ஈழத்தைப் பற்றி சீரியஸாக படம் எடுப்பவர்களின் படங்களை சென்சார் மூலம் வேண்டுமென்றே வெட்டியும் இழுத்தடித்தும் கண்டமாக்கி காணாமல் போகச் செய்துவிடும் அரசு, சந்தோஷ் சிவனின் விஷமான ‘இனம்’ முதல் பாலச்சந்திரனை கொச்சைப் படுத்திய ‘புலிக்குட்டி’ வகையிலான உப்புமா படங்களை ரொம்ப
நடுநிலையாளர்கள் போல ரிலீஸ் செய்ய அனுமதிப்பதும் மக்களுக்கு எங்கே தெரிகிறது ?
தற்போது இயக்குனர் சுப.தமிழ்வாணன் தமிழகத்தில் இருக்கும் 144 இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில் வசிக்கும் ஈழ அகதிகளின் வாழ்க்கையை நேரில் ஆய்ந்து எடுக்க இருக்கும் படம் ‘ஆனந்த மழை’. ஜெய் ஆனந்த், மு.களஞ்சியம், சிங்கமுத்து, வடிவுக்கரசி போன்றோர் நடிக்கின்றனர்.
ஈழத்தில் இருந்து விரட்டப்பட்டு அகதிகளாக வரும் ஐந்து பேர் முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட அற்ற சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் படும் பல துயரங்களில் இருவர் இறந்துபோகின்றனர். எஞ்சிய மூவரும் தப்பித்து சென்னை வந்து ஒரு கவிஞரின் வீட்டில் அடைக்கலமாகின்றனர். அவர் மூலம் தமிழக அகதிமுகாம்களின் இழிந்த நிலையையும் அங்கு வாழ்பவர்கள் அடையும் துயரங்களையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். அவர்களின் முயற்சிகள் என்னவாகின ? என்பதுதான் கதை.
இவ்வளவு தெளிவாக அரசின் இரட்டை வேடத்தை தோலுரிக்க இருக்கும் இந்தப் படம் முதலில் சென்சாரிலிருந்து தப்புமா என்று சந்தேகம். அப்படியே தப்பினால் ஒன்று அது ஈழமக்களுக்கு எதிரான கருத்துக்களை விஷமாக கக்க வேண்டும் அல்லது நேர்மையான விஷயங்களைச் சொன்னாலும் தூர்தர்ஷன் சீரியல் போல மிக மட்டரகமான படைப்பாக, மக்களை எந்தவிதத்திலும் ஈர்த்துவிடாத படைப்பாக இருக்கவேண்டும்.
தமிழ்வாணன் தமிழ்நாட்டில் வாடும் ஈழ அகதிகளின் வாழ்வில் ‘ஆனந்த மழையை’த் தருவாரா என்று எதிர்பார்ப்போம்.
அது சரி. தமிழ்நாடே அம்மா கைதுன்னு பரபரன்னு பத்தி எரியும்போது நீ என்னய்யா ஆனந்த மழைன்னு ஏதோ நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையா ஏதோ நியூஸ் போடுறியேன்னு கேக்குறீங்களா?! ஜட்ஜ் குடுத்த தீர்ப்பு பெருமாள் குடுத்த தீர்ப்பு மாதிரி அதை யாராவது எதுத்துக் கேட்டா, பேஸ்புக்ல எழுதுனா அவ்வளவுதான்.. குண்டாஸ் சட்டம் பாயும்னு ஒரு எச்சரிக்கை எஸ்.எம்.எஸ் வந்திச்சுங்க அதான். (சு.சு அனுப்சிருப்பாரோ?)
இருந்தாலும் ஒன்னு சொல்றேன். அம்மாவை கைது பண்ணதை ஸ்ரீலங்காவுல சிங்களர்கள் எல்லாம் ‘ஸ்வீட் கொடு கொண்டாடு’ன்னு கொண்டாடினாங்களாம். இப்போ புரியுதா பெங்களூர் கோர்ட்டு யாருக்காக தீர்ப்பு சொல்லிருக்குன்னு?