமைப்படுத்தவும் செய்கிறது. படம் சமூக மதிப்பீடுகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொலை செய்பவர்கள் மிகுந்த சக்தி மிகுந்தவர்களாக சமூகத்தில் உலாவருவதை மிகைப்படுத்தி காட்டுவதன் மூலம் இளைஞர்கள் ‘செய்கை’ செய்து நாமும் பெரியாளாகிவிடலாம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
ஜிகர்தண்டா. வவுத்தை கலக்குறாண்டா.