பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீது மீண்டும் மீண்டும் பயங்கரவாத தாக்குதலைத் தொடுத்து இன அழிப்பு போரை நடத்திவருகிறது இசுரேல் யூத இனவெறி அரசு. கடந்த ஜூலை 8-ம் தேதி தொடங்கிய தாக்குதலில் இதுவரை 2,100-க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்தாயிரத்திற்கும்
மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில், நானூற்றுக்கும் கூடுதலான குழந்தைகள் உள்ளிட்டு, 80 சதவீதத்திற்கும் (1,700க்கும்) மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்களாவர்.
காசாவின் உண்மை நிலை பற்றி அறியத்தருகிறது காசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.
காசாவின் அழுகுரல்
2008-09-ல் 22 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 1,387 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் 257 குழந்தைகளை உள்ளிட்டு 773 பேர் அப்பாவி பொதுமக்கள்.
2008-ம் ஆண்டு காசாவின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் குறித்து அறிந்த வைபக் லாக்பெர்க் (Vibeke Løkkeberg) என்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் இயக்குனர் நடப்பவற்றை உலகுக்கு அறியத்தர காசா பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அச்சமயத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள் காசா பகுதிக்குள் செல்ல இஸ்ரேல் தடை விதித்திருந்தது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.
இப்படம் தன் மீதான திட்டமிட்ட அவதூறு என்றும் பாலஸ்தீன சார்பு பிரச்சாரப் படம் என்றும் இஸ்ரேல் முத்திரை குத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களின் பார்வையில் இருந்து துவங்கும் இப்படம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நேரடி காட்சிகளாக பதிவு செய்துள்ளது. இதன் உண்மையும், நம்பகத்தன்மையும் அதற்கு பல சர்வதேச விருதுகளை ஈட்டித் தந்துள்ளது. ஒருவேளை இசுரேலை அடக்க விரும்பாத ‘சர்வதேச நாடுகள்’ இப்படி விருது கொடுத்து காட்டிக் கொள்கின்றதோ? எனினும் அதே வல்லரசு உலகை கேள்வி எழுப்ப இப்படம் கண்ணீருடன் உங்களை தொட்டு எழுப்பும்.
காசாவின் அழுகுரல்ஆவணப்படத்தில் பேசும் சிறுவர்கள், இசுரேலின் ஆக்கிரமிப்புப் போரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும சூழலில் வளர்ந்தவர்கள்.
14 வயதான அமிரா படித்து பெரியவளாகி வழக்குரைஞர் ஆக விரும்புவதாகவும், அதன் மூலம் இஸ்ரேலிய கொடுங்கோலர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.
12 வயதான யாஹ்யா டாக்டராக வேண்டுமென கனவு காண்கிறான், அதன் மூலம் இஸ்ரேலிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யமுடியும் என்கிறான்.
11 வயதான ரஸ்மியா இங்கு வாழ்க்கை மிகக் கடினமாகத்தானிருக்கிறது என்று வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பேசுகிறாள். இந்தக் குழந்தைகள் அனைவரும் போராட்டச் சூழலில் இழப்புகளும், துயரங்களும் சூழ வாழ்பவர்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!
விசில் அடிப்பது போன்ற சத்தத்தை அடுத்து ஒரு ஏவுகணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தாக்குகிறது. பாஸ்பரஸ் குண்டினால் ஒரு நிமிடத்தில் அக்கட்டிடம் எரிந்து சாம்பலாகிறது.
சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் கொத்து குண்டுகள் இலக்கிற்கு அருகில் வந்தபின் வெடித்து சிதறுவதால் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிகிறது.
