தமிழ் நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்களும் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பின் பெயர் ‘தயாரிப்பாளர் கில்டு’ எனப்படும் தயாரிப்பாளர் குழுமம் ஆகும். தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் சொற்ப தொகையில் இதில் உறுப்பினர் ஆகிவிடலாம். ஆனால் தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர் சங்கத்தில் சேர வேண்டும் என்றால் உறுப்பினர் சந்தா தொகையே பல லட்சங்கள் ஆகும். இந்த கில்டு அமைப்புக்குதான் நேற்று பூட்டு போட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களான கலைக்கோட்டுதயம், ஜாகுவார் தங்கம், ஆதிராம் ஆகியோர். சமீபத்தில் இந்த சங்கத்திலிருந்து இவர்களை நீக்கியிருந்தார் கில்டு தலைவரான ஹேம்நாத் பாபுஜி. இதை தொடர்ந்துதான் இந்த அதிரடி.
இவர்களை ஏன் நீக்கினார் பாபுஜி? அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் தமிழர்கள். சங்கத்தின் சார்பாக வெளிவரும் செய்தி மடல் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் கேட்டது தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கான அந்த மடல் தமிழிலும் வரவேண்டும் என்பது. இந்தக் காரணத்துக்காகவும், சங்கத்தின் கூட்டங்களில் தமிழிலும் பேசவேண்டும் என்று இவர்கள் கேட்டதற்காகவும் இவர்களை நீக்க்கியதாக விலக்க அறிவிப்புக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் பாபுஜி.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் சங்கத்தில் தமிழில் பேசினால் தப்பா? என்று கொதித்த ஜாக்குவார் தங்கம், கலைக்கோட்டுதயம், ஆதிராம் ஆகிய மூவரும் நேற்றைய கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களை உள்ளே வரக்கூடாது என்று அவர்கள் தடுக்க மேலும் கொதித்துப் போன அவர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு கில்டு சங்கத்தை பூட்டு போட்டு பூட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.
இப்போது தான் கிளப்களில் வேட்டியணிந்து வந்ததை தடுத்தற்கு எதிர்ப்பு கிளம்பி அந்த உரிமையைப் பெற்றார்கள். இப்போது கில்டுக்குள் தமிழில் பேசவும் , தமிழில் இதழ் வெளியிடவும் போராட வேண்டியிருக்கிறது. கில்டு தமிழுக்கு இப்படி ஓரவஞ்சனை செய்வது ஏன் ?