தோசை சுடுவதற்குப் பணிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை ராணுவத்தில் சுடுவது வரை முன்னேறி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு வட்டம் என்னவோ தோசைக்கல் அளவுக்கானதுதான்.
அதிலும் தன் இணையை முடிவுசெய்யும் உரிமையில் பட்டணத்துப் பெண்களுக்கே பாதியளவு கூட உரிமை தரப்படுவதில்லை. காதலைக்கூட முகம்
மறைத்துச் செய்ய வேண்டிய கட்டாய சங்கிலியில் கட்டப்பட்ட ஒரு பெண் ஒன்றுக்கு மீறிய காதல்களை எதிர்கொண்டு அதில் தன்னவனைக் கண்டுபிடிக்கும் ஒரு முயற்சி சாத்தியமா..? சாத்தியப்படுத்தியிருக்கிறார் முதல் பட இயக்குநர் முத்துராமலிங்கன்.
இதற்காகவே பெண்கள் கொஞ்சம் டிவி சீரியலில் இருந்து வெளியே வந்து இந்த முயற்சிக்காகக் கைத்தட்டலாம்.
கண்டவரைக் காதல் கொள்ளவைக்கும் நாயகி சிநேகாவைப் பெண் பார்த்துப் போகும் இளைஞன் உள்பட இரண்டு பேர் காதலிக்கிறார்கள். தவிர இருவரை சிநேகா காதலிக்க யாருடன் அவள் இணைந்தாள் என்பது த்ரில்லான முடிவில்.
தன்னைப் பெண்பார்க்க வந்த இளைஞனிடம் ‘தன்னைப் பிடிக்கவில்லை…’ என்று சொல்லக் சொன்னாலும் அவனோ ‘மணந்தால் மகாதேவி…’ கதையாக ‘செட்டிலானால் சிநேகாதான்…’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். “சரி… என்னுடன் வா…” என்று அவனைக் கூட்டிக்கொண்டு லேடி டாக்டரிடம் செக்கப்புக்குப் போகிறாள் சிநேகா. அவன் முன்னிலையிலேயே அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவர, நாம் ஆடிப்போகிறோம்.
பின்னங்கால் பிடறியில் பட ஓடியிருக்க வேண்டியவன் அசராமல் நிற்க, “ஓகே… என்னுடன் கொடைக்கானல் வரை வந்து உதவ முடியுமா..?” என்று தன் கர்ப்பத்துக்குக் காரணமான காதலனைத் தேடிப்போக அவனிடமே உதவி கேட்கிறாள் சிநேகா. அப்போதும் கேள்வி கேட்காமல் கூட வரும் அந்த நல்லவன், வழியெல்லாம் சிநேகாவின் முந்தைய காதல்களைக் கேட்டுக் கொண்டே வந்தும், அவளது காதலுக்காகக் காத்திருக்கிறான்.
இப்படி தமிழ்சினிமா தொடத் தயங்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் அனாயசமாகத் தன் திரைக்கதையில் தொட்டுக் கடந்திருக்கிறார் முத்துராமலிங்கன். இலக்கியத்தைத் தொட்டுக்கொண்ட இயல்பான அவரது வசனங்களும் அதற்குத் துணையாகியிருக்கின்றன.
தன் முதல் காதலைப்பற்றிச் சொல்லும் சிநேகா, “காதல் வருவதற்கு அற்பமான காரணங்களே போதுமானதாக இருக்கின்றன…’ என்கிற ஜெயகாந்தனின் வரிகளைச் சொல்லி “அந்தக் கிழட்டுச் சிங்கத்தோட மீசையைப் பிடிச்சு இழுத்து நீ மட்டும் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு மத்தவங்களுக்கு இப்படிச் சொல்லலாமான்னு கேட்கணும்னு தோணிச்சு…” என்பது ஆழ்ந்த வாசக முத்திரை.
இப்படியே அகிரா குரோசாவா, சுஜாதா, பாலகுமாரன், பாலசந்திரன் சுள்ளிக்காடு என்று சினிமா, இலக்கிய ரசிகர்கள் கொண்டாடும் அத்தனைப் பேரையும் தன் வசனங்களில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதில் ‘கசடறக் கற்றவரா’க இருக்கிறார் இயக்குநர் என்பது புரிகிறது.