மற்றொரு தாக்குதலில் காதை செவிடாக்கும் ஒலியுடன் ஒரு குடியிருப்பு நொறுங்கிச் சிதைகிறது. ஒளிப்பதிவாளர் அக்குடியிருப்பை நோக்கி ஓடுகிறார். அங்கே பலர் உடைந்த கட்டிட சிதறல்களுக்கிடையே இறந்தவர்களின் உடல்களை மீட்கின்றனர். கான்கிரீட் சிதிலங்களை அகற்ற அகற்ற பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மீட்க்கப்படுகின்றன. கூட்டம் பெருங்குரலெடுத்து அலறுகிறது, ‘அல்லாஹூ அக்பர்’. ஆயினும் இறைவன் அரபு நாடுகளின் ஷேக்குகளின் பிடியில் இருக்கிறானோ என்னமோ! ஏனென்றால் இதே அரபுலகின் ஆளும் வர்க்கம் அமெரிக்காவின் தயவில் தனது சொகுசு வாழ்வை கழிக்கிறது.
ஐ.நா அமைத்துள்ள மருத்துவமனைக்கு காயமுற்றவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அம்மருத்துவமனை அடுத்த தாக்குதல் இலக்காகிறது. மிக அருகிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் உடல்களை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.
காசாவின் அழுகுரல்சிறுமி ரஸ்யாவின் வீடு ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதையடுத்து அவர்கள் பாதுகாப்பிற்காக ஐ.நா வின் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பள்ளியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. அன்று இரவு வெளியில் சென்ற தனது உறவினர் மற்றும் அவரது குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது உடல் தெருவில் சிதறிக்கிடந்ததை பார்த்திருக்கிறாள். கடைசியாக ஐ.நா அகதி முகாமில் இருக்கும் அவள் கூறுவது இதை தான் – “இங்கு வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மிக மோசமாக…”
இது மட்டுமின்றி திட்டமிட்டும் குறிபார்த்தும் அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதை சிறுமி அமிராவின் கதையைக் கொண்டு அம்பலப்படுத்துகிறது இப்படம். தாக்குதலில் காயமுற்ற அமிராவின் வீட்டில், குண்டு வெடிக்கிறது, அவரும் அவரது சகோதரர்களும் வெளியில் சென்று பார்த்த போது அவரது தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவி கேட்பதற்காக வெளியில் சென்ற சகோதரர்கள் இன்று வரை திரும்பவில்லை. மற்றொரு குண்டு வெடித்ததில் அமிராவின் காலில் அடிபட்டு நினைவிழந்து விடுகிறார். நினைவு திரும்பி நகர முயற்சித்த வேளையில் மற்றொரு ராக்கெட் வீட்டில் அவர் இருந்த பகுதியை தாக்கியுள்ளது. அதாவது தனது தாக்குதல் இலக்கில் யாராவது உயிருடன் நகர்வது தெரிந்தால் உடனடியாக குறிபார்த்து தாக்குகிறது இஸ்ரேல் ராணுவம்.
தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை வீசும், குடியிருப்புகளின் மீதும் ஐ.நாவின் மருத்துவ முகாம்கள், பள்ளிகளையும் கூட விட்டுவைக்காமல் தாக்கும், அப்பாவி பொதுமக்களை குறிபார்த்து சுட்டுக்கொல்லும் இஸ்ரேலை உலகெங்கிலும் உள்ள பாசிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். நமது நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இனவெறி பாசிஸ்டுகள் தாங்கள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாக அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்தனர். மோடி அரசும் கூட தாங்கள் யார் பக்கம் என்பதை அறிவித்துக் கொண்டது. பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாக சிந்திப்பதில் வியப்பில்லை.
ஆனால், ஜனநாயகவாதிகளும், மனிதத் தன்மை கொண்டோரும் இஸ்ரேலை மட்டுமல்ல, நமது நாட்டில் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் ஆர்.எஸ்.எஸ் வகை பாசிஸ்டுகளையும் எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே காசாவின் மக்களுக்கு நமது தார்மீக ஆதரவை அளிக்க முடியும், அளிக்க வேண்டும்.
—நன்றி. வினவு இணையதளம் http://www.vinavu.com/2014/08/27/tears-of-gaza-documentary-video/