லையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த “த்ரிஷயம்” திரைப்படம் தமிழில் “பாபநாசம்” என தயாராகிறது. கமலஹாசன், கௌதமி மற்றும் பலர் நடிக்கின்றனர். என்னடா, வினவில் ஒரு சினிமா தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்ட சம்பிரதாய செய்திகளை படிக்கிறோம் என்று அதிர்ச்சியடைகிறீர்களா, பொறுங்கள்!

திரிஷ்யம்

தமிழில் ஒரு சினிமா வெளியாகி ஓடும் காலம் மிக குறைவாக இருந்தாலும் இலாபம் மிக அதிகமாக இருக்கிறது. பல்வேறு ஒளிபரப்பு, ஒலிபரப்பு உரிமைகள், விநியோகம், உள்நாடு, வெளிநாடு, தொலைக்காட்சி என்று ஐந்து நாட்கள் ஓடினால் கூட சில மடங்கு இலாபம் அள்ளலாம். முன்னர் அதிக காலம் ஓடினால் மட்டுமே இந்த இலாபம் சாத்தியம். ஆனால் அன்று அந்த படங்களுக்கு வரும் செய்திகள், விளம்பரங்களை விட இன்று மிக அதிகம் வருகிறது.

ஆக, படம் குறைவான நாட்கள் ஓடினாலும், படத்தைப் பற்றி மிக அதிகம் பேர் பேச வேண்டும் என்பதாக மாற்றி விட்டார்கள். வம்படியாக ஒரு பிராண்டை ரசிகனின் மனதில் நிலைநிறுத்தும் இந்த மலிவான தந்திரமும் கூட ஒரு படப்பிடிப்பு போல மிகவும் செலவு மற்றும் சிந்தனையுடன் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது.

இதன்படி கமலஹாசனின் பாபநாசம் திரைப்படம் குறித்து, “படம் துவங்குகிறது”, “படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது”, “மோகன்லால் நடித்த மலையாளப்படம் தமிழில்”, “கேரளாவில் கமல் நடிக்கும் படத்தின் படப்படிப்பு”, “பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்”, “விரைவில் பாபநாசம் திரைக்கு வருகிறது” என்று வழக்கமான செய்திகள் பயங்கரமான விறுவிறுப்பாக காட்டப்பட்டு கொட்டப்படுகின்றன.

இந்த செய்திகள் கவரேஜ் எனும் பெயரில் கவர்கள் மூலம் நடக்கும் கவர் ஸ்டோரிகளின் புழுக்கைகள் எனும் விசயம், பரவலாக அனைவரும் அறிவர். சரி இந்த எழவுக்கு இப்போது என்ன என்கிறீர்களா?

ஐயா, நம்புங்கள், மேற்கண்ட பாபநாசம் கவரேஜ் செய்திகளின் தலைப்பில் ஒரு தலைப்பை (தடித்த எழுத்துக்களில் இருப்பது) கின்னஸ் ரிகார்டில் இடம்பிடிக்க போகும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்!

விடுங்கள், இந்த பாபநாசம் படப்படிப்பு குறித்து ஜெயமோகன் எழுதிய கவரேஜ் வரிகளில் சிலவற்றை படியுங்கள்…………

“ஒரு சினிமாப் படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம், சினிமாப் படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது, சினிமா போல அத்தனை அற்புதமான கூட்டு உழைப்பு இருந்தால் பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் 70 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று பலமுறை தோன்றியிருக்கிறது, கலைமனம் கொண்ட இத்தனை பேர் ஒரே இடத்தில் கூடும் இன்னொரு தருணம் நம் கலாச்சாரத்தில் இன்று இல்லை, வெட்டி லௌகீகப் பேச்சுகளை சினிமாச்சூழலில் நான் கண்டதே இல்லை, டீக்கடைக் கிசுகிசுப் பேச்சாளர் முதல் வணிக சினிமாவை கரைத்துக் குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப் பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது, சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, சிரித்து கண்சிவந்து மூச்சுத்திணறிய அரங்கா மனமுடைந்து ‘இதேமாதிரி வேடிக்கையும் வெளையாட்டுமா வேற ஒரு தொழிலே இல்லியே சார்’ என்றார், அவர்கள் பார்ப்பது நட்சத்திரமான கமலை அல்ல; உற்சாகமே உருவான ஒரு சக சினிமாக்காரரை; அவர்களுக்கு அவர் மேல் இருக்கும் மோகம் அந்த உயிர்த்துடிப்பு காரணமாகவே……..”