கொடைக்கானல் குளிரில் தான் வெளியே படுத்துக் கொள்கிறேன் என்று உடன் வந்த இளைஞன் சொல்ல, “நீ உள்ளேயே வந்து படுத்துக்கோ…” என்று சொல்லும் சிநேகாவிடம் அவன், “கற்பழிப்பவர்கள் இரண்டு வகைப்படுவர் – வாய்ப்புக் கிடைக்கப் பெற்றவர்கள், வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்கள்…. நான் வாய்ப்புக் கிடைக்கப்பெறாதவனாகவே இருந்துட்டுப் போறேன்… “என்னும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள் அதிர்கின்றன.
snehavin kadhalargalபெயருக்கேற்றாற்போல் சிநேகம் கொள்ள வைக்கும் நட்பு முகம் படத்தின் நாயகி கீர்த்திக்கு. நட்பு தாண்டியும் காதலிக்க வைக்கிற நளினம் இயற்கையாகவே அமைந்திருப்பது அவருக்கு ப்ளஸ். இதுவரை முற்போக்குப் பெண்களின் கதைகளைச் சொன்ன ஒன்றிரண்டு படங்களில் கூட நாயகிகள் காதல் பதத்துக்குத் தாண்டிய முதிர்வில் கொஞ்சம் ‘மேன்லி’யாகவே காட்டப்பட்டிருக்க, இந்த தெத்துப்பல் தெரிய சிரிக்கும் சிநேகா ‘ரேர் சாய்ஸ்..!’
ஸ்கூட்டரில் ஒன்வேயில் அதுவும் ட்ரிபிள்ஸில் வரும்போது போலீஸ் பிடிக்க… அவருக்கு டேக்கா கொடுக்கும் ‘நாட்டி’ சிநேகா… முதல் காதலன் ஜெய் திலக்கிடம் சிகரெட்டை வாங்கி ஒரு பஃப் அடித்துப் பார்த்து, “தண்ணியைக் கூட ஒத்துக்கலாம்… ஆனா, இந்த சிகரெட்டை எப்படிடா புடிக்கிறீங்க..?” என்கிற ‘ஸோ வாட்..?’ சிநேகா… சினிமாக் கனவுகள் சிதைந்து கிடக்கும் நண்பர்களின் முகம் கண்டு பீர் அடிக்கக் காசு கொடுக்கும் ‘ஃபிரண்ட்லி’ சிநேகா… மூன்றாவது காதலனின் கொடூர ‘பிளாஷ்பேக்’ காதல் தெரிந்தும் கவலைப்படாமல் “இப்ப நீ உம்ன்னு சொல்லு. உன் கைப்பிடிச்சு நடக்கிறேன்..!” என்கிற ‘போல்டு’ சினேகா… எல்லாவற்றுக்கும் மேல் “கிளைகளை நம்பிப் பறவை மரத்துல உட்கார்றதில்ல – தன் சிறகுகளை நம்பித்தான்…” என்று தெளிந்த மனத்துடன் பேசும் ‘கான்ஃபிடன்ட்’ சிநேகா… இப்படிப் பலமுகம் காட்டி மனத்தைப் பறிகொடுக்க வைக்கிறார் கீர்த்தி.
வெகுசில படங்களில் மட்டும் முகம் காட்டியிருக்கும் இவரை முன்னணி இயக்குநர்கள் இன்னும் சரியாகக் கண்டுகொள்ளவில்லையோ..?
