ஒவ்வொரு மரத்துக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. கதைகள் இருக்கிறது. தான் உயிர்வாழும் நூறாண்டுகளில் தன்னைக் கடந்து போகிற ஒவ்வொரு நாளையும் அது மனதில் வைத்திருந்தால் எப்படியிருக்கும் ? அப்படி தன் நிழலின் கீழே நடந்த விஷயங்களை வைத்திருக்கும் ஒரு ஆல மரத்தின் கதை தான் ‘ஆலமரம்’ படத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குனராக அறிமுகமாகும் துரைசிங்.
திருவல்லிக்கேணியில் பாரதியாரின் வீட்டிற்கு இப்போது சென்றால் அங்குள்ள ஒரு மரத்தை எல்லோரும் தொட்டு வணங்குகிறார்கள். காரணம் அது பாரதியாரின் வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்த மரம் என்கிற நம்பிக்கை. தரையைத் தொடுகிற ஆலமரத்தின் விழுதுகள் போலவும் தரைக்குக் கீழே பரவி நிற்கும் அதன் வேர்கள் போலவும் ஆலமரத்தின் கீழே எண்ணற்ற பின்னிப் பரவிக் கிடக்கிற கதைகள் நடந்திருக்கும். அவற்றைப் பற்றியது இந்தப் படம் என்கிறார் துரைசிங்.
துரைசிங் பாக்யராஜின் உதவியாளராக இருந்தவர். அவருடைய இயக்கத்தில் பீகாக் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் குமார், அவந்திகா, மோகன், தவசி, சர்வேஸ் போன்ற புதுமுகங்கள் நடிக்க வளர்ந்து வருகிறது ஆலமரம்.