ஜெயமோகன் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் எதனிலும் தன்னையே தான் முடிவு செய்வதையே பார்த்து மகிழும் நார்சிச நானஞான மரபில் உருவானவர். ஆகையால் கமலின் படப்படிப்பில் எந்நேரமும் கொண்டாட்டமும், கும்மாளமும், அறிவும், இலக்கியமும் அனைத்து ரசங்களும் ரசிகமணி டிகேசிக்கு போட்டியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழ் சினிமாவின் ஒரு நாள் படப்படிப்பை ஒதுங்கி நின்று பார்ப்பவர்கள்தான், கொண்டாட்டம் யாருக்கு, திண்டாட்டம் எவருக்கு என்று பிரித்து பார்க்க முடியும்.

எழுத்தாளரின் இந்த கொண்டாட்டத்தை நகலெடுத்து சினிமாவில் தயாரிப்பு உதவியாளர் வேலை செய்யும் ஒரு நண்பரிடம் காட்டி பேசினோம்.

சினிமான்னா ஜாலின்னு எவன் சொன்னான் என்று ஆவேசத்துடன் அவர் கூறியவற்றை நிதானமாக தொகுத்து தருகிறோம்.

வெளிப்புறப் படப்பிடிப்பு ஒன்றில் புரொடக்சன் பாய் எனப்படும் தயாரிப்பு உதவியாளரின் ஒரு நாள் வேலை என்ன?

“சன்ரைஸ்” கால்ஷீட் அல்லது 9 மணி காலஷீட் என்றால் விடியற்காலை 3.30 மணிக்கு எழுந்திருக்கணும். டீ மாஸ்டரை எழுப்பி, முதலில் தங்களுக்கு டீ போட்டு வாங்கி குடித்து விட்டு படப்பிடிப்பு குழுவினருக்கு தேநீர் தயாரிக்க வேண்டும்.

5 ஸ்டார் ஹோட்டல், 3 ஸ்டார் ஹோட்டல், சாதாரண லாட்ஜ், டார்மிட்டரி என தரவாரியாக பிரிக்கப்பட்டு தங்கியிருக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட முறையில் டீயை பிளாஸ்குகளில் நிரப்பி வகை பிரித்து அனுப்புவாங்க. ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பவங்களுக்கு அங்கேயே காப்பி கிடைச்சாலும், அதை குடிச்சாலும் குடிக்கலைன்னாலும், இங்கிருந்தும் காபி கொண்டு போய் சேர்க்கணும். கதவைத் தட்டி கொடுத்து விட்டு வர வேண்டும். எழுந்து வரவில்லை என்றாலும், வெளியில் வைத்து விட்டு வர வேண்டும்.

வேக்-அப் கால் வசதி இல்லாத இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு டீ எடுத்து வந்திருக்கேன்னு சொல்லி எழுப்பி விடணும்,. அப்படியே வெச்சிட்டு போய்ட்டா, “என்னா திமிராடா, வைச்சிட்டு போயிட்டியா”ன்னு திட்டு விழும்.

இங்கே எல்லாம் முடித்து விட்டு தனக்கு நிகரான லைட் மேன், அசிஸ்டண்ட் கேமராமேன் போன்ற தொழிலாளிங்க தங்கியிருக்கும் இடத்தில்தான் மனசு விட்டு சிரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த பகடி படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்களும், நடிகர்களும், எழுத்தாளர்களும் செய்யும் அறுவை கலந்த பகடி பம்மாத்து அல்ல. சினிமாவின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் அறமும் கோபமும் கலந்த சமூக நகைச்சுவை அது.

உதாரணமாக, ஜெயமோகன் படப்பிடிப்புக்கு வந்திருப்பது குறித்தும் கிண்டல் செய்வாங்க. “அங்க ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். எதுக்கு வந்திருக்கான்னே தெரில. இவன கதை எழுதச் சொன்னாங்களா, இங்க வந்து ஆணி புடுங்கச் சொன்னாங்களா? நாமதான் அவனுக்கும் சேர்த்து கேரியர் தூக்க வேண்டியிருக்கு. அது இல்லாது கூட யாரோ ரெண்டு பேரையும் இட்டுகினு வந்துட்டான். அவனுங்க முன்ன பின்ன ஷூட்டிங்கே பார்த்திருக்க மாட்டானுங்க போல. வேல வெட்டியில்லாம கெளம்பி வந்துட்டானுங்க” என்று வைவார்கள்.

