சமீபத்தில் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் சோழநாச்சியார பவுன்டெஷன் இணைந்து நடிகர் கமல்ஹாசனுக்கு “வாழ்நாள் சாதனையாளர்’ விருதை (அப்படின்னா உங்களுக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமாச்சே கமல் சார்..!) சென்னையில் வழங்கினார்கள். ஆளுனர் கே.ரோசய்யாவின் கால்ஷீட்டைப் பிடித்து அவர் கையால்
விருதை கமல்ஹாசனுக்கு வழங்கினார்கள். ஆர்.சி.சக்தி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சோழநாச்சியார் பவன்டேஷன் தலைவர் ராஜசேகர், பிரிட்டனுக்கான துணைத்தூதர் பரத் ஜோஷி போன்றோர் விழாவில் கலந்து கொண்டனர். .
விழாவில் கமல் பேசிய கலவையான பேச்சு.. “தேவர் மகன் படத்தில் எனது பெயர் சக்திவேல். இயக்குனர் ஆர்.சி.சக்தியின் நினைவாகத்தான் அந்தப் பெயரை வைத்தேன். திரைக்கதையென்றால் என்னவென்றே தெரியாத என்னுடைய பதினேழாவது வயதில் என் கையில் ஒரு நோட்டைக் கொடுத்து ‘உனக்கு திரைக்கதை ஆர்வம் உள்ளது; எழுது’ என்று நான் திரைக்கதை எழுத முதலடி நடத்தியவர் ஆர்.சி.சக்தி சார்தான். எனது கையெழுத்து நன்றாக இருக்காதே என்று நான் பின்வாங்கியபோது காந்தி, நெப்போலியன் போன்றவர்களுக்கும் கையெழுத்து நன்றாயிருக்காதுதான் அதனால் அதுவெல்லாம் ஒரு பிரச்சனையில்லை என்று எனக்கு உற்சாகமூட்டினார்.
1960-70களில் துவங்கிய அந்தப் பயணம்தான் இன்றும் தொடர்கிறது. அவர் கற்றுக்கொடுத்தது எது, எப்போது என்பெதல்லாம் தெரியாது ( அதாவது யார் என்ன சொல்லித்தந்தார்கள் என்கிற க்ரெடிட் எல்லாம் யாருக்கும் தரமுடியாது). ஆனால் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அதுபோல என்னை சிறுவயது என்று பார்க்காமல் பார்த்த முதல் சந்திப்பிலேயே ”வாங்க கமல்” என்று சமமாக அழைத்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
செய்யும் தொழில் தெய்வமோ இல்லையோ தெரியாது ஆனால் செய்யும் தொழில் தான் என்னை இன்று இங்கே நிற்கவைத்திருக்கிறது. என் தாய், தந்தை, சகோதரர் சந்திரஹாசன் எல்லோரும் எனக்கு முன்மாதிரியாக நின்று காட்டினார்கள். பல்வேறு முகங்களைப் பார்த்து நான் செய்ததே ஒருவரின் சாயல் என்று சொல்லமுடியாதபடி தனிச்சாயலாக மற்றவர்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் எல்லோருடைய கூட்டுக் கலவைதான் நான்.
இன்னும் உழைப்பதற்கும் ஓடுவதற்கும் எனஅனை உறுதியாக்கிக்கொள்ளும் விருதாகத்தான் இந்த விருதை நான் கருதுகிறேன் ” என்றார் கமல்ஹாசன்.