கீர்த்தியின் ‘மூர்த்தி’களாக வரும் உதய்குமார், அதிஃப், ஜெய் திலக், ரத்தினகுமார் நால்வருமே புதுமுகங்கள். “உன்னைமட்டும் முதல்ல பார்த்திருந்தேன்னா நான் உன்னைதான் காதலிச்சிருப்பேன்…”என்று சிநேகாவே சொல்லும் அழகுக்குப் பொருத்தமானவராக இருக்கிறார் ‘அதிஃப்’. கடைசிவரை சிநேகாவுக்காகக் காடுமலையெல்லாம் கடக்கும் அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
கல்லூரிக் காதலுக்கு ஜெய் திலக், உதவி இயக்குநர் வேடத்துக்கு ரத்தின குமார், சாதிக்கொடுமைக் காதலுக்கு இலக்காகி ஆதிவாசிகள் நலனில் வாழ்க்கையை அர்ப்பணித்த கேரக்டருக்கு உதய்குமார் பொருத்தமாக இருக்கிறார்கள். அதிலும் உதவி இயக்குநர் ரத்தினகுமார், தன் இயல்பான நடிப்பால் மலைக்க வைக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
சமுதாயத்தில் சாபக்கேடாக இருக்கும் சாதித்தீ ஒரு காதலை எப்படிச் சுட்டெரிக்கிறது என்பதை கௌரவக் கொலையாகக் காட்டியிருப்பது நிஜத்துக்கு நெருக்கமான பதிவு. தன் தங்கையையே நடுரோட்டில் வைத்து எரிக்கும் கொடுமைக்கார அண்ணன் பன்னீர், கமர்சியல் சினிமாவின் ‘பான்பராக்’ ரவியைவிடக் கொடூரமாகத் தெரிகிறார்.
நான்கு காதல்கள் கடக்கும் படத்தில் எந்தவொரு காதலனும், சிநேகாவை தொடக்கூட… ஏன் குறைந்தபட்சம் முத்தம் கொடுக்கக்கூட இல்லை என்பது கண்ணியமான காதல்களை உறுதிப்படுத்துகிறது.
‘டிவிடி’யிலிருந்து படங்களைச் சுடும் இயக்குநர்கள், ஜாதகம் பார்த்து இயக்குநரை ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர், இயக்குநர் சொன்ன கதையை ரெகார்ட் செய்து படமெடுக்கும் தயாரிப்பாளர் என்று தமிழ்சினிமாவின் உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியிருக்கும் இயக்குநர், அஸிஸ்டன்ட் டைரக்டர்களின் அல்லல்களுக்கு மௌனசாட்சியாக நிற்கும் கோலிவுட்டின் ‘சிவன் பார்க்கை’யும் காட்சியில் கொண்டுவந்து ஆவணமாக்கியிருக்கிறார்.
ஆனந்தின் ஒளிப்பதிவில் இயல்பு தொனிக்கிறது. இரா.பிரபாகரின் இசையில் அமைந்த பாடல்களில் இளையராஜா பாடல்களின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஒவ்வொரு பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அவர் இசைஞானியைப் பின்பற்றியிருக்கலாம்.
‘பலே…’ போட வைக்கின்றன பாடல் வரிகளும். முத்துராமலிங்கனே எழுதியிருக்கும் ‘உறவுகள் தொலைத்து…’ பாடலில் நெஞ்சம் கனக்கிறது என்றால், நெல்லை பாரதி எழுதியிருக்கும் ‘மடியில நெருப்பைக் கட்டி அலையறாங்க பேரண்ட்ஸு…எதுவுமே கண்டுக்காம திறியறாங்க ஸ்டூடண்ட்ஸு…’ என்கிற வரிகள் கவனித்து ரசிக்க வைக்கிறது. ‘மதுரையின் பெருமை’ சொல்லும் பாடலும் அருமை.
snehavin kadhalargalஇந்த அவசர யுகத்தில் இளம் பெண்களின் தனி ஒரு சாட்சியாக இருக்கும் சிநேகாவின் இந்தக் காதல்களிலிருந்து கற்றுக் கொள்ளவும், விட்டு ஒதுக்கவும் நிறைய இருக்கின்றன. ஒரு காதல் கதையில் துருத்தாமல் பெண்ணியம், சாதிக்கொடுமை, வனப் பாதுகாப்பு, இலக்கியம் எல்லாம் தொட்டுக் கதை சொல்லியிருக்கும் இயக்குநர் முத்துராமலிங்கன், தமிழ்சினிமாவில் நம்பிக்கை வைக்கக்கூடிய இயக்குநர்கள் பட்டியலில் இணைகிறார். மேற்சொன்ன காரணங்களுக்காகவே இந்தப்படம் விருதுகளுக்கும் உரித்தாகலாம்.
அந்த வகையில் சிநேகாவின் இந்த சிக்னேச்சரை பெண் வழிக் கதைகளின் ஆட்டோகிராஃபாகவும் கொள்ள முடியும்..!
– வேணுஜி
நன்றி – ஜீ இணையதளம்