சினிமா ஷூட்டிங்

நாகரீகம் கருதி இத்தகை கேலிப்பேச்சை கொஞ்சம் அடக்கிச் சொல்கிறோம். அந்த கிண்டல்களை முழுமையாக நேரில் கேட்டால் சினிமா ஷூட்டிங் என்பது சுகபோகமும் கொண்டாட்டமும் அல்ல. காட்சிகளை தயாரிப்பதற்காக தொழிலாளிகள் படும் நரகவேதனை என்பது புரியும். அந்தத் தொழிலாளி தான் நாள் முழுவதும் படும் உபாதையை, ஒரு நாள் பேட்டாவுக்காக அல்லாடும் வாழ்க்கையின் அவலத்தை இப்படி கேலி செய்வதன் மூலம்தான் தணித்துக் கொள்கிறார். உண்மையில் உலகின் ஆதி பாடல், கவிதை, பாட்டு எல்லாம் இப்படித்தான் தோன்றியது.

அதிகாலை டீ கொடுத்து முடித்த பிறகு டிபன் கொண்டு போக ஏற்பாடு செய்ய வேண்டும். ஷூட்டிங் வேலைக்கு போறாங்களோ இல்லையோ, டிபனை சரியான நேரத்துக்கு கொண்டு போக வேண்டும். அப்படி இல்லைன்னா ஜெயமோகன் விவரிக்கும் அவர்களுடைய கொண்டாட்டம் டரியல் ஆகி விடும்.

அதன் பிறகு, காலையில் டீ கொடுத்த பிளாஸ்க் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி கொண்டு வர வேண்டும். மதியானம் சாப்பாட்டுக்கு யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும்னு லிஸ்ட் வாங்கணும். கமலஹாசனில் ஆரம்பித்து அல்லக்கையாக வந்து உட்கார்ந்திருப்பவர்கள், வேடிக்கை பார்க்க வந்திருக்கும் வாசகர் வட்ட கூட்டம் எல்லோருக்கும் என்ன பிடிக்கும்னு கேட்டு வாங்கிகிட்டு போய் கிச்சனுக்கு போகணும். ஜெயமோகன் மாதிரி ஆட்கள் ஒவ்வொருத்தரும் தனக்கு என்னென்ன ஒவ்வும், ஒவ்வாது, வேணும் வேணாம்னு ஒரு லிஸ்டோட போயிருப்பாங்க. இந்த லிஸ்ட்ட நிறைவேத்தணும். எல்லாருக்கும் வழக்கமான உணவு வகைகளோடு ஸ்பெஷல் அயிட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.

மதிய உணவு முடிந்த பிறகு மாலை ஸ்வீட், காரம், காப்பி ஏற்பாடு செய்யணும். ஒவ்வொருத்தருக்கும் டீ பிடிக்குமா, காபி பிடிக்குமா என்று பட்டியல் போட்டு கொண்டு போய் சேர்க்கணும். இதுல டேஸ்ட்டு சரியில்ல, அளவு குறைச்சல், பணிவு இல்லேன்னு மண்டை சைசுக்கு தகுந்த மாதிறி ஆடுவாங்க. அதையெல்லாம் அணைச்சு திருப்பணும்.

இது எல்லாத்துக்கும் மேல, கூப்பிடும் நேரத்தில் காபி, டீ, சிகரெட், தண்ணீ என்று கொடுக்க தயாராக நிக்கணும். எப்போ கூப்பிடுவாங்கன்னு தெரியாது, கூப்பிடுறதை பார்க்கலைன்னா அதுக்கு ஒரு கத்து.  200-300 பேரு இருக்கிற இடத்தில யார் யார் கூப்பிடுறாங்கன்னு அங்கேயே பார்த்துக் கொண்டே இருக்கணும். பார்க்காம ஒரு செகண்டு லேட் ஆயிடிச்சின்னா “என்னா மயிரை புடுங்கிறீங்க” என்று திட்டு விழும். குடிக்கிற தண்ணீர் பக்கத்திலேயே இருந்தாலும் கேப்பாரு. ஓடிப்போய் எடுத்து கையில கொடுக்கணும்.

கேரளாவில் “எந்தா வேணே”ன்னு என்று கேட்ட சர்வர் குறித்து அறச்சீற்றம் கொண்டு எழுத்தில் பொங்கிய ஜெயமோகனையே சம்பளம் கொடுத்து எழுத வேலைக்கு வைத்திருக்கும் இயக்குனர்கள், நட்சத்திர நடிகர்களின் கோபமும், ஆவேசமும் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாத்துக்கோங்க. சொல்லப்போனா தமிழ் சமூகத்தில் உள்ள பண்ணையடிமைத்தனம், அடிமைத்தனம், கௌரவம் அனைத்தும் தமிழ் சினிமாவில்தான் இன்றும் முழுதாக உயிர்வாழ்கிறது.

தொழிலாளர்கள்

அந்த நட்சத்திரங்களோட கொண்டாட்டமே இது போன்ற தொழிலாளர்களை வதைப்பதுதான். கிடைக்கும் பேட்டாவுக்காக படப்பிடிப்புக்கு வந்து வேலை செய்யும் அவர்கள், இந்த நட்சத்திரங்கள் மனம் கோணி விடக் கூடாது, அவர்களது கொண்டாட்டம் சுணங்கி விடக் கூடாது என்று வேகமாக ஓடி வருவது, போவது, பதறுவது இதை எல்லாம் கிண்டல் செய்வார்கள். “இவன் எப்பிடி எடுத்து வருவான் தெரியுமா சார், எப்பிடி ஓடுவான் சார்” என்று கிண்டல் செய்து அநாகரிகமாக குத்திக் குத்தி ரசிப்பதுதான் கொண்டாட்டம். அதை அந்த தொழிலாளியும் ரசிக்கணும். பதிலுக்கு அவர் கமலஹாசனையோ, ஜெயமோகனையோ கிண்டல் செய்ய முடியாது. கமல்ஹாசன் நடிப்பதற்கு கை தட்டலாம். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “நடிப்பது தவறு, நடிக்கவே தெரியல – இவனெல்லாம் உலக நாயகனா” என்று யாராவது சொல்ல முடியுமா?

மேக் அப், காஸ்ட்யூம் பாய் இவர்களின் பயத்தையும், அச்சத்தையும் கிண்டல் செய்து சிரிக்கும் இந்த கொண்டாட்ட கோமான்கள், “ஏண்டா இப்படி ஓடிக்கிட்டே இருக்கியே, சாப்பிட்டாயா” என்று கேட்க மாட்டார்கள், அருகிலேயே தண்ணீர் வைத்திருந்தாலும் குரல் கொடுத்து கூப்பிட்டுத்தான் எடுத்து தரச் சொல்லுவார்கள். இப்படி இருந்தா ஏண்டா கொண்டாட்டம் இருக்காது? நாக்கு நனைக்கவும், ஆய் கழுவவும் ஆள் வைச்சிருக்கிறவன் ஆனந்தம் குறித்து நமக்கு வகுப்பு எடுக்கிறான் மக்களே!

பாபாநாசம் படப்பிடிப்பு நடுவில் கமலஹாசனுக்கு நேர்ந்தது போல ஏதாவது உடலுக்கு வந்து விட்டால் அமர்க்களம் செய்து படப்பிடிப்பை நிறுத்தி வைப்பது வரை கூட போய் விடுவார்கள். இங்கே கமலஹாசன் மூக்கில் ஒரு சிறு ரப்பர் துகள் போய்விட்டது என்று அது இன்டர்நேஷனல் நியூசாக, ஜெயமோகன் வாய்சாகவெல்லாம் மாறும். அடேங்கப்ப்பா!

இதே நேரம் தொழிலாளர்கள் வயிறு சரியில்லை, தலைவலி, காய்ச்சல் என்று வந்து விட்டால் அதையும் சமாளித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும். முடியவே முடியாமல் படுத்து விட்டால் அவருக்கு பதிலாக இன்னொருவர் அட்ஜஸ்ட் பண்ணி கொள்வார். “அவன எங்கடா” என்று அதட்டலுக்கு, “இப்ப வந்துடுவான் சார்” என்று திட்டு வாங்கிக் கொண்டு சக தொழிலாளியை பாதுகாப்பார். நேரடியாக உடல்நலப் பிரச்சனை என்று சொன்னால் முதலாளியோ, நடிகனோ ஓய்வு கொடுத்து விடப் போவதில்லை.

மனிதத் தன்மை இல்லாத கும்பலுக்கு வேலை செய்யும் நிலையில் மனதை மரக்க வைக்க பான்பராக் போட்டுக் கொண்டே நாள் முழுவதும் உலாத்துவார்கள்.

மாலையில் ஷூட்டிங் முடிந்து 6 மணிக்கு மேல் தனிப்பட்ட நேரம். ஆனா புரடக்சன் பாய்க்கு அது கூட இல்லை. அவனவன் லாட்ஜூக்கு போய் விட்டா, காலையில் தூக்கிகிட்டு போன மாதிரி கேரியரை தூக்கிக் கிட்டு போய் தண்ணி அடிப்பதற்கு தேவையானது என்னென்ன, நைட்டு என்ன கொடுக்கணும்னு புரொடக்சனில் சொன்னதை எல்லாம் நிறைவேத்தலைன்னா, தண்ணில இருந்தாலும், தெளிவா இருந்தாலும் தூக்கத்தில இருந்தாலும் திட்டு என்பது நிரந்தரம். அதுவும் நட்சத்திர நடிகர் திட்டுனா அது அவரோட போகாது, அவனோட அல்லக்கைங்கள்ல இருந்து, அள்ளிக் கொடுக்கும் முதலாளி அவனோட சகபாடின்னு ஆளாளுக்கு திட்டி தீர்ப்பானுங்க! இதுதான் ஜெயமோகன் அண்ணாத்தேவுக்கு கேரவான்ல சங்கீதமாக கேட்டுருக்கு போல! காத டாக்டர்கிட்ட காமிய்யா வெண்ணை!

8 மணிக்கே சோறு வரலையான்னு ஒருத்தன் கேட்பான். 11 மணி வரை கூட ஒருத்தன் கூட சாப்பிடாம இருப்பான். 8 மணியா, 11 மணியா என்று தெரியாமல் ஒருத்தன் திட்டுவான். 9 மணிக்கே வாசலில் கொண்டு வைத்து விட்டதை பார்க்காமல் ஏன் சாப்பாடு வரலைன்னு 11 மணிக்கு ஒருவன் திட்டுவான்.

இது எல்லாம் முடிஞ்சி, எச்சில் கேரியர் எல்லாம் தூக்கி கொண்டு போட்ட பிறகு சராசரியாக 11 மணிக்கு மேல் ஆகி விடும். இவ்வளவு வசவுகளையும் வாங்கிக் கொண்டு ஓஞ்சு போய், நாள் முழுவதும் ஓடிய ஓட்டத்துக்குப் பிறகு தூக்க கலக்கத்தில் ஒழுங்காக சாப்பிடக் கூட முடியாது. ரசம் இருக்குதா, மோரு இருக்கா என்று திரும்பவும் 3 மணிக்கு எழுந்திருக்கும்படியா மிதமா சாப்பிட்டு விட்டு படுக்க போகணும்.

அங்கு படுக்கிற இடம் இவர்களோட கேரவானோ, 5 ஸ்டார் ஹோட்டலோ கிடையாது. அது ஒரு வேர்வைக் கூடம் (sweat shop). படுத்தா எழுந்திருக்க முடியாம போயிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு தரையிலும், அரைகுறையா டக் என்று விழித்து விடுவது போல அங்கேயே படுத்துக் கொள்வார்கள். வீட்டில் கூட நல்லா தூங்கியிருப்பான். இங்க வந்து அப்படி தூங்க முடியாது.

திரும்பவும் 3 மணிக்கு எழுந்து இதே ஓட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த கொண்டாட்டத்தை ரசிப்பதற்கு ஒன்று விகாரமான சாடிஸ்ட்டாக இருக்க வேண்டும், அல்லது இலக்கியவாதியாக இருக்கணும்.

இது போல நடிகருக்கான எல்லா பொருட்களையும் – கொண்டு வர வேண்டிய பொறுப்பு காஸ்ட்யூம் அசிஸ்டெண்டுக்கு. கமலஹாசனின் செருப்பை துடைச்சு வைக்கல, 2 டஜன் செருப்பில் 3-வது செருப்பை விட்டு விட்டு வந்து விட்டான், கைக்குட்டை, ஸ்கார்ஃப் இல்லை என்று வரிசையாக கேள்வி வந்து கொண்டே இருக்கும். ஏதாவது பிரச்சனைன்னா வேறு யாரும் பொறுப்பு எடுத்து கொள்ள மாட்டார்கள். “தூக்கு செட் அசிஸ்டெண்ட, புடுங்க வந்தயா, சினிமாவுக்கு வந்தயா, பேட்டா வாங்கற இல்ல. வந்தா வக்கணையா இங்க வந்து கேக்கறீங்க இல்ல” என்று வைவார்கள். இது நாகரீகமான வசவு, முழு வசவையும் கேட்பதற்கு ஆயிரம் காது பத்தாது.

தொடுபுழாவில் போடப்பட்ட செட் கனவு போல கலைந்திருக்கும் என்று உருகுகிறார் ஜெயமோகன். ஆனால், அந்த செட்டை உருவாக்கியவர்களுக்கு அது கலைந்து போயிருக்காது. பேக் ரவுண்டில் ஒரு பூச்செடி, பூத்தொட்டி அல்லது ஒரு அலாரம் கடிகாரம், கூஜா, பூச்சட்டி திரும்பவும் வைக்க மறந்து விட்டால் ‘நான்கு பேருக்கு மத்தியில் 20 வருட சர்வீஸ் உடைய என்னை திட்டிட்டான்’ என்ற காயம் அங்க அடையாளம் போல துன்ப அடையாளங்களாக அவர்களது மனதில் பதிந்து போயிருக்கும்.

மேக்-அப் உதவியாளர், நடிகர் எப்போது கண்ணாடி கேட்டாலும் காட்டுவதற்கு தயாராக இருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் ஒரு நிமிசம் கவனிக்காமல் இருந்து விட்டால் கூட போச்சு. அவன் மூஞ்சியை தவிர இவன் கண்ணில் எதுவும் தெரியக் கூடாது. கண்ணாடி நடிகரின் மூஞ்சியை காட்டுவது போல, இவர் நடிகரை தன் கண்ணில் பிரதிபலித்துக் கொண்டு நிற்க வேண்டும். முகத்தை துடைப்பதற்கு பேன் கேக்கைக் கூட கையிலேயே விரல்களின் நீட்சியாக தயாராக வைத்திருக்க வேண்டும். பையை திறந்து எடுக்கும் நேர தாமதத்தைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இது போல சண்டை நடிகர்கள், நடன உதவியாளர்கள், ஸ்பெஷல் எஃபெக்ட் உதவியாளர்கள் என 25 துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை இதுதான்.

துணை இயக்குநர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள் என்று அடுத்த நிலையில் இருப்பவர்களின் கொண்டாட்டமும் அதோ கதிதான். முதல் இரண்டு துணை இயக்குனர்கள் உட்பட ஒரு 6 பேரின் கொண்டாட்டத்தை மட்டும்தான் ஜெயமோகன் பார்த்திருக்கிறார். மற்ற துணை இயக்குனர்கள் எல்லோரும் கண் மறைவாகத்தான் இருக்க வேண்டும். பவ்யமாக இருக்க வேண்டும். ஒரு அசையா பொருள் போல இருக்க வேண்டும். முகத்தில் உணர்ச்சி இருக்கக் கூடாது. பணக்கார வீடுகளில் வேலை செய்பவர்கள் போல எந்திரம் போல காதில் விழும் உரையாடல்களுக்கு எதிர்வினை புரியாமல் இயங்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

வெளியூர் போனாலும் பேட்டாவைக் கூட மதிப்பாக கொடுக்க மாட்டார்கள். வேலை முடிந்த உடன் கேட்டால் திட்டி கேவலப்படுத்துவார்கள். காத்திருந்து கொடுக்கும் போதுதான் வாங்கிக் கொள்ள வேண்டும். மாலையில் பேட்டா வாங்க வரிசையில் நிற்கும் போது அவர்களிடம் கொண்டாட்ட மனநிலையை கேட்க வேண்டும். அந்த நேரத்தில் இழக்கும் சுயமரியாதையை பற்றி ஜெயமோகன் கேட்டிருப்பாரா. அந்த வசவு தரும் துயரங்களின் இறுக்கத்தைத்தான் உணர்ந்திருப்பாரா?

சினிமா கிண்டலில் தமிழ்ப் பண்பாடு குறைவாகவே காணப்படும் என்று சொல்கிறார் ஜெயமோகன். அப்படி அவர் சொல்லும் குறைவான பண்பாடு பற்றிய உரையாடல்களை அவர் எழுத முடியுமா? படப்பிடிப்பில் இப்படித்தானே பேசிக் கொள்கிறார்கள் என்று யாராவது சொல்லி விடக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு முன்ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

அதாவது அசிங்கமாக பேசுவதுதான் அந்தப் பண்பாடு. உழைக்கும் மக்கள் அசிங்கம் என்று காறித்துப்பும் மொழியில்தான் அவர்கள் பேசிக் கொள்வார்கள். ஹீரோயினாக நடிக்கும் பெண்ணின் அங்கங்களை பற்றி ஆபாசமாக பேசுவது. காதல் வயப்பட்ட பெண்ணின் நடத்தையைப் பற்றி இழிவாக பேசுவது. ஷூட்டிங்குக்கு அம்மாவோடு வருகிறவரை பற்றி கேவலமாக பேசுவது. இது போன்று இழிவாக பேசுவதைத்தான் இவர் கொண்டாட்டம் என்று சொல்கிறார். பேச்சிலேயே போர்னோ காட்டி சுகம் காணுவார்கள். அதை விட்டால் கீழ் மட்ட ஊழியர்களின் வேதனை, கிண்டலில் சுகம் காணுவார்கள். இதுதான் ஆரம்பல கால தமிழ் மன்னர்கள், பண்ணையார்கள் தொட்டு இப்போதைய அரசியல்வாதிகள், நடிகர்கள், சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை தொடரும் ஒரே பண்பாடு!

படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம் என்று சொல்கிறார் ஜெயமோகன் 200 பேர் கலந்து கொண்ட படப்பிடிப்பில் 150 தொழிலாளிகள் எப்படா வேலை முடிஞ்சி இங்கிருந்து போகப் போறோம் என்று துடித்துக் கொண்டிருப்பார்கள். 40 நாள் படப்பிடிப்பில் இது போல நாயாக வேலை செய்வதற்கு சில ஆயிரங்கள் ரூபாய் பேட்டா கிடைக்கும். அதுதான் அவர்களை இயக்குகிறது. இந்த அடிமைத்தனத்தை, திட்டுக்களை, சோகங்களை அனைத்தையும் சகித்துக் கொள்ள வைக்கிறது.

திரும்பிப் போன பிறகு மீண்டும் வாழ்க்கை துரத்த, வேறு அடுத்த ஷூட்டிங் தேடி ஓட வேண்டும். அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது இதே போல நாய் பிழைப்பு பிழைக்க வேண்டும்.

இத்தகைய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அவர்கள் கண்ணில் படாத போதையில் இருந்திருக்கிறார் ஜெயமோகன். அந்த போதை சினிமா போதை, கமல் போதை என்பதன்றி வேறென்ன?

அங்கங்களை இழந்த ஸ்டண்ட் கலைஞர்கள், தீரா நோய்களை வாங்கிய கலைஞர்கள். உழைப்பின் அழுத்தம் தாங்க முடியாமல் முடக்கு வாதம் வந்த உதவியாளர்கள், கால், கை உடல் உறுப்புகளை இழந்த சண்டைக் கலைஞர்கள், உயிரை இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் என 20-30 ஆண்டு காலம் உழைத்து 1000 ரூபாய் பென்சனுக்காக சங்கத்தில் வரிசையில் நிற்கும் அவலத்தை உருவாக்கிய தமிழ்  சினிமாவில் எதுடா கொண்டாட்டம்?

அல்லக்கைகள் போட்டோ

இதே சினிமாவில் கோடிகளில் சம்பளமும், இலட்சங்களில் தினசரி வசதிகளையும் பெறும் மேன்மக்களின் சிரிப்பை வைத்து முழு சினிமாவும் வெடிச்சிரிப்பு என்று வாய்பிளக்கிறார் ஜெயமோகன். அது ஆணவச் சிரிப்புடா என்று எப்படி உணர வைப்பது?

4 நாள் ஷூட்டிங்கில் கமலஹாசனோடு உட்கார்ந்ததோடு, அரங்கசாமி போன்ற லைஃப் டைம் அல்லக்கைகளை கூப்பிட்டு போட்டோ எடுக்க வைத்து அதை வெளியிட்டு மகிழும் அல்பங்களுக்கு கொண்டாட்டமும் கும்மாளமும் தெரிவதில் வியப்பில்லை.

தமிழ் சினிமாக்காரர்களுக்கு நல்ல சினிமாவும் தெரியுமாம். ஆனால், சராசரியான ரசனையை தொடுவதே அவர்களுடைய சவாலாம். ஏன்யா  உயர்ந்த ரசனை உள்ளவன் அதை சினிமாவுல காட்ட தெரியாம சராசரியா எடுக்குறானா அவனுக்கு எங்க ரசனையும், தரமும் இருக்கும்? சில நூறு சினிமாகாரர்களை விட 9 கோடி தமிழ் மக்கள் ரசனை அற்ற முட்டாள்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து படையல் போடுகிறார்களாம் என்று முட்டுக் கொடுக்கிறார் ஜெயமோகன்.

அதாவது உலகநாயகனெல்லாம் மிகவும் ரசனை, இலக்கிய நுண்ணுணர்வு உள்ளவர், அவர் போய் விசுவரூபம் போன்ற குப்பைகளை எடுக்கிறார் என்றால் மக்கள் எப்படி மோசமாக இருக்கிறார்கள் என்கிறார் ஜெயமோகன். அதனால்தான் அவர்கள் எடுக்கும் வணிக சினிமாவை அவர்களே கிண்டல் செய்து கொள்கிறார்களாம்.

உலக நாயகன் கமலஹாசன் ஆளவந்தான் படம் எடுத்து கலைப்புலி தாணுவை நோகடித்த கதை எல்லோருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மேக்அப் மேன் வரவழைத்தது, படப்பிடிப்பு காலம் முழுவதற்கு தாஜ் ஹோட்டலில் ரூம் போட்டது, அதுக்கு எக்ஸ்பர்ட், இதுக்கு இம்போர்ட் என்று அவரை ஓட்டாண்டியாக்கியது இவை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளை வாசகர்களே தேடிப் படித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். எனினும் தாணு போன்றவர்களே இப்படிப்பட்டவர்களை வைத்துத்தான் கோடிசுவர்களாக ஆனாவர்கள். ஆகவே இந்த உள்குத்து அவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை.

ஜெமோ - காஷ்மீர்

மேக் அப் கலைக்கறதுக்கு முகம் கழுவ பிஸ்லரி வாட்டர், குடிக்க இளநீர், ஆரஞ்சு ஜூஸ், சாப்பிட எண்ணெய் இல்லாம பொரிச்ச கிரில்ட் சிக்கன், தண்ணி அடிக்கிறதுன்னா மினிமம் 3 ஆயிரம் ரூபாய் பாட்டில், பாட்டிலே வெல்வெட் துணி சுத்தியிருக்கும். இந்த மாதிரி வாழ்க்கையில் இருப்பவனுங்க சராசரி சிந்தனையில் இருக்க மாட்டான் என்பது உண்மைதான். ரேசன் அரிசி சோறு சாப்பிட்டு விட்டு கட்டாந்தரையில் தூங்கிற மக்களைக் கொண்ட நாட்டில், உள்ளே போட்டிருக்கிற ஜட்டியிலிருந்து தலையில தடவுற எண்ணெய் வரைக்கும் இம்போர்டட்தான்.  இதத்தான் என்சாய் மச்சி தத்துவம் என்கிறார் ஜெயமோகன்!

ஜெயமோகன் பாபநாசம் படத்துக்கான மலிவான பிரமோசனாக இந்தப் பதிவை எழுதியிருக்கிறார். கவர் வாங்கிக் கொண்டு கவர் செய்யும் பத்திரிகையாளர்களை விட கேவலமான மொழியில் எழுதியிருக்கிறார். அவர்களாவது கமலஹாசனையும், நட்சத்திரங்களையும் வெளிப்படையாக புகழுவாங்க. இவரோ கமலஹாசனை புகழ்வது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பே கொண்டாட்டம் என்று காட்டுகிறார்.

இதுவே ஜெயமோகனது தகுதியை பதம் பார்க்கும் ஒரு சோறு. இதுதான் இவருடைய இலக்கிய ஆன்மா. 200-300 பேர் கொண்ட ஒரு சினிமா படப்பிடிப்பில் நடப்பதை கவனித்து அறிய முடியாத இந்த மனம்தான் இலக்கிய மனமாம், இந்திய ஆன்மாவை தரிசிக்கும் ஞானமரபின் இருப்பிடமாம். இதே தகுதியுடன்தான் காஷ்மீருக்கு சில நாட்கள் இன்பச் சுற்றுலா போய் விட்டு வந்து காஷ்மீரில் போராட்டமே இல்லை என்று அடித்து விட்டார்.

சினிமாத் துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சினிமாவின் மீது பெருங்காதல் இல்லை, அதன் மூலம் கிடைக்கும் பாட்டாவுக்காக (சம்பளத் தொகையின்) மட்டுமே அவர்கள் வாழ்கிறார்கள். அதற்காகத்தான் அவ்வளவு அசிங்கப்படுகிறார்கள். சுயமரியாதையை வம்படியாக அடித்து பிடுங்கும் தமிழ் சினிமாவில் கொண்டாட்டம் இருக்கிறது என்று சொல்பவன் ஹிட்லர் தூங்குவதற்கு இரவுக் கதை சொல்லும் தகுதி கொண்டவன்.

ஜெயமோகன் எழுதும் மகாபாராத நாவல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கலந்து கொள்கிறார். பதிலுக்கு கமல் படப்படிப்பு குறித்து ஜெயமோகன் எழுதுகிறார். பரஸ்பர மொய் விருந்து. இதற்கு மேல் கொண்டாட்டம், ரசனை, கும்மாளம் என்று எழுதினால் அது நிச்சயம் கவரேஜ் வகையினுள்ளே வருகிறது. விவரமிருப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

டீ பரிமாறுபவர் சார்பாக படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்று நாங்கள் சொல்லிட்டோம்.

–    சினிமா தொழிலாளி உதவியுடன் அப்துல்

நன்றி – வினவு இணையதளம் (www.vinavu